அந்துமணி பா.கே.ப.,
அன்று, பொள்ளாச்சியிலிருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார். வெங்காய மொத்த வியாபாரியான, இவர், 'டாஸ்மாக்' வருமுன் ஐந்தாறு கடைகளில் பங்குதாரர்... இரண்டு கடைகளுக்கும், லாட்ஜ் ஒன்றிற்கும் உரிமையாளர்!'பீச் கிளப் மெம்பர்கள் எல்லாம் வர்ற வெள்ளி கிளம்பி பொள்ளாச்சி வந்துடுங்க... சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், 'டாப் சிலிப்' போய், 'என்ஜாய்' செய்துட்டு வரலாம்... டிரிப்பை நானே, 'ஸ்பான்ஸர்' செய்துடுறேன்...' எனக் கூறவும், யார் யார் போவது போன்ற பேச்சுக்களில் சபை மூழ்க, நானும், நீண்ட நாட்களுக்குப் பின், என்னைக் காண வந்திருந்த வங்கி அதிகாரியான நண்பர் ஒருவரும் மெதுவாக, கூட்டத்தில் இருந்து கழன்று, நடை பயில ஆரம்பித்தோம்.'கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டி விட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்!' என, பாரதிதாசன் பாடிச் சென்றதை, இந்தக் காலத்தில் பாட வேண்டுமென்றால், காதலியர் என்பதை, 'காதலர்' என்றும், 'குமரர்க்கு' என்பதை, 'குமரிக்கு' என்றும் மாற்றி பாட வேண்டி வரும் போலுள்ளது மணி...' என்றார், நண்பர். 'என்ன விஷயம்... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே...' என்றேன்.'இது, ஏ.டி.எம்., பற்றிய சமாசாரம்...' என்று கூறி, தொடர்ந்தார் நண்பர்...'நான்கு நாட்களுக்கு முன், எங்க பேங்க்குக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், 'காச்மூச்'ன்னு கத்தி, 'என் அக்கவுன்டில் நேத்து சாயங்காலம் மணி, 6:38க்கு, ஐயாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருக்கு; நான் எடுக்கவே இல்லை...' என்றார்.'இதை, பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த வங்கி மேலாளர், 'சார்... உங்க வீட்ல வேற யாரும் வந்து எடுத்திருக்கலாமில்லயா?' என்று சொல்லவும், வந்திருந்த வாடிக்கையாளருக்கு ரத்த கொதிப்பு அதிகமாகி, கை, கால்கள் நடுங்க, உரத்த குரலில், 'அது எப்படி சார் முடியும்... கடன் அட்டைய எப்போதுமே என் சட்டைப் பையில் தானே வைத்திருப்பேன்... அதுவும் போக, என்னுடைய ரகசிய குறியீட்டு எண், என் வீட்டில் யாருக்குமே தெரியாது. உங்க வங்கியில் ஏதோ, 'கோல்மால்' நடக்கிறது... ரிசர்வ் வங்கியின், 'ஓம்புட்ஸ்மேனு'க்கு (குறை தீர்க்கும் மையம்) போகப் போறேன்... உங்கள உண்டு, இல்லன்னு பண்ணி விடுகிறேன்...' என, கத்தித் தீர்த்தார்.'உடனே, வங்கி மேலாளர், 'அவசரப்படாதீங்க சார்... நேற்று, நீங்க குறிப்பிடும் நேரத்தில், யார் யார் வந்து போயிருக்காங்ககிறத அங்க வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராவுல பதிவு ஆகி இருக்கும்; அதைப் போட்டு காட்டுறோம்... அதில, உங்க குடும்பத்தவர் அல்லது தெரிந்தவர் யாரேனும் இருக்கிறாங்களான்னு பார்த்து சொல்லுங்க...' என கூறி, கம்ப்யூட்டர் திரையில் கேமரா பதிவை போட்டுக் காட்டினார்.'வங்கியின் மீது பழி சுமத்தி, 'ஓ'வென்று கத்திய வாடிக்கையாளர், படத்தை பார்த்ததும் ஸ்தம்பித்து நின்று விட்டார். காரணம், அவரது மகள், அக்குறிப்பிட்ட நேரத்தில், ஏ.டி.எம்.,மிற்கு வந்து பணத்தை எடுத்திருப்பது ரகசிய கேமரா பதிவில் தெரிந்தது.'