உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பஇந்த வாரம், குட்டிக் குட்டி தகவல்கள் மட்டும் தான்!எதை வெற்றி என்று கருதலாம்...வெற்றி என்பது, ஆளாளுக்கு மாறுபடும். சிலருக்கு, நிறைய பணம் சேர்த்தால் வெற்றி; சிலருக்கு, பதவி; மேலும் சிலருக்கு, படிப்பு என, பட்டியல் நீண்டுகொண்டே போகும். அடுத்து வரும் பட்டியலை பாருங்கள். இதைக் கூட, வெற்றி என்று கொள்ளலாம்.* இரண்டு வயதில், நடை வண்டி இல்லாமல் தனியாக நடக்க முடிந்தால், வெற்றி* எட்டு வயதில், தனியாக வெளியே சென்று, வழி தவறாமல் வீடு திரும்பினால்* 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால்* 18 வயதில், எதிர்கால லட்சியத்தை தேர்ந்தெடுக்க முடிந்தால்* 22 வயதில், பட்டதாரியானால்* 25 வயதில், நல்ல வேலை கிடைத்தால்* 30 வயதில், தனக்கென குடும்பம் அமைந்து விட்டால்* 35 வயதில், நிலையான வருமானத்திற்கு வழி பிறந்தால்* 45 வயதில், இளமை தோற்றம் கொண்டிருந்தால்* 50 வயதில், குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடிந்தால்* 55 வயதில், உடல் உபாதைகளுக்கு ஆளாகாமல், தொடர்ந்து கடமைகளை செய்தால்* 60 வயதில், உறவினர்கள் அனைவராலும் விரும்பப்பட்டால்* 65 வயதில், நோயில்லாமல், சுறுசுறுப்பாக இயங்க முடிந்தால்* 70 வயதில், பிறருக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக வாழ முடிந்தால்* 75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால்* 80 வயதில், ஊன்றுகோல் இல்லாமல், தனியாக நடக்க முடிந்தால்...- இவை அனைத்துமே வெற்றி தான்!டில்லியை ஆண்ட, அக்பர் பாதுஷா, மனைவி பேகத்துடன், யமுனை நதிக்கரையில் உலாவ சென்றார். அவருடன் மனம் விட்டு பேசியபடியே வந்தார். துள்ளி ஓடும் யமுனை நதியை பார்த்து, மெல்லிய புன்முறுவலை படரவிட்டபடியே, மனைவியின் முகத்தை நோக்கினார்.'அன்பே... உன் எழிலை பார்த்து வெட்கப்பட்டு, யமுனா வேகமாக ஓடுகிறாள், பார்த்தாயா... உனக்கு எப்படி தெரிகிறது, சொல்லேன்...' என்றார்.'பிரபோ... எனக்கென்னவோ, யமுனா அழுவதை போல் தோன்றுகிறது...' என்றார்.'உனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது...' என கேட்டார், அக்பர்.'அது என்னமோ தெரியவில்லை. காரணம் என்னவென்று சொல்ல தெரியவில்லை...' என்றார், பேகம்.'சரி... நேரமாகி விட்டது, வா... புறப்படுவோம்...' என கூறி, புறப்பட்டார்.மறுநாள், அரசவையில் இதுபற்றி கூறி, 'யமுனை ஏன் அழுகிறாள் என, யாராவது சொல்ல முடியுமா...' என்றார்.அக்பர் அரசவையிலிருந்த மதி மந்திரியான, பீர்பால் எழுந்து, 'மன்னா... யமுனையின் பிறந்த வீடு, இமயமலை; புகுந்த வீடு, வங்க கடல். பிறந்த இடத்தை விட்டு, புதிய இடமான தன் புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்று எண்ணியே, அவள் அழுகிறாள்.'ஆனாலும், தன் புகுந்த வீட்டுக்கு போகும் பாதையில் உள்ள இடங்கள் வளப்படுத்தப் போவதை நினைத்து, அவள் ஆனந்த கண்ணீர் விடுகிறாளோ என, நான் எண்ணுகிறேன்...' என்றார்.'சபாஷ், பீர்பால்...' என, பாராட்டி மகிழ்ந்தார், மன்னர். மற்றவர்களும், 'இதுதான், பீர்பால்...' என்று கூறி, மகிழ்ந்தனர்.'ஹாலிவுட்'டை சேர்ந்த பட தயாரிப்பாளரான, ஜெ.ஆர்தர் ரேங்க் என்பவர், தனக்கு ஏற்படும் கவலைகளை கையாள்வதற்கு, ஒரு நுாதன முறையை கையாண்டார்.ஒவ்வொரு வாரமும், புதன் கிழமையை, 'கவலைக்குரிய நாள்...' என்று ஒதுக்கி வைப்பார். இதர நாட்களில், எதாவது கவலை ஏற்பட்டாலும், ஒரு தாளில், 'புதன் கிழமை கவனிக்கப்படும்...' என்று எழுதி, ஒரு பெட்டியில் போட்டு விடுவார். அதன் பின், புதன் கிழமை அந்த பெட்டியை திறந்து பார்க்கும்போது, எழுதபட்டதில் பல வேலைகள் இடையிலேயே சரியாகி இருக்கும்; சிலவற்றை களைவதற்கான வழிகளும் கிடைத்திருக்கும். மீதி இருக்கும் கவலைகளை, 'அடுத்த புதன் கிழமை கவனிக்கப்படும்...' என்று எழுதி போட்டு விட்டு, தன் பணியை கவனிக்க ஆரம்பித்து விடுவார்.சில பிரச்னைகளுக்கு, காலம் தான் பதிலாக அமையும். எல்லாமே மாறிக் கொண்டிருப்பது தான், உலகின் இயல்பு. நிலையாமை குறித்து புரிந்து கொண்டால், கவலை நிரந்தரமானதில்லை என்பது தெளிவாகும்.ஆங்கில எழுத்தாளரான, செஸ்டர்டெனுக்கு, நாடக மேதையான, பெர்னாட்ஷாவை மட்டம் தட்டுவதே வேலை. ஒரு சமயம், பெர்னாட்ஷா மெலிந்திருப்பதை கண்டு, 'யாராவது, உம்மை கண்டால், இங்கிலாந்தில் பஞ்சம் வந்து விட்டதாக நினைப்பர்...' என்றார்.இதை சொன்ன, செஸ்டர்டென் கனமான உடல் கொண்டவர்.உடனே, 'இங்கிலாந்தில் பஞ்சம் வந்தது ஏன் என்று, உம்மை பார்த்தால் தெரியும்...' என்று, ஒரு போடு போட்டார், பெர்னாட்ஷா.அதேபோல், வேறு ஒரு சமயம், ஷாவிடம், 'ரொம்ப கஷ்டப்பட்டு தாடி வளர்க்கிறீர்களே ஏன்...' என்றார், ஒரு நிருபர்.'நான் ஒன்றும் வளர்க்கவில்லை. அது, தானாகவே வளர்கிறது...' என்றார், ஷா.விடாப்பிடியாக, 'தாடி வைப்பதால் என்ன லாபம் உங்களுக்கு...' என்றார், நிருபர்.'லாபம் உண்டே... 'ஷேவ்' செய்வதற்கு செலவிடும் நேரத்தில், ஒரு நாடகம் எழுதி முடித்து விடுவேன்...' என்றார், ஷா.வம்பிழுத்த நிருபர், வாய்மூடி மவுனியானார்.வாரியார் சுவாமிகள், சொற்பொழிவாற்றும் போது, இடையிடையே சில கேள்விகள் கேட்டு, சரியான பதில் கூறுபவர்களுக்கு, புத்தகங்களை பரிசாக கொடுப்பது வழக்கம்.ஒரு சமயம், சிறுவர்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கியவர், 'முருகப் பெருமானின் தந்தை பெயர் என்ன...' என்று கேட்டார். ஒரு சிறுவன் எழுந்து, 'சிவாஜி...' என்று கூறினான்.திருவிளையாடல் திரைப்படம் வந்த புதிது என்பதால், அச்சிறுவனின் மனதில் சிவபெருமான் வேடமேற்று நடித்த, சிவாஜிகணேசன் ஆழப் பதிந்திருந்தார் போலும். சிறுவனின் பதிலை கேட்டு, மக்கள் சிரித்தனர். உடனே, மக்களை பார்த்து, 'ஏன் சிரிக்கிறீர்கள்... அச்சிறுவன் சரியாகதானே கூறியுள்ளான். காந்தியை மரியாதையாக, 'காந்திஜி' என்றும், நேருவை, 'நேருஜி' என்றும் அழைப்பது போல், சிவபெருமானை, மரியாதையுடன், 'சிவாஜி' என கூறியுள்ளான்...' என்றதும், எழுந்த கை தட்டலில், அரங்கமே அதிர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !