உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேராமசாமி அண்ணாச்சியின் பிறந்த நாள்... அவரது வீட்டில், விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம். அங்கு கூடியிருந்த அண்ணாச்சியின் நண்பர்களில் பெரும்பாலானோர், இளம் வயதினராக இருந்தனர்.எப்போதுமே, அண்ணாச்சி இளம் வயதினரிடம் நெருங்கி பழகுபவர் தான். தன் வயதுள்ளவர்களிடம் நட்பு பாராட்டினால், தனக்கு வயதானவர் என்ற உணர்வு வந்து விடும். தொழிலில் சுணக்கம் ஏற்பட்டு விடும். இளம் வயதினருடன் பழகுவதால், உற்சாகமாக, புது புது விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்று, காரணம் கூறுவார்.எப்போது இந்த, 'டயலாக்'கை கூறினாலும், லென்ஸ் மாமாவுக்கு கோபம் வந்து விடும். 'வயதானவர்களுக்கு தான் அதிக புத்திக்கூர்மையும், அனுபவமும் இருக்கும். சுறுசுறுப்பாக அவர்களால் செயல்பட முடியும்...' என்று சண்டைக்கு போவார்.இப்போதும், ராமசாமி அண்ணாச்சி, தப்பு தப்பாக ஆங்கிலம் பேச போக, லென்ஸ் மாமா துள்ளுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது, எனக்கு.கம்மிங் பேக் டு த பாயின்ட்...பார்ட்டிக்கு வந்திருந்த நண்பர்களில், காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் அடக்கம். அவரிடம், 'ஏதாவது விசேஷம் உண்டா?' என்றேன்.'அத ஏன் கேட்கற மணி... சீரியஸ் திருடர்கள் இருப்பது போல், சிரிப்பு திருடர்களும் நிறைய பேர் உள்ளனர். இந்த இரண்டு வகை திருட்டு பசங்களை, 'டீல்' செய்து, செய்து, அலுத்து போச்சுப்பா...'இது, எதிலும் சேர்த்தியில்லாமல், மூன்றாவதாக படு, 'ஸ்மார்ட்' ஆக திருட்டில் ஈடுபடும் திருடர்களும் உண்டு. அப்படி ஒரு திருடனை, சமயோஜிதமாக பிடித்துக் கொடுத்த வீட்டுக்காரர் பற்றி சொல்றேன் கேளு...' என்று கூற ஆரம்பித்தார்:ஒரு வீட்டில் திருடணும்ன்னு திட்டம் போட்டான், திருடன் ஒருவன்.இருட்டினதும் தான் போய் திருட முடியும். ஆனா, ராத்திரியானா வாசல் கதவை சாத்தி உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுடுவாங்களே... என்ன பண்றது, எப்படி வீட்டுக்குள்ள போறதுன்னு யோசிச்சு, ஒரு முடிவுக்கு வந்தான்.பகல் நேரத்துலயே, யாருக்கும் தெரியாம அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சு, எங்கேயாவது ஒளிஞ்சுக்குவோம். ராத்திரி எல்லாரும் துாங்கினதுக்கு அப்புறம், நைசா போய் பீரோவை திறந்து, இருக்கறது பூரா எடுத்துக்கிட்டு ஓடியாந்துடலாம்ன்னு திட்டம் போட்டான்.அதே மாதிரி, ஒருநாள் மதியத்துக்கு மேல, அந்த வீட்டுக்காரன் வெளியே புறப்பட்டு போனான். வீட்டுக்காரம்மா அடுப்பங்கரையில இருந்தாங்க.இதுதான் சமயம்ன்னு, அந்த வீட்டுக்குள்ள மெதுவா நுழைஞ்சுட்டான், திருடன்.எங்கே ஒளியலாம்ன்னு பார்த்தான். வலது பக்கம் ஒரு அறை இருந்தது. உள்ளே போனான், அது படுக்கையறை. பெரிய கட்டிலுக்கு அடியில் போய் படுத்துக்கிட்டான்.இருட்டின பின், வெளியே போயிருந்த வீட்டுக்காரன் திரும்பி வந்தான். சாப்பிட்டான். விளக்கை அணைச்சுட்டு படுத்துட்டான்.அந்தம்மாவும் வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து படுத்தாங்க.நடு இரவு. விடி விளக்கு லேசா எரிஞ்சுக்கிட்டிருந்தது. வீட்டுக்காரன் லேசா கண்ணு முழிச்சான். கட்டிலுக்கு நேர் எதிரில் ஒரு கண்ணாடி இருந்தது. அதுல, கட்டிலுக்கு கீழே திருடன் ஒளிஞ்சிருக்கிறது தெரிய, அதிர்ந்தான், வீட்டுக்காரன்.