உடனே, வங்கி மேலாளர் காலில் விழாக் குறையாக மன்னிப்பு கேட்டுச் சென்றார், வாடிக்கையாளர். பின், எங்களது ரகசிய விசாரணைக்கு பின், அந்த வாடிக்கையாளர் மகளுக்கு, ஒரு காதலன் இருப்பதும், அவனது பணத் தேவையை பூர்த்தி செய்ய, இவள் இப்படி நடந்து கொண்டதும் தெரிய வந்தது. அதனால்தான், பாரதிதாசனின் பாடலை மாற்றி எழுத வேண்டிய காலம் வந்து விட்டது என்றேன்...' எனக் கூறி முடித்தார்.நண்பர் கதை சொல்லிக் கொண்டிருந்தபோதே, எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டிருந்தார், இன்னொரு நண்பர்...'இதே மாதிரி ஒரு சமாசாரம்பா... பெரும் பணக்காரர் ஒருவர் வீட்டில், கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள் திருடு போயிருச்சு. அவருக்கு ரெண்டு மகள்கள்; ஒரு மகன். எல்லாருமே தங்கமானவங்க. அந்த மாளிகையினுள் திருடர்கள் நுழையவே முடியாதபடி, பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறது.'வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸ் அதிகாரிக்கு, ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை. திருட்டு கொடுத்த பெரிய மனிதர், அரசியல் செல்வாக்குமிக்கவர். அரசியல்வாதிகள் மூலம் அவர், உயர் போலீஸ் அதிகாரிகளை நெருக்கவே, வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் தத்தளித்தார்.'மீண்டும் ஒருமுறை அந்த மாளிகையில் சோதனையிட்டிருக்கிறார், இன்ஸ்பெக்டர். வீட்டின் பின்புறம் கிளைகளே இல்லாதபடி ஓங்கி உயர்ந்து வளர்ந்து இருந்தது, ஒரு மாமரம். வீட்டு வேலைக்காரர்களிடம், 'இதிலிருந்து எப்படி பழம் பறிப்பீர்கள் எனக் கேட்ட போது, மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து துரட்டிப் போட்டுத் தான் பறிப்போம்...' எனக் கூறி இருக்கின்றனர்.'நம்பிக்கை இழந்து, பங்களாவின் வெளியே இன்ஸ்பெக்டர் வரும் போது, பெரிய மனிதரின் மகன் நின்றிருந்தார். அவரிடமும் மாமரம் பற்றிய கேள்வியை கேட்க, அவரும் அதே பதிலை தந்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் ஏமாற்றத்தோடு ஓர் அடி எடுத்து வைக்க, அந்த இளைஞன், 'சார்... ஆறு மாசத்துக்கு முன், இங்க ஒருத்தன் வேலை பார்த்தான்; குடிகாரன். வேலைய விட்டுட்டு போயிட்டான்; அவன் ஒருத்தன் தான் அந்த மரத்தில் ஏறக் கூடியவன்...' எனக் கூறவும், 'அவன் முகவரி தெரியுமா?' எனக் கேட்க, 'தெரியாது... ஆனா, அவனுடைய சித்தப்பா ஒருத்தர், சென்னை, ஜாம்பஜாரில் மளிகைக் கடை வைச்சிருக்காரு...' எனக் கூறியிருக்கிறார்.'ஜாம்பஜார் முழுக்க, ஜல்லடை போட்டு, ரெண்டு நாளாக தேடி, அவனின் சித்தப்பா கடையை கண்டுபிடித்திருக்கின்றனர், போலீசார். அவர் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி, 'சூளையில ராமலிங்கம்ன்னு ஒரு ஆட்டோ டிரைவர் அவனோட நண்பன்; அவனைக் கேட்டால், விபரம் தெரியும்...' என்றிருக்கிறார்.'அந்த ஆட்டோ டிரைவரையும் கண்டு பிடித்திருக்கின்றனர்; அவனிடம் விசாரித்த போது நகை திருடு போனதற்கு மறுதினம், சிறு மூட்டை ஒன்றுடன், அந்த வேலைக்காரன் அங்கு வந்து சென்ற தகவல் கிடைத்திருக்கிறது.'ஒரு கான்ஸ்டபிளுடன் பரமக்குடி போய் இறங்கி, வேலைக்காரனின் வீடிருந்த கிராமத்திற்கு சென்று, அவனது பெற்றோரிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்த போது, தங்கள் மகன் சமீபத்தில் இங்கே வந்து செல்லவில்லை எனவும், எப்போதாவது தான் வருவானென்றும் கூறியிருக்கின்றனர். இதனிடையே, தெருவில், விளையாடிக் கொண்டிருந்த வேலைக்காரனின் தம்பிக்கு, கை நிறைய சாக்லெட்டுகளை கொடுத்து விசாரித்திருக்கின்றனர், போலீசார்.'அவன் சற்று யோசித்து, 'எங்கோ, ஒரு சர்க்கரை ஆலையின் பக்கம் டீ கடை வைக்க போறதாக சொல்லிச்சு...' என கூறி, பறந்து விட்டானாம். பரமக்குடியை சுற்றி மூன்று சர்க்கரை ஆலைகள்; அங்கெல்லாம் யாருமே புதிதாக டீ கடை போடவில்லை.'சோர்ந்து போன இன்ஸ்பெக்டர், சென்னை திரும்பி விட எண்ணி, இரவாகி விட்டதால் திருச்சியில் தங்க முடிவெடுத்து, உணவை முடிக்க, ஓட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார். அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நான்கு பேரின் பேச்சில், பேட்டை வாய்த்தலை என்ற ஊரின் பெயரும், அங்கிருக்கும் சர்க்கரை ஆலை பற்றியும் பேச்சு அடிபடவே, இன்ஸ்பெக்டர், தோசையை வாயில் திணித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிளை நோக்க, அவரும் பலமாக தலையாட்டி இருக்கிறார்.'மறுநாள் கடையை கண்டுபிடித்து விட்டனர்; டீ தண்ணி போட, பாய்லர் வாங்க, திருச்சி சென்றிருந்த நகை திருடிய வேலைக்காரன், பஸ்சில் வந்து இறங்கும் போது, 'லபக்'கென பிடித்துக் கொண்டனராம்.'உண்மையை ஒப்புக் கொண்ட வேலைக்காரன், தன் வீட்டு சமையலறையில் புதைத்து வைத்திருந்த நகைகளை எடுத்துக் கொடுத்து, ஓர் உண்மையை சொல்லி இருக்கிறான்... அந்த பெரிய மனிதருடைய மூத்த மகளும், வேலைக்காரனும் காதலித்தனராம். இரவு நேரத்தில், அந்த உயர்ந்த மாமரத்தில் ஏறி மொட்டை மாடியில் இறங்குவானாம்; மொட்டை மாடி கதவை, அந்த பெண் திறந்து விட, இரவு முழுக்க சந்தோஷமாக இருப்பார்களாம். விடிகாலையில், மீண்டும் மரத்தின் வழியே இறங்கி விடுவானாம்; இந்நிலையில், அவன் வேலையை விட்டு நின்று விட்டாலும், இரவு போக்குவரத்து மட்டும் தொடர்ந்திருக்கிறது.'இந்த நேரத்தில், அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர், வீட்டினர். அவள், 'என் வீட்ல இருக்கிற நகையை எடுத்து தர்றேன்; கொண்டு போயிடு. மறுநாள் நான் ஓடி வந்துடுறேன்; நாம எங்கயாவது போயி கல்யாணம் செஞ்சுக்கலாம்...' என்றிருக்கிறாள்.'அதனால் தான் நான் நகையை எடுத்துக்கிட்டு போனேன்; நானாக திருடல...' என்றிருக்கிறான்.'அடுத்த நாள், நகை திருட்டு பிரச்னை பெரிதானதால், அப்பெண்ணால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அதனால், நகைகளுடன் கம்பி நீட்டி விட்டான். அந்த பெரிய மனிதரை வரவழைத்து, அதிகாரிகள் முன்னிலையில் விஷயத்தை சொன்னதும், துடிதுடித்து விட்டாராம். குடும்ப மானம் கருதி, விஷயம் அப்படியே அமுக்கப்பட்டதாம். அதனால், வங்கி நண்பர் சொன்னது போல, பாரதிதாசன் பாடலை, இக்காலத்துக்கு ஏற்றது போல மாற்றித்தான் எழுத வேண்டும் போல...'இந்த விஷயத்தை உளவுத்துறையில் மிகப் பெரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற, வே.ராமநாதன் என்ற அதிகாரியின், 'மாண்புமிகு உளவுத்துறை' என்ற புத்தகத்தில் விவரித்திருக்கிறார்...' என்று முடித்தார்.விஷயத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணாச்சி, 'இந்த காலத்தில் பெண்ணை வளர்த்து கட்டிக் கொடுக்கிறதுக்குள்ள பெரும்பாடு ஆகி விடுகிறது...' என்று சொல்ல, எல்லாரும் தலையாட்டினர்.