அந்துமணி பா.கே.ப.,
பா - கேசனிக்கிழமை மாலை, வேலைகள் சீக்கிரமே முடிந்துவிட, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, எழுத்தாள நண்பர் ஒருவர் வந்து, 'மணி, எதிரில் இருக்கும் பொது நுாலகத்துக்கு சென்று வரலாம். இரண்டு, மூன்று புத்தகங்கள் எடுக்க வேண்டியுள்ளது...' என்றார்.அவருடன் கிளம்பினேன்.நுாலகத்தினுள் சென்றோம். உயர உயரமான புத்தக அலமாரிகளுக்கு நடுவேயிருந்த நீளமான மேஜையை சுற்றிலும் இருந்த நாற்காலிகளில் பல வயதுள்ளவர்களும் அமர்ந்திருந்தனர். நடு நாயகமாக, கல்லுாரி பேராசிரியை போலிருந்த ஒருவர், உரையாற்றிக் கொண்டிருந்தார்.நாங்களும் அவர்களுடன் இணைந்து, உரையாடலை கேட்கத் துவங்கினோம். அவரது பேச்சு இதோ:தர்மம் தலையை மட்டுமல்ல... ஒரு நாட்டையே காப்பாற்றும் என்பதற்கான ஒரு உண்மைச் சம்பவம் இது.கடந்த, 1892ல், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவன் அவன். தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.அவனும், அவனது நண்பன் ஒருவனும் சேர்ந்து, பிரபல இசைக் கலைஞர் ஒருவரை அழைத்து வந்து, கட்டணம் வசூலித்து, கல்லுாரியில் இசை நிகழ்ச்சி நடத்தினால், படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டலாம் என்று முடிவு செய்தனர்.அதற்காக, உலகப் புகழ்பெற்ற, போலந்து நாட்டைச் சேர்ந்த பியானோ இசைக் கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து, தேதி கேட்டனர்.அவரது மேனேஜரோ, 'சார் வருவார்... ஆனால், நீங்கள் அவருக்கு, 2,000 டாலர் தர வேண்டும்...' என்று கூற, இருவரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர்.பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப்பெரிய வெற்றி என்பதால், அந்த நிகழ்ச்சியை, 'சூப்பர் ஹிட்'டாக்க முடிவு செய்து, அல்லும் பகலும் நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைத்தனர்.நிகழ்ச்சிக்கான நாளன்று நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால், எதிர்பார்த்தபடி டிக்கெட்கள் விற்பனையாகவில்லை.மனதை திடப்படுத்தியபடி, பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து, நடந்ததை கூறி, 'நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம்...' என்றனர்.பேட்ரெவ்ஸ்கி மறுத்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக உறுதி அளித்தார்.ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின், அவரை சந்தித்த இரு மாணவர்களும், அவரிடம், 1,600 டாலர் கொடுத்து, 'இதுதான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு, பின் தேதியிட்டு, 'செக்' கொடுத்து விடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்தி விடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று, பணத்தையும், காசோலையையும் கொடுத்தனர்.அவரோ, அந்த காசோலையை கிழித்து போட்டு, அவர்கள் கொடுத்த தொகையையும் அவர்களிடமே கொடுத்தார். 'நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்து, உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்...' என்றார்.மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்த பேட்ரெவ்ஸ்கி, அந்த தொகையையும் செலுத்தினார்.ஆண்டுகள் உருண்டன.காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று, ஒரு கட்டத்தில், போலந்து நாட்டின் அதிபரானார், பேட்ரெவ்ஸ்கி.மிகப்பெரும் தலைவராக விளங்கி, நல்லாட்சி நடத்தி வந்தார். அப்போது, முதல் உலகப் போர் துவங்கி, துரதிர்ஷ்டவசமாக, போலந்து நாடு, போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில், மக்கள் அனைத்தையும் இழந்து, வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது.எப்படி நிலைமையை சமாளிப்பது, பசியோடு இருக்கும் தன் நாட்டு மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது... கலங்கித் தவித்தார், பேட்ரெவ்ஸ்கி.அமெரிக்காவின், ஆபத்துக்கால உதவிக்குழுவான, 'அரா' என்ற அமைப்பை அணுகினார். அதன் தலைவராக இருந்தவர், ஹெர்பெர்ட் ஹூவர். இவர் பின்னாளில், அமெரிக்காவின், 31வது ஜனாதிபதியானார்.பேட்ரெவ்ஸ்கி கேட்டுக் கொண்டதையடுத்து, அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான டன் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் போலந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டன.பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். நிம்மதி பெருமூச்சு விட்டார், பேட்ரெவ்ஸ்கி.கேட்டவுடன், உதவி செய்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக, ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து, கண்கள் பனிக்க நன்றி தெரிவித்தார், பேட்ரெவ்ஸ்கி.'நோ... நோ... மிஸ்டர் பிரசிடெண்ட். நீங்கள் நன்றி சொல்லக் கூடாது. நீங்கள் முன் செய்த உதவிக்கு தான், நான் இப்போது பிரதியுபகாரம் செய்துள்ளேன்.'உங்களுக்கு நினைவிருக்கிறதா... 25 ஆண்டுகளுக்கு முன், கல்லுாரி மாணவர்கள் இருவரின் கல்வி கட்டணத்தை கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக் கொடுத்து உதவினீர்கள் அல்லவா, அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்...' என்றார், ஹெர்பெர்ட் ஹூவர்.கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக் கொண்டார், பேட்ரெவ்ஸ்கி.காலம் எப்போது, யாரை, எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது. தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன்மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.ஏனெனில், விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.தர்ம சிந்தனையுடன், அற வழியில் வாழ குழந்தைகளுக்கு வழி காட்டுங்கள். குழந்தைகள், சொல்வதை கேட்பதில்லை; ஆனால், செய்வதை பார்ப்பர்.- என்று கூறி முடித்தார்.அருமையான உரையாடலை கேட்க வாய்ப்பளித்த, எழுத்தாள நண்பருக்கு நன்றி கூறினேன்.'இவர், மனவள பயிற்சியாளர். அவ்வப்போது இங்கு வந்து உரையாற்றுவார்...' என்றார், அங்கிருந்த நுாலகர்.'பள்ளிகளில், நீதிபோதனை வகுப்புகளுக்கு முடிவு கட்டி விட்டனர். அட்லீஸ்ட், இவரைப் போன்றோரை மாதத்துக்கு ஒருமுறையாவது அழைத்து, மாணவர்களிடையே உரையாடச் செய்து, கொஞ்சமாவது அவர்களை நல்வழிபடுத்தலாமே...' என்று, என் ஆதங்கத்தை தெரிவித்தேன்.'இதெல்லாம், காதில் விழ வேண்டியவங்களுக்கு விழுந்தால் சரி...' என்று கூறிய நுாலகர், மனவள பயிற்சியாளரிடம் எங்களை அறிமுகம் செய்து வைத்தார்.அவரை பாராட்டி விட்டு திரும்பினோம்