இருப்பினும், அவன், 'திருடன் திருடன்'னு சத்தம் போடல. மேசை மீது இருக்கிற கத்தியை கையில எடுத்து வச்சுக்கலாம்ன்னு முதலில் யோசிச்சான்.இந்த சமயத்துல, கத்தியை உபயோகப்படுத்தறதை விட, புத்தியை உபயோகப்படுத்தறது தான் சாமர்த்தியம்ன்னு நினைச்சு, உடனே அதன்படி செயல்பட ஆரம்பிச்சான்.மனைவியை எழுப்பி, எதிரில் இருந்த கண்ணாடியை காட்டி, பேச ஆரம்பிச்சான், கணவன். மனைவியும் புத்திசாலி, புரிஞ்சுக்கிட்டு, கணவரிடம் இயல்பாக பேசுவது போல் பாவனை செஞ்சாங்க.'இதோ பார், நமக்கு குழந்தை பிறந்தா, அதுக்கு கிருஷ்ணமூர்த்தின்னு தான் பேர் வைக்கணும்...' என்றான், கணவன்.'அதெல்லாம் முடியாது. ஆம்பிளை பிள்ளையா இருந்தா, ஏகாம்பரம். பொம்பளை பிள்ளையா இருந்தா, பங்கஜவல்லி. இதுதான் எங்க அப்பா, அம்மா பேர். அதைத்தான் வைக்கணும்...' என்றார், அந்த அம்மா.'அதெல்லாம் முடியாது. நான் முடிவு பண்ணிட்டேன். கிருஷ்ணமூர்த்தி...' என, கத்தினான், அவன்.'இல்ல... ஏகாம்பரம் - பங்கஜவல்லி...' என, கத்தினாங்க அவங்க.வாதம் முத்திப் போச்சு.'கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி'ன்னு கணவன் கத்தறான்; 'ஏகாம்பரம் - பங்கஜவல்லி, ஏகாம்பரம் - பங்கஜவல்லி'ன்னு இவங்க கத்தறாங்க.இவங்களோட சத்தத்தை கேட்டதும், பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுல இருந்தவங்கள்லாம் ஓடி வந்து, இவங்க வீட்டு கதவை தட்டினாங்க.சாவகாசமா எழுந்திருச்சு போய் கதவை திறந்தான், கணவன்.'என்னங்க, ராத்திரி வேளையில எங்களை எல்லாம் ஏன் கூப்பிட்டீங்க... யாருக்கு என்ன ஆச்சு...' என, கேட்டாங்க, பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்தியும், எதிர்த்த வீட்டு ஏகாம்பரம், பங்கஜவல்லியும்.'அடடே... உங்களை கூப்பிடலைங்க. குழந்தைக்கு பேர் வைக்கிறது சம்பந்தமா எங்களுக்குள்ள சண்டை வந்துட்டுது, அதுதான் விஷயம். வேணும்ன்னா இதோ கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சுருக்கிற திருடனை கேட்டுப் பாருங்க. அவன் தான் இதுக்கு சாட்சி...' என்றான், கணவன்.உடனே, எல்லாரும் விஷயத்தை புரிஞ்சுக்கிட்டு, திருடனை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைச்சாங்க.- இப்படி அவர் கூறி முடித்ததும், 'குபீர்' சிரிப்பால் அதிர்ந்தது வீடு; பார்ட்டியும் களை கட்டியது.ஒரு பெரிய மனிதருக்கு பிறந்த நாள் விழா. அவர், குதிரை மேலே ஏறி முன்னே போய் கொண்டிருந்தார். அவருக்கு பின்னால், நுாறு பேர் போயினர். எல்லாரும் பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்டவர்கள்.கொஞ்ச துாரம் நடந்ததும், கால் வலிக்க ஆரம்பித்தது. ஒவ்வொருத்தராக ஒதுங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் குதிரையில் போகிறவர், தற்செயலாக திரும்பிப் பார்த்தார். பின்னால் யாருமே இல்லை, எல்லாரும் ஓடி விட்டனர். ஒரே ஒருவன் மட்டும் ரொம்பவும் விசுவாசமாக பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தான்.'நீ வீட்டுக்கு போகலையா...' என்று கேட்டார், குதிரை மேல் அமர்ந்திருந்த பெரிய மனிதர்.அவன் ரொம்பவும் பணிவாக, 'நீங்க அந்த குதிரையையும், அதற்கான வாடகைப் பணத்தையும் கொடுத்துட்டீங்கன்னா போயிடுவேன்...' என்றான்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !