உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

சென்னை, நுங்கம்பாக்கம் மத்திய அரசு அலுவலக வாசலின், பிளாட்பாரத்தில் இருந்த மர நிழலில், நண்பர் ஒருவரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். மணி, 11:00 இருக்கும்.அந்த அரசு அலுவலகத்தில் பணியாற்றுவது போன்ற தோற்றத்துடன் மூவர்... 45 வயதைத் தாண்டியவர்கள்... 10:30 மணிக்கு அலுவலகம் வந்து, கையெழுத்துப் போட்டு விட்டு, டீ குடிக்க ரோடுக்கு வந்து விட்டனர்; எவ்வளவு பொறுப்பு பாருங்கள்!மற்றவர்களுக்கு டிஸ்போசபிள் டம்ளரில் டீ கொடுத்த டீ மாஸ்டர், இவர்களுக்கு மட்டும், கப் அண்ட் சாசரில் டீ கொடுத்தார். இங்கேயுமா இரட்டை டம்ளர் முறை என நினைத்துக் கொண்டே, அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறிய காதை அவர்களிடம் கொடுத்து, பார்வையை வேறு பக்கம் வைத்துக் கொண்டேன்.அப்போது டைட் ஜீன்ஸ் போட்டு, ஷார்ட் டாப்ஸ் அணிந்து, 'கும்'மென நடந்து வந்து கொண்டிருந்தனர் மூன்று இளம் பெண்கள். இடுப்புப் பிரதேசம் தெரிந்தும், தெரியாமலும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது.இதைக்கண்ட, 'பெரிசு'கள் ஜொள் விட்டபடி, 'ஆஹா... பொண்ணுங்கன்னா இப்படித் தான் இருக்கணும்! என் சம்சாரமும் இருக்குதே, பீப்பாய் மாதிரி...' என்றார் ஒருவர்.'டேய் தென்றல்... (அவர்களில் ஒருவர் பெயர் போலும்!) அங்க பாருடா... இடுப்பு கொஞ்சம் தான் தெரியுது... இருந்தாலும் எவ்வளவு கவர்ச்சி பாரு... சுண்டி இழுக்குதே...' என்றார், மற்றவர்.'இது என்ன வினோதமோ, தெரியலே ரவி... (இதுவும் அவர்களில் ஒருவர் பெயராக இருக்க வேண்டும்!) நம்ம ஊர் லேடீஸ் சேலை கட்டி, ஒரு அடி உயரத்துக்கு இடுப்பைக் காட்டினாலும், 'கிக்' வரலே... இந்தப் பொண்ணுங்க தம்மாந்துாண்டு தான் அந்தப் பகுதியைக் காட்டுதுங்க... மயக்கமே வருதே...' இது இன்னொருவர்.இந்த கமென்டுகள் ஓடிக் கொண்டிருக்கும் போதே, மூன்று, 'போஷாக்'கான மகளிர்... 40 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள், கிராஸ் செய்தனர். அவர்களும் ஏதோ அலுவலகத்தில் பணியாற்றுவது போன்ற தோற்றத்தில் இருந்தனர்.அவர்களைக் கண்ட இந்த மூவரில் ஒருவர், 'குணா... (மூன்றாமவரின் பெயரும் தெரிந்து விட்டது!) நான் மட்டும் கவர்னரானேன்னு வச்சுக்க... இது மாதிரியான பொம்பளைங்க ரோட்டுல நடமாடக் கூடாதுன்னு சட்டம் போட்டு விடுவேன்...' என்றார்.'அது எப்படிடா... அவர்கள் கடை கண்ணின்னு எப்படிப் போவாங்க?''ரெண்டு அல்லது மூன்று தெருவை அவர்களுக்காக ஒதுக்கி விடுவேன்... அந்தத் தெருவைத் தாண்டி வந்தாங்கன்னா அரஸ்ட் தான்... இதுக்கு பயந்தாவது உடம்பைக் குறைக்க மாட்டாங்களா?' என, அவர் கூற, அந்த மூவர் அணி, ஏதோ பெரிய ஜோக் கேட்டதைப் போல விழுந்து, விழுந்து சிரித்தது!அடப்பாவிங்களா... ஆளுயரக் கண்ணாடியில உங்களை, நீங்களே பார்த்துக்கங்க... தொந்தியும், தொப்பை யுமாக யானை போல நீங்கள் இருப்பது தெரியும்... என எண்ணியபடியே இடத்தைக் காலி செய்தேன்; நண்பர் வரவில்லை; ஏனோ, 'ஜூட்' கொடுத்து விட்டார்!'செக்ஸ் எஜுகேஷன், வேண்டுமா... வேண்டாமா?' என, நம் நாட்டில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மும்பைப் போன்ற பெருநகரில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகளில் சில, பாலியல் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டன; இதற்கென கல்வி திட்டத்தை அவர்களே வகுத்துக் கொடுத்தும் விட்டனர்.இந்நிலையில் சேலம் வாசகி எழுதிய ஒரு கடிதமும், ஆங்கில இதழ் ஒன்றில் படித்த கட்டுரையையும் இங்கே தருகிறேன்...(வழக்கம்போல, உ.ஆ. உதவியுடன் படித்தது தான்!)'செக்ஸ் இக்னரன்ஸ் இஸ் டேஞ்சரஸ் டு சொசைட்டி... - செக்ஸ் குறித்து அறியாமல் இருப்பது சமுதாயத்திற்கு ஆபத்தானது...' என ஆரம்பித்து, அந்த வாசகி தொடர்கிறார்:...என்னுடைய, 'பர்சனல் லைப்' வைத்துத் தான் சொல்கிறேன்.சின்னப் பிள்ளையாய் இருக்கறப்ப அம்மாகிட்டே அடிக்கடி கேட்பேன், 'அம்மா எப்படிம்மா குழந்தை பிறக்கிறது?' என்று. பருவம் அடைந்த இரண்டும் கெட்டான் வயதில், 'அம்மா, எப்படிம்மா 'மென்சஸ்' ஆகிறோம்?' என்று! அம்மாவுக்கு, 'எக்ஸ்பிளைன்' பண்ணத் தெரியாது. (நாட் வெல் எஜுகேட்டட்) புதிராகவே இருந்த கேள்விக்கெல்லாம் ஹையர் செகண்ட்ரி சயின்ஸ் குரூப் சேர்ந்தப்புறம் கொஞ்சம் ஆன்சர் கிடைத்தது.அதை, 'அடிப்படையா' வெச்சு நிறைய, 'புக்ஸ்' படிச்சு, 'கிளாரிட்டி' ஏற்படுத்திக்கிட்டேன். 'ஏம்மா நீங்க, 'பேமிலி லைப்பை' முன்னமே பிளான் பண்ணலே? பெரிய குடும்பமா இப்போ இருப்பதால், எல்லாத்துக்குமே எவ்வளவு போராட வேண்டியிருக்கு?' என்று கேட்டபோது, அவங்க ஆற்றாமை உணர்வோடு சொன்னதை வெச்சு புரிந்தது இது தான்...அவங்களோட, மேரேஜ் லைப் ஸ்டாட்ர்ட்டிங்கிலே, 'ஆண் - பெண் இணைவது தப்பு, அசிங்கம், ஏதோ கணவன் ஆசைக்காக இப்படி நடக்க வேண்டியுள்ளது. ஆனால், குழந்தை கடவுளாகக் கொடுக்கறது, எத்தனை குழந்தைங்க கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்...' என்று நினைத்து இருக்கின்றனர். ஏதோ தப்பு செய்கிறோம் என்ற குற்ற உணர்வினாலே, 'போபியா'வாலே கூட, 'சபர்' ஆகி இருக்காங்க.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, எத்தனை குடும்பத்திலே இந்த மாதிரி இருந்ததோ... இருக்கிறதோ... இந்த அறியாமை கீழ் மட்டத்தில் இப்பவும் இருக்கு. இது, 'சொசைட்டி'யை பாதிக்காதா? ரிசல்ட்: ஓவர் பாப்புலேஷன். இதிலிருந்து ஒன்று புரிகிறது... ஆரோக்கியமான, 'செக்ஸ்' கல்வி அவசியம். அதுவும், 'அடோலசன்ட் ஸ்டேஜில்.' அப்போ தானே அவங்க கவனம் அந்த பக்கம் திரும்புது.எல்லா பெண்களுக்குமே மன்திலி பியூ டேஸ் செக்சுவல் டிசையர் இருக்கும்; அது நேச்சுரல். ஆனால், இப்பெல்லாம் ஹாஸ்டல் போன்ற இடங்களில் தங்கி இருக்கும் லேடீஸ், 50 சதவீதம் விகாரமான புக்ஸ் படிச்சு, பிசிக்கல் அண்ட் மென்டல் ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக் கொள்கின்றனர்.- என்று தன் ஆதங்கத்தை எழுதி இருக்கிறார்.ஆங்கில இதழ் ஒன்றில், 'ஆராய்ச்சிக் கட்டுரை' ஒன்று, 'செக்ஸ் எஜுகேஷன்' தேவையா, இல்லையா என்பது குறித்து வெளியிட்டுள்ளனர். அக்கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:பள்ளிகள், கல்லுாரிகளில் பாலியல் கல்வி தேவையா... இல்லையா? மாணவர்களிடமும், பிரின்சிபால்களிடமும் கேட்ட போது...'வேண்டவே வேண்டாம்' என, 8 சதவீத மாணவர்களும், 4 சதவீத பிரின்சிபால்களும் கூற, 'கண்டிப்பாக வேண்டும்' என, 57 சதவீத மாணவர்களும், 53 சதவீதம் பிரின்சிபால்களும் கூறி உள்ளனர்.'வேண்டுமா... வேண்டாமா? எனத் தெரியவில்லை!' என, 3 சதவீத மாணவர்களும், 2 சதவீத பிரின்சிபால்களும் கூறி உள்ளனர்.சரி... 'செக்ஸ்' பற்றி யாரிடமிருந்து குழந்தைகள் அறிந்து கொள்கின்றனர்?அந்த, 'சர்வே' கூறுகிறது... 65 சதம் நண்பர், நண்பிகளிடமிருந்து... பெற்றோர் கற்றுக் கொடுப்பது, 25 சதவீதம் தான்!'செக்ஸ் எஜுகேஷன்' யாருடைய பொறுப்பு என பிரின்சிபால்களிடம் கேட்ட போது, 'கல்வி முறையின் மூலம்' எனப் பொரும்பாலானோரும், 'பெற்றோர் மூலம்' என அடுத்தும், 'தாங்களே தெரிந்து கொள்ள வேண்டும்' என மிகக் குறைந்தோரும் கூறி உள்ளனர்.கண்ட, கண்ட மூன்றாம் தர, ஆபாச புத்தகங்களைப் படித்தும், 'துண்டு' படங்களை தியேட்டரிலும், திருட்டுத்தனமாக, 'ப்ளூ'க்களை இன்டர்நெட் மூலமும் பார்த்து, இளைய சமுதாயம் சீரழிந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டுமானால், ஆரோக்கியமான, 'செக்ஸ் எஜுகேஷன்' பள்ளிகளில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.இதற்கான முயற்சியில் மத்திய கல்வி இலாகா ஈடுபட்டு, நாடு முழுவதும் இக்கல்வி திட்டத்தை கண்டிப்பாகக் கொண்டு வரவேண்டும்.என்ன... நான் சொல்வது சரி தானே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !