அந்துமணி பா.கே.ப.,
பபெங்களூரு வாசகர் ஒருவர், ஜோர்டான் நாட்டுக்கு சென்று வந்த, அனுபவத்தை எழுதியுள்ளார்:சவுதி அரேபியாவிலிருந்து, ஜோர்டானுக்கு காரில் செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை எங்களுக்கு, அன்று நிறைவேறியது. மூன்று கார்களில், சிறுவர்கள் உட்பட நாங்கள், 14 பேர் இருந்தோம்.'இந்தி, இந்தி, (இந்தியர்கள்)... வருக வருக, தங்கள் வருகை நல்வரவாகுக...' என்று ஜோர்டானின், 'இமிக்ரேஷன்' அதிகாரிகள், எங்களுக்கு சிரித்த முகத்துடன் அமோக வரவேற்பை அளித்தனர். இதை, நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.எங்களுடைய பாஸ்போர்ட்டில், உள்ளே நுழைய முத்திரையை குத்தி, 'அமிதாப் பஷ்ஷன் எப்படி இருக்கிறார்...' என்று கேட்டார், அதிகாரி.இந்த கேள்வியை எதிர்பார்க்காத எனக்கு, துாக்கி வாரிப் போட்டது. 'அமிதாப் பச்சன் மும்பையில் அல்லவா இருக்கிறார்; அவரை நாங்களே இதுவரை பார்த்ததில்லையே...' என்று, யோசித்தேன். அடுத்து, அவருடைய மேல் அதிகாரி, எங்களிடம் ஓடி வந்து, 'ரேகா, நலமா...' என்று, குசலம் விசாரித்ததை கேட்ட போது, நம்முடைய சினிமாக்கள் எவ்வளவு துாரம் பரவியுள்ளது என்று எண்ணி, மகிழ்ந்தேன்.ஜோர்டானின், மா ஆன் மற்றும் அகாபா போன்ற இடங்களின் அழகையும், குளிர்ந்த கடல் ஸ்நானத்தையும் அனுபவித்து, பெட்ரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தபோது, இரவு, 10:00 மணியை கடந்து விட்டது.இன்டர்கான்ட்டினென்டல் குழுவை சேர்ந்த, 'போரம்' ஹோட்டலில் தங்க இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், நேரே அங்கே சென்றோம். அங்கே தான், எங்களின் மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்தது.'அஹ்லேன் வாஸஹ்லேன்...' என்று, அவர்கள் மொழியில், எங்களை வரவேற்றார், அந்த ஹோட்டலின் வரவேற்பாளர், ஹமாத் பராஜாத்.'காட்டேஜ் அல்லது அறைகள் எங்களுக்கு தேவை...' என்று, நான் கூற, மிக வருத்தத்துடன், 'எல்லா அறைகளும் நிரம்பி விட்டன. இருந்தாலும், அங்கே இருக்கும், 'பெட்ரா கெஸ்ட் ஹவுசில்' கேட்டுப் பார்க்கிறேன்...' என்று கூறி, தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.அங்கேயும் இடம் இல்லை. வெளியிலோ, நாங்கள் இதுவரை அனுபவிக்காத வெட வெடக்கும் குளிர். முன்பே, அறைகளை, முன்பதிவு செய்யாமல் வந்து விட்டோமே என்று, ஒரு குற்ற உணர்வு என் மனதில் தோன்றியது.'நீங்கள் தங்குவதற்கு வேறு எந்த இடமும் கிடையாது. அடுத்த ஊருக்கு நீங்கள் செல்ல முயற்சித்தால், மூன்று மணி நேரம் கழித்து தான் அந்த இடத்தை அடைய முடியும். பெட்ராவை, நாளை நீங்கள் சுற்றி பார்க்கும் உரிமையை இழந்து விடுவீர்கள்.'அதனால், நான் ஒரு உபாயம் தெரிவிக்கிறேன். அருகே என் வீடு இருக்கிறது. நாங்கள் மேல் தளம் கட்டிக் கொண்டிருக்கிறோம்; முடியும் தருவாயில் இருக்கு... ஹோட்டலில் இருக்கும் வசதிகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால், என்னால் முடிந்த வசதிகளை செய்து கொடுக்கிறேன். 'கீழ் தளத்தில் என் பெற்றோரும், தங்கையும் வசிக்கின்றனர். ஹோட்டலில் இருந்து உங்களுக்கு குறைந்தபட்ச தேவையான, மெத்தை, தலைகாணி, போர்வை மற்றும் கம்பளி மட்டும் அனுப்பி வைக்கிறேன்...' என்றார்.எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. நான், 'சரி...' என்று கூறுவதற்குள், எங்கள் எல்லாரையும் ஹோட்டலின் சிப்பந்தியுடன், அவர் வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்து விட்டார்.அவர் வீட்டின் மேல் தளத்திற்கு சென்றால், ஒரு பெரிய ஹாலில் படுக்கைகள் தயாராக இருந்தன. ஒரு மேஜையின் மேல், 'குபுஜ்' என்று அழைக்கப்படும் ரொட்டிகள் சுட சுட தயாராக இருந்தன. அதனுடன் உண்ணுவதற்கு, 'ஹொம்மூஸ், முடப்பல்' மற்றும் 'தபூலி' என்ற, 'சைடு டிஷ்' எல்லாம் இருந்தன. ஒரு பிளாஸ்கில் நறுமணம் வீசும், 'அரபிக் கஹ்வா' என்ற காபி இருந்தது.நாங்கள் மிகவும் களைப்புடன் இருந்ததால், உணவை முடித்து, உடனே உறங்கி விட்டோம்.அடுத்த நாள் காலை, தன் பெற்றோருடன் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு மேலே வந்தார், ஹமாத்.'எப்படி... ஊர், பேர் தெரியாத எங்களை நம்பி, உங்கள் இடத்தை கொடுக்க சம்மதித்தீர்கள்...' என்று கேட்டேன்.'சிம்பிள்... நீங்கள் எல்லாரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆச்சே... அந்த ஒரு தகுதியே போதும்...' என்றார்.'இவ்வளவு நபர்களுக்கு நீங்கள் இடம் கொடுத்திருக்கிறீர்கள்... நாங்கள், ஜோர்டானியன் தினார் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா...' என்றேன்.'பணமா... இந்தியர்களை சந்திக்க, அவர்களுக்கு சேவை செய்ய, எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை என் பெற்றோரும், நானும் மிகவும் பாக்கியமாக கருதுகிறோம். நீங்கள், எனக்காக ஒரு உதவி கட்டாயமாக செய்ய வேண்டும்...' என்றார்.கீழேயிருந்து, 'டிவி'யில், ஹமாதுவின் சகோதரி கேட்டுக் கொண்டிருந்த, 'ஜிந்தகி... ஏக சபர்...' என்ற, கிஷோர் குமார் பாட்டு, எங்கள் காதில் விழுந்தது.ஹமாதுடைய பெற்றோர் அரேபிய பாஷை மட்டும் பேசுவதால், எங்களுடன் கலந்து உரையாட முடியவில்லை. ஹமாத் தொடர்ந்தார்...'இன்னும் ஒரு வாரத்தில், என் திருமணத்திற்கு பெற்றோர் தேதி குறித்திருக்கின்றனர். உங்களுக்கும் அந்த சமயத்தில் விடுமுறை இருக்கும். நீங்கள் எல்லாரும் திரும்பி வந்து, என்னையும், என் மனைவியையும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்...' என்றார்.இவ்வளவு நல்ல மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கின்றனர் என்பது மட்டுமல்ல, இந்தியாவில் பிறந்திருக்க நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்ற மன நிறைவுடன், அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.அவர் திருமண நாளன்று, நாங்கள் எல்லாரும் சென்று, பங்கெடுத்துக் கொண்டோம் என்பதை சொல்ல வேண்டுமா என்ன? அவரை, 'நம்பர் ஒன் ஊழியர்...' என்று, இன்டர்கான்ட்டினென்டல் ஹோட்டல் பாராட்டியது என்பதையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.- இப்படி எழுதியுள்ளார்.