மனிதர்களா நீங்கள்?
திருநெல்வேலி அருகே, செய்துங்கநல்லுார் ஜெயராமனின் பண்ணையில் இருந்த மாடுகளில் ஒன்று, தானும் மற்ற மாடுகளும் படும் வேதனையை இப்படி கொட்டித் தீர்த்தது:நாங்கள், 15 பேர், பண்ணையில் கட்டிப் போட்ட கைதிகளாய் கிடந்தோம். செந்தமிழ் நாட்டில், தென் மாவட்டங்களில், 'தென் பாண்டி' இனம் என்ற பெயரில், சீரும் சிறப்புமாய் தான் ஒரு காலம் வாழ்ந்தோம்.இன்று, கழிவு நீர் காலளவும், காய்ந்த புல் கையளவுமாய் போட்டு போட்டு, எங்களை மெல்ல மெல்ல கொன்று கொண்டிருந்தார், ஜெயராமன். 'என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்' என்று, நாங்கள் நாளொரு ஏக்கமும், பொழுதொரு வாட்டமுமாய் நலிந்து கிடந்த போது தான், ஒரு நாள் நண்பகலில், லாரி ஒன்று வந்து நின்றது.சரி... இனி, நெருக்கடியில் நின்றபடி நெடுஞ்சாலை பயணம் தான். எங்கே என்கிறீர்களா... கேரளாவிற்கு தான். எதற்காகவா... அங்கே, நஞ்சையிலும், புஞ்சையிலும் உழுவதற்கா போகிறோம்... நன்றாக கேட்டீர்கள் போங்கள்...எங்களை எப்படி அழைத்து செல்வர் என்றால், ஒருவரையொருவர் ஒட்டி உரசி, தலையை சற்றும் அசைக்க முடியாமல், தாடையோடு சேர்த்து இறுக்கமாய் கட்டி, பழைய கால பங்களா சுவர்களில் பதித்து வைத்த மான் தலைகளைப் போல பதுமைகளாய்... போனதுமே எங்களுக்கு நிகழவிருக்கும் கொடூரமான சாவு பற்றிய பயத்தோடும், கால் கடுக்க நாங்கள் செய்யும் நெடும்பயணம், நிச்சயமாய் ஒரு கொடும் பயணமாய் தான் இருக்கும்.கேரளாவில் வெட்டுபடப் போகிறோம். அடிமாடுகளாய் அழியப் போகிறோம். இங்கே, வறட்சியில் வாழ முடியாமல், அங்கே, இறைச்சியாகப் போகிறோம். தண்ணீர் இல்லா தாகத்தோடு ஒரு நெடும்பயணம் போகும்போதே, நாங்கள் உறங்கிவிடக் கூடாதாம். கண் விழிகளில் மிளகாய் பழத்தை அறுத்து வைப்பராம்.மரண தண்டனை கைதிகளுக்காவது, தண்டனை தேதியை முன்பே தெரிவித்து விடுவர். கருணை மனு, மறு பரிசீலனை என்று முயற்சிப்பதற்கு வாய்ப்புகள் அளிப்பர் அல்லது மனதளவிலாவது மரணத்தை ஏற்க கால அவகாசம் தருவர். எங்களுக்கு... வாழ்வை தட்டிப் பறிப்பது போல, திடீரென்றல்லவா வந்து நிற்கின்றனர். எதிர்பார்க்கவே இல்லையே, அதிர்ச்சியாகி விட்டோம்.லாரியிலிருந்து இறங்கி, தடி மாடுகளை போல் ஏழெட்டு பேர், எங்களை நோக்கி வந்தனர். நாங்கள் அத்தனை பேரும், பயம், மற்றும் பதட்டத்தோடும், அவர்களை பார்த்தோம்.எங்கள் செவிகள் இரண்டுமே முன்னோக்கி நின்றன. காலால் தரையில் கோடு கிழித்தோம். வெறும் மூச்சுக் காற்றை, 'முஷ்... முஷ்...' என்று சத்தமாய் வெளியிட்டபடி, அவர்களுக்குள் ஒரு அச்சத்தை எங்களால் இயன்றவரை பாய்ச்சினோம்.பாமர பயல்கள் பயந்தாலுமே, எங்களை போலவே வெளிப்படுத்தாமல், எங்களை நோக்கி அடிமேல் அடி வைத்து, நெருங்கினர்.நீளமாய் தொங்கும் மூக்கணாங் கயிறு தான், எங்கள் வம்சத்துக்கே வாய்த்த, ஒரு சாபக் கயிறு. இந்த மூக்கணாங் கயிறை, முதன் முதலில் எங்களுக்கு கட்டியவன் மட்டும் கிடைத்தால், எங்கள் அத்தனை பேர் கொம்புகளும், குருத்தோடு புடுங்கிக் கொள்ளும் வரை, அவன் உடலை குத்தி குடைந்து, சல்லடையாக்கி, துார எறிந்து விடுவோம்.மூக்கணாங் கயிற்றில் நீள கயிறு கட்டி, இரு பக்கமும் மூன்று பேர் பிடித்து, எங்கள் ஒவ்வொருவரையும் லாரியை நோக்கி இழுத்துச் சென்றனர். அவர்களின் அந்த பிடியிலும் கூட, எங்களின் உக்கிர ஆவேசமான தலை உலுக்கலில், ஒவ்வொருவருமே, மடார் மடாரென விழுந்து எழுந்தனர். நாங்கள் ஒவ்வொருவரும், தலையை வேகமாய் சுண்டி இழுத்ததில், அவர்களின் பிடி கயிறே, கை விரல்களை அறுத்து, ரத்தம் கசிய வைத்தது.வெள்ளை துரையின், வலது காலை ஓங்கி உதைத்தோம்; வீரபாண்டியின், விலாவில் கொம்பால் கோடு கிழித்தோம்; மூக்கனின், முழங்கால் உடைந்தது; பரமனை, பந்தாடினோம்; காளியப்பனின், கை, கால்களில் ரத்தம் சிந்தியது. சிந்தட்டுமே... நாங்கள் போய் இறங்கும் இடத்தில், எங்களின் ரத்தம் ஆறாக ஓடுமே... அதற்கு காரணமான இந்த பயல்களும் சில துளி ரத்தமாவது சிந்தினால், என்ன குடியா முழுகி விடும்... இருந்தாலும், அந்த பயல்கள் அசரவில்லை. எங்கள் தாக்குதலை இயல்பாய் ஏற்று, மிக மிக கெட்ட வார்த்தைகளில் எங்களை திட்டி, போராடி, ஒரு வழியாய் எங்கள் ஒவ்வொருவரையும் லாரியில் ஏற்றி விட்டனர்.'எங்கே போகும் இந்த பாதை...' என்ற சினிமா பாடல், எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்து, காதுகளை தொட்டபோது, கண்ணீர் விட்டோம். எங்களுக்காகவே பாடப்பட்டது போல் இருந்தது, அந்த பாட்டு. போகிற வழியில், எத்தனை கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், நீதிமன்றங்கள். அத்தனையுமே மனித பாவிகள் உங்களுக்கு மட்டும் தானா... மனித உரிமை ஆணையம் போல, ஒரு மாட்டுரிமை ஆணையம் எங்களுக்கு இல்லையா... ஏக்கத்தோடும், இயலாமையோடும் பயணித்தோம்.எங்களில் ஒரு வயசான காளை, எங்களிடம் பேசியபடி வந்தது. இன்னொரு இளங்காளை, இளக்காரமாய் இடையில் பேசியது...'பெருசு... பேசி புண்ணியமில்ல, அங்க பாரு, சிவன் கோவில்ல, பிரதோஷம் நடக்குதாம். கால் மடக்கி, கருவறையை பாத்து வெளிய உக்கார்ந்திருக்கிற நம்ம பய ஒருத்தன் சிலைக்கு, நந்தீஸ்வரன்னு ஒரு பேர வச்சிருக்காங்க... அவன் தலை வழியா பாலு, தயிறு, நெய், பன்னீர், இளநீர், குங்கும், விபூதி, சந்தனம் மற்றும் அரிசி மாவு என, எல்லா அபிஷேகங்களும் நடக்கும்...' என்றது.'உள்ளே அந்த அபிஷேகத்த பாத்து பாத்து கன்னத்துல அடிச்சுக்க, 10 ஆயிரம் பேர் சுத்தி உக்காந்திருப்பாங்க. அந்த பயளுக கூட்டத்துல, நம்மள திங்குற பயல்களும், நல்ல பயல்களாக மாறி உக்காந்திருப்பான்...' என, ஒரு முரட்டு மாடு சொன்ன போது, நாங்க, 10 பேர், அந்த மன உளைச்சலிலும், வேதனையிலும் கூட, குபீர்ரென சிரித்து விட்டோம். என்னமோ வெண்மை புரட்சியாம்... பால் உற்பத்தியை அதிகப்படுத்தணும்ன்னு, கலப்பினங்களை பண்ணை பண்ணையாய் கட்டிப்போட்டு வளக்குறாங்க. நம்ம மடியில சுரக்குற ஒரு சொட்டு பாலுல உள்ள சத்து, அதுக மடியில இருந்து குடம் குடமா கறந்தாலும் கிடைக்குமா...சரி, அத விடு... வீரபாண்டிய கட்டபொம்மன், சத்ரபதி சிவாஜி, ராஜராஜ சோழன்... இந்த சரித்திர ஜாம்பவான்களெல்லாம், நம் மடி பால் குடிச்சு வளந்தவங்க. அதனால, நமக்கு இருந்த வீரம், விவேகம், ஈரம், கம்பீரம் எல்லா குணங்களும் அவங்களுக்கும் இருந்தது. 'ஜெர்சி, பிரீஸியன்' வகைகள எடுத்து வந்து வளர்த்து, நீ குடம் குடமாய் கறந்து குடிச்சாலும், இந்த மண்ணோட வீரம் உனக்கு வருமா...மண்டியிட்டு பிழைக்கிற, நரி குணம் தான் உனக்கு வரும். எங்களோட கம்பீரம், எங்க பால குடிச்சாதானடா உனக்கு வரும், உன் பிள்ளைக்கும் வரும்.ஒரு கிராமம் கடந்து, வடக்கே போகும் சாலையில் வலது புறமாய் இருந்த மிகப்பெரிய இரும்பு, 'கேட்' முன், லாரி நின்றது. டிரைவர், 'ஹார்ன்' அடித்து வந்திருப்பதை தெரிவித்தார். உள்ளே இருந்து, தலையில் முண்டாசு கட்டிய ஒரு ஆள் ஓடி வந்து, கதவை திறந்தான். லாரி உள்ளே சென்றது.கேரள எல்லை வரவில்லையே, அதற்குள் இங்கே வந்து ஏன் லாரியை நிறுத்துகின்றனர்... இது, எந்த ஏரியா... ஒருவேளை, இங்கே இருந்தும் கூட நம்மை போன்ற பாவப்பட்ட நாட்டுப் பயல்களை ஏற்றிக்கொள்வதற்காக இருக்குமோ...யோசனை கலைவதற்குள், அங்கே இறக்கி விடப்பட்ட நாங்கள், வியப்பும், திகைப்புமாய் சுற்றும் முற்றும் பார்த்தபோது, சற்று துாரத்தில், 300 ஏக்கர் தரிசு நிலம் தான், எங்கள் கண் முன் விரிந்து கிடந்தது. அந்த நிலப்பரப்பை சுற்றி, ஒருபுறம் அகத்தி காடுகள், மறுபுறம் சின்னஞ்சிறு ஏரி. எதிர் திசையில் மிகப்பெரிய தொழுவம். எங்கள் இன பயல்கள், 200 பேர், அங்கங்கே அலைவதை பார்த்தோம். சில தின்னி பயல்கள், அகத்திக் காடே கதி என்று கிடந்தனர். சில சேட்டைக்கார பயல்கள், ஏரி தண்ணீரில் முட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். பல பேர், தரிசு மைதானத்தின் புல்வெளியில் பேசிக் கொண்டிருந்தனர். ஒருபுறம், வைக்கோல் மலையே இருந்தது. விட்டு வைப்பரா எங்கள் பயல்கள், பிரிந்து மேய்ந்து கொண்டிருந்தனர்.அந்த இடத்தின் அற்புதத்தை மெல்ல புரிந்து கொண்டோம். எங்களை கொல்வதற்காக அழைத்து வரவில்லை. மன நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம். அந்த நிமிஷம், நாங்கள் ஒவ்வொருவரும் அடைந்த இன்ப அதிர்ச்சியை உங்களிடம் விவரிப்பதற்கு, ஒரு கல்கியோ, சாண்டில்யனோ தான் மறுபிறவி எடுத்து வரவேண்டும்.அடடா... இப்படியொரு இடத்திற்கு தான் எங்களை ஏற்றி விடுகின்றனர் என்று, அங்கேயே நாங்கள் அறிந்திருந்தால், அந்த பயல்களோடு அருமையாய் ஒத்துழைத்திருப்போமே.வெள்ளத்துரை, வீரபாண்டி, மூக்கன், பரமன் மற்றும் காளியப்பன் பாவம். வயிற்று பாட்டுக்கு தானே நம்மோடு மல்லு கட்டினர். கொல்வதற்கு ஏற்றி விடுகின்றனர் என்று தப்பாய் எண்ணி, ஏழை பயல்களை முட்டி உதைத்து, காயப்படுத்தி விட்டோமே... பாவம், அத்தனை பயல்களும் பிள்ளைக்குட்டிகாரன்கள்... சீக்கிரம் புண்ணெல்லாம் ஆறி, அவர்கள் சுகமாய் இருக்கட்டும். ஆனாலும் ஒரு விஷயம், நாங்கள், 10 பேர் என்ன புண்ணியம் செய்தோமோ, இங்கே வந்து இறங்கியிருக்கிறோம். ஆனால், இன்னமும் எங்களில் ஆயிரக்கணக் கானோர் அடிமாடுகளாய் அழிந்தபடி தான் இருக்கின்றனர்.நாங்கள், லாரியில் ஏறி வந்த அனுபவத்தை தான் சொன்னோம். அவர்கள் போய் இறங்கிய இடத்தில் கொடூரமாய் கொல்லப்படும் அனுபவத்தை சொன்னால், ஒருவேளை உங்களுக்கு எங்கள் நிலைமை நன்றாக புரியும். நாங்களும், உங்களை போல ஒரு உயிர் தானே. அந்த உணர்வு உங்களுக்கு இருந்தால், எங்களை காக்க நினைப்பவர்களுக்கு மத சாயம் பூசி, மாடுண்ணும் கொடுமைக்கு மணியடிக்க மாட்டீர்கள். சரி விடுங்கள், நிறைய பேசிட்டோம். இங்கே நாங்கள் இறங்கிய இடம், கோசாலையாம். எங்களை பாதுகாத்து, பராமரிக்கிற புண்ணியவான்களின் ஏற்பாடுதானாம் இது. அவர்களின் குடும்பம், சகல செல்வங்களையும் பெற்று சவுக்கியத்தோடும், சந்தோஷமாய் தலைமுறை தலைமுறையாய் வாழவேண்டும் என்று, எங்கள் நாயகன் நந்தி தேவரை வேண்டிக் கொள்கிறோம். பிறகென்ன, அதோ மேய்கின்றனரே, அந்த ஜோதியில் நாங்களும் ஐக்கியமாகி விடுகிறோம். வணக்கம். வே.குருநாதன்சொந்த ஊர்: திருநெல்வேலி, வயது: 62, பணி: எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசன கர்த்தா, சமூக பிரச்னைகளை அடிப்படையாக வைத்து, சிறுகதைகள் எழுதுவது இவரது லட்சியம். கடந்த, 20 ஆண்டுகளாக, பல்வேறு இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.