அந்துமணி பா.கே.ப.,
பா-கேஅது -பிப்ரவரி, 14ம் தேதி!காலை, 10:00 மணி இருக்கும்... 'டெலிபோன் ஆபரேட்டரிடம்' இருந்து, 'இன்டர்காம்' அழைப்பு...'சொல்லுங்கம்மா...' என்றேன்!'உங்களுக்கு, ஒரு அழைப்பு... 'பிராண்டி' சேகர் பேசுகிறார்... 'கனெக்ட்' பண்ணட்டுமா?' என்றார்!'ஓ...' என்றேன்!'ஏய், அந்துமணி... அது என்ன, 'பிராண்டி' சேகர்...' என, நீங்கள் கேட்பது, என் காதில் விழுகிறது.நமது வங்கிகளிலிருந்து, 9,000 கோடி ரூபாயை, 'அடித்து' விட்டு, இங்கிலாந்தில் அடைக்கலமாகி இருக்கிறாரே, ஒரு, 'பெரிய' மனிதர், அவரது நிறுவனத்தில், பெரிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர்; ஓடிப்போனவர், உ.பா.,வான, 'பிராந்தி' தயாரிப்பவர்.சேகர் என்ற பெயரில் நிறைய நண்பர்கள் இருப்பதால், அவரவர் பெயருக்கு முன், ஒரு அடைமொழி பெயர் வைத்து அழைப்பது, எங்கள் வழக்கம்!அதுவே, இவரை, 'பிராண்டி' சேகராக மாற்றி இருந்தது.'ஹலோ' என்ற உடன், 'இனிய, மகிழ்ச்சியான காலை வணக்கம்...' என்றேன்.அவரும் அதைக் கூறினார்.'ஏய், மணி... இன்று என்ன தேதி தெரியுமா... பிப்., 14, 'காதலர் தினம்!' மதியம், 1:30 மணிக்கு, '10 டி' வந்து விடுகிறாயா? கொஞ்சம் ஜாலியாக இருந்து விட்டு வரலாம்... நண்பர்கள் ஏழெட்டு பேரை வரச்சொல்லி இருக்கிறேன்.நீயும் வந்து விடுகிறாயா...' எனக் கேட்டார்.அந்த ஓட்டல், உ.பா.,விற்கானது! இளம் பெண்கள் அங்கு வந்து, உ.பா., அருந்துவது வழக்கம். மனதில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், நண்பர் அழைக்கிறாரே என்ற ஆனந்தத்தில், லென்ஸ் மாமாவையும் அழைத்தேன்.சேகரிடம், லென்ஸ் மாமா வருகிறார் எனக் கூறினேன். 'கூட்டி வா...' என்றார்; அவரது குரலில் உற்சாகம் தெரிந்தது. மதியம், 1:30 மணி அளவில், '10 டி'யை அடைந்தோம். சிவப்பு நிற ரோஜா பூக்களுடன் வரவேற்பு காத்திருக்கும் என்ற நினைப்பில் வந்த, லென்ஸ் மாமாவிற்கு, ஒரே அதிர்ச்சி!அங்கே, சேகரது வழக்கமான மேஜையில், ஏழு ஆண்கள் உட்கார்ந்து இருந்தனர்.சேகரிடம், 'என்னய்யா... ஒரே கிழவன்களாக உட்கார்த்தி வச்சிருக்க...' என, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், லென்ஸ் மாமா.'உட்காருங்க மாமா... கொஞ்ச நேரம் போகட்டும்; நிறைய இளம் பெண்கள் வருவர்... உங்களுக்கு ஒரு சிவப்பு ரோஜா கண்டிப்பாக கிடைக்கும்...' என, சமாதானப்படுத்தினார், சேகர்.உடனே, அங்கு வந்த, சச்சின் என்ற பெயருடைய, 'சர்வர்' ஒவ்வொருவரும் எந்தெந்த, உ.பா.,வை விரும்புவர் என்பதை நன்கு தெரிந்தவர். அதன்படி எடுத்து வந்து, யார் யாருக்கு சோடா கலக்க வேண்டும், பச்சைத் தண்ணீர் சேர்க்க வேண்டும், 'ரா'வான சரக்கில், 'ஐஸ்' கட்டிகள் போட வேண்டும் என்று அறிந்து, அவற்றை எல்லாம் சரியாக போட்டு கொடுத்தார்.பேச்சு, பல திசைகளில் சென்று கொண்டிருந்தது. அவரவர், 5 - 6 'ரவுண்டு'கள் முடித்திருந்தனர்.சுற்றும்முற்றும் பார்த்த, லென்ஸ் மாமா, 'என்னப்பா சேகர்... ஒரே கிழவி மயமா இருக்கிறது...' என, நொந்து கொண்டார்.அருகில் நின்றிருந்த சச்சின், 'சார்... எல்லாம், இரவு, 7:00 மணிக்கு மேல் தான் வருவர்... அப்போது, உங்களுக்கு சிவப்பு ரோஜா கிடைக்கலாம்...' என்றபடி சென்றார்.அலுத்துக் கொண்ட, லென்ஸ் மாமா, 'நான் வேலைக்கு போகிறேன்...' என்றபடியே எழுந்தார்.மற்றவர்களும் எழ, 'செக் - அவுட்' (பில்) கொண்டு வரச் சொன்னார், சேகர்.'ம்... இன்று, 8,800 ரூபாய் வேஸ்டப்பா...' என்றபடியே தம், 'கிரெடிட் கார்டை' கொடுத்தார்.'இன்று மதியம் முழுவதும் வேஸ்டப்பா...' என்று அலுத்தபடியேஅலுவலகம் திரும்பினார், லென்ஸ் மாமா; நானும் தான்; ஆனால், அலுப்பில்லாமல்!இந்த ஆண்டு, 'லவ்வர்ஸ் டே' கொண்டாட்டம், இப்படி போனது!பஒரு வீட்டு முன் நின்று, 'அம்மா... தாயே... சோறு போடுங்க...' என்றான், பிச்சைக்காரன்.சோறு மட்டுமின்றி, சாம்பாரும் கொடுத்துவிட்டு, அந்தம்மாள் வீட்டுக்குள் நுழைய போனார். 'அம்மா... கொஞ்சம் நில்லுங்க... ஒரு சேதி இருக்கு...' என்றான்.'என்ன சேதி...''வேறொண்ணும் இல்லைம்மா... நேத்து, நீங்க போட்ட பிரிஞ்சி சாதத்திலே, உப்பு ரொம்ப கம்மி; சாம்பாரிலே, உப்பு கொஞ்சம் துாக்கல்; பொரியலை, வாயிலே வைக்கவே முடியலை. கொஞ்சம் பார்த்து சமைங்க...' என்றான்.அந்தம்மாவுக்கு கோபம் வந்து, 'ஏம்பா, கல்யாணமான, 20 வருஷத்தில, என் புருஷனே, எதுவும் சொன்னதில்லை. உனக்கெதுக்கு வாய்க் கொழுப்பு...' என்றார்.உடனே, 'இதை, நானா சொல்லலைம்மா... உங்க வீட்டுக்காரர் தான், 'நீயாவது கேளுடா'ன்னார். அதனால தான் கேட்டேன்...' என்றான், பிச்சைக்காரன்.எங்கோ, எதிலோ, எப்போதோ, படித்தது.