பெண்ணென்று ஒருத்தி!
அருமையான கிரிக்கெட் ஆட்டம் முடிந்தது. இந்தியா வெற்றி பெற்றது. மனதில் மகிழ்ச்சி. ஆர்வத்துடன் எழுந்தேன். குளித்து விட்டு, இரவு உணவை ஒரு பிடி பிடித்து ஜாலியாக துாங்க வேண்டியது தான்.கதவுப் பக்கம் நின்றிருந்த கமலி, ''புளி உப்புமாவும், வேர்க்கடலை சட்னியும் பண்ணியிருக்கேன். வத்தல் வடாம் வேணுமா, இல்ல காராபூந்தியே போதுமா?'' என்றாள். ''கடை காராபூந்தியா, வேண்டாம். வெங்காய வத்தல் பொரிச்சுடு,'' என்றேன்.''சரி, அப்புறம் ஒரு விஷயம்...''''சொல்லு!''''வினோத் இன்னும் கணக்குப் பாடம் முடிக்கல. 'டிரிக்னாமெட்ரி' உங்க சப்ஜெக்ட், நீங்க சொல்லித் தர முடியுமா... அரை மணி நேரம் போதும், 'ஈசி'யா கத்துப்பான்,'' என்றாள்.குரல் அழுத்தமாக, ''நானா?'' என்றேன்.அவள் மெல்ல தலையாட்டினாள்.''விளையாடறியா கமலி... வாரத்தில் ஒருநாள், கொஞ்சம் நிம்மதியா கிரிக்கெட், 'டிவி' துாக்கம்ன்னு இருக்கேன்; அது பொறுக்கலையா உனக்கு? நான் என்ன உன்னை மாதிரி துக்கடா கம்பெனி சூபர்வைசரா...''அஞ்சு நாள், கழுதை மாதிரி, 'மல்ட்டி நேஷனல் கார்ப்பரேட்'ல உழைப்பை கொட்டியாகணும். வீட்ல தான் கொஞ்சம் ஓய்வு. அதைக் கெடுக்கணும்ன்னு நினைக்காத. புரிஞ்சுதா?'' என்றேன்.''அய்யோ, அதில்லீங்க. மத்த பாடங்களை நானே சொல்லிக் கொடுத்துடுவேன். சி.பி.எஸ்.சி., கணக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. சரி, ஓ.கே., நான் பார்த்துக்கறேன்,'' சடாரென சொல்லி, தலை குனிந்து நகர்ந்தாள்.எனக்குள் சந்தோஷம். பின்ன என்ன, ஒரு ஆணாக பிறந்ததில் இந்த அளவு சுதந்திரம் கூட இல்லை என்றால் எப்படி? செய்யட்டுமே, அவள் ஒன்றும் மக்கு இல்லை. தானே படித்துத் தெரிந்து, வினோத்துக்கு சொல்லித் தரட்டும்.வீட்டில் நான் தான் ராஜா; நான் வைத்தது தான் சட்டம். என்ன இருந்தாலும் அவள், என் ஆணைகளை நிறைவேற்ற வேண்டிய அடிமை தான்.''கமலி!''''இதோ வரேங்க,'' என, விரைந்தாள்.''நாளைக்கு ஆபிஸ் போகும்போது, அப்பாவைப் பார்த்துட்டு வரலாம்ன்னு இருக்கேன். ரிஷிகேஷ், ஹரித்வார்னு ரெண்டு மாசம், 'டூர்' முடிச்சு வந்திருக்கார். அப்பாவுக்கும் சேர்த்து, 'லஞ்ச்' கட்டிக் கொடுத்துடு,'' என்றேன்.''நானும் வரட்டுமா, அப்பாவைப் பார்க்க?''''நீ தனியா போயேன். எனக்கு இந்த வாரம் முழுக்க எக்கச்சக்க வேலை இருக்கு.''''சரிங்க!''மறுபடியும் மகிழ்ச்சி அலை. அப்படி ஒன்றும் வெட்டி முறிக்கிற வேலை எதுவும் இல்லை. சொல்லப் போனால், என் குழுவில் புதிதாக இரண்டு பேர் சேர்ந்திருக்கின்றனர். கொஞ்சம் சுலபம் தான். ஆனால், அவள் சொல்லி நான் செய்து விட்டால் எப்படி...என் கவுரவம் என்ன ஆகும்? நான் சொல்லி அவள் செய்ய வேண்டும். இதுதானே ஆணின் மதிப்பு? இது, அப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டது.அம்மா இல்லத்தரசி. வீட்டை பளிங்கு போல வைத்திருப்பாள். அதது வைத்த இடத்தில் இருக்கும். இல்லையென்றால் துவம்சம் செய்து விடுவார், அப்பா. சாப்பாடு பரிமாறும்போது பக்கத்திலேயே நிற்பாள்.தட்டில் ஒரு ஸ்பூன் அன்னம் கூட கூடுதலாய் விழுந்து விடக்கூடாது. ரசம் லேசாக கலங்கியிருக்கக் கூடாது. கத்தரிக்காய், வாழைக்காய் எல்லாம் சரியான பதத்தில் வெந்திருக்க வேண்டும். கொஞ்சம் சுவை மாறினாலும் தட்டு பறக்கும்.அப்பாவின் உடைகள், லாண்டரி சுத்தத்தில் இருக்கணும். குளித்து வரும் போது துண்டை நீட்ட வேண்டும். கேட்டு கேட்டு தான் மெனு சமைக்க வேண்டும். எதற்குமே எதிர்வார்த்தை பேசக் கூடாது. அம்மா போலவே, கமலியையும் மாற்றி விட்டேன். வீடு அமைதியாய் இருக்கிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேன்.அம்மா வளர்த்த பவழமல்லி மரம், வழக்கம் போல பூக்களை சொரிந்திருந்தது. தோட்டம் அடர்ந்து காடாகி, தென்னை மர ஓலைகள் விழுந்து பராமரிப்பு இல்லாமல் இருந்தது. ''வாப்பா ரகு, வா வா...'' என வரவேற்றார், அப்பா.திடுக்கிட்டு நிமிர்ந்து, ''எப்படிப்பா இருந்தது யாத்ரா... கங்கை ஓடும் ரிஷிகேஷ் ரொம்ப அழகு இல்லையா?'' பாதி ஆளாக ஆகியிருந்தார், அப்பா.அம்மாவின் ஹஸ்தியை எடுத்து கிளம்பிய போதே இளைத்துத்தான் இருந்தார். அது வயோதிகத்தின் தன்மை என்று நினைத்தேன். இந்த இரண்டு மாதங்களில் நுாலாக இளைத்து விட்டார். உடலை விட முகம் இன்னும் ஒடுங்கி, கண்கள் குழியில் விழுந்து, கிழவர் போல ஆகிவிட்டார்.''காபி குடிக்கிறியா?''''குடிச்சுட்டேன்.''''இதுல சாப்பாடு இருக்கு. உடம்புக்கு என்னப்பா?''''கமலி வரலியா?'' என்றார்.''வரேன்னா, நான் தான் தனியா போய்க்கோன்னு சொன்னேன். என்னப்பா இது, ரொம்ப சோர்வா, களைப்பா இருக்கீங்க. பயணத்தால இப்படி ஆகுமா, நல்ல டிராவல் ஏஜன்சி தானே? சாப்பாடு, வண்டி எல்லாமே நல்ல தரமாகத்தானே இருந்திருக்கும்?'' என்றேன். அம்மா இறந்தபோது கூட, 'தனியாக இருந்து சுதந்திர வாழ்க்கை வாழ்கிறேன்' என்று தைரியமாகத்தான் இருந்தார். ஆங்கில நாவல்கள் படித்து, ஈரான் படங்கள் பார்த்து, என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறேன் என்றபோதும், நானும் வற்புறுத்தவில்லை. ஆனால், தனிமை அவரை இப்படி கடுமையாக பாதித்திருக்கும் என்று, நான் நினைக்கவே இல்லை.''அதெல்லாம் ஒண்ணும் குறை இல்லை ரகு... எங்கே போனால் என்ன, நம் மனசும் கூடவே தானே வரும். அது கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை...'' என்றபோது அவர் குரல் அடித்தொண்டை யிலேயே தங்கி விட்டது. அப்பாவா இது, அந்த கம்பீரம் எங்கே... 'டெரர்' போல வீட்டில் சிங்கமாக வளைய வந்த தோள்கள் எங்கே... ஒரு வார்த்தை சொன்னாலே, அரச கட்டளை போல ஒலிக்கும் அந்த தன்னம்பிக்கை எங்கே?''தப்பு பண்ணிட்டேன் ரகு... ரொம்ப தப்பு பண்ணிட்டேன். அதுதான் அறுக்கறது. துாங்க விடாம, சாப்பிட விடாம, சிரிக்க விடாம... நான் மோசம்டா, ரொம்ப மோசம் ரகு...'' என்றவர், சட்டென விம்மினார்.''என்னப்பா சொல்றீங்க... தப்பா, என்னப்பா தப்பு? இது அற்புதமான வீடுப்பா. அருமையான நினைவுகள் தந்த வீடு. நீங்க, நான், அம்மாவும் சந்தோஷமா வாழ்ந்த வீடு. கோவில் மாதிரி, இங்க யாருமே தப்பு செய்ய வாய்ப்பே இல்லையேப்பா.''''அம்மா யாருடா ரகு? அவள் ஒரு தேவி, வன தேவதை. அழகுலயும், குணத்திலயும், திறமையிலயும் அவள் பக்கத்தில் யாரும் வர முடியாது. எனக்குக் கிடைத்த பொக்கிஷம் அவள். அவளை எப்படி நடத்தினேன்... கொத்தடிமையை விட மோசமா...''''அப்பா...''''ஆமாம்டா... சின்ன வயசு, ஆண் மிதப்பு, உடம்பு பூரா ஆதிக்கத் திமிர். அவளோட ஆகிருதியைப் பார்த்து உள்ளுக்குள்ள பயம். அதை திமிரா வெளிப்படுத்தி, என் பயத்தை தீர்த்துக் கொண்டேன்.''சாதாரண குமாஸ்தா வேலைதானே பார்த்தேன்... என்னவோ மைசூர் மகாராஜா மாதிரி வீட்டில் தெனாவட்டு காட்டினேன். என் டார்கெட், அவளை அடக்கி வெச்சு சந்தோஷப்பட்டேன்; அம்மா தான் பாவம்.''பெண் என்பவள் எப்பவும் அடங்கித்தான் போகணும்ன்னு, அவளே நம்புகிற அளவுக்கு கோபம் காட்டினேன். எதிர்ச்சொல் பேசினா, செருப்பு பறக்கும்ன்னு அவளை பதற்றத்திலேயே வெச்சிருந்தேன்.''பாவம், அவள் அஞ்சி நடக்கும் போதெல்லாம் உள்ளுக்குள்ள குரூரமா சந்தோஷப்பட்டேன். ஆனால், இந்த அந்திமக்காலம் என்னை கேவலமா பார்க்கறதுடா. நீயெல்லாம் ஒரு மனுஷனான்னு கேட்குது. ''தான் உயிருடன் இருந்தபோது கேட்காத நியாயங்களை அம்மா இறந்த பிறகு மவுனமாகக் கேட்கிறாள்...''முகம் மூடி குலுங்கி, கதறினார், அப்பா.எனக்கு லேசாக உடல் நடுங்கியது.''ரகு... ஆணாக இருக்க அதிகாரம் போதும். ஆனால், கண்ணியமான கணவனா இருக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம். நான் அப்படி இல்லையே. அவள் அருமை புரிஞ்சு, அன்பா நடத்தியிருந்தால் இந்த தனிமை எனக்கு ஆதரவாக இருந்திருக்கும்.''அவள் தெய்வப் பெண்ணாக, என் கனவுகளில் வந்திருப்பாள். இனிமையாகப் பேசியிருப்பாள். ரகு, என்னைப் பார்க்க எனக்கே அசிங்கமா இருக்குடா. ஒண்ணு சொல்லட்டுமா?''''என்ன அப்பா?''''நம் சந்தோஷங்களுக்கும், துக்கங்களுக்கும் நாம தான் காரணம். இதை புத்தனும், வள்ளலாரும் சொல்லும் போது, நமக்குப் புரியல. ஆனால், அனுபவங்கள் நல்லா கன்னத்தில் அறைஞ்சு சொல்லிக் கொடுக்கும்போது புரியறது.''உனக்கு ஒண்ணு சொல்றேண்டா... கமலியும், அம்மா மாதிரி நட்சத்திரம். அவளை அடக்கி, அச்சுறுத்தி நீ சதோஷப்படலாம். அது எல்லாமே தற்காலிகம். ஆனால், அன்பும், நம்பிக்கையும், ஆதரவுமா இருந்தால், அதுதான் நிரந்தர இன்பம்.''என் நிலை உனக்கு வரக்கூடாது. கமலி, உனக்கு இன்னொரு அம்மாவா பேரன்பைக் காட்டுவாள். புரிஞ்சுதா?''கண்களில் பெருக்கெடுத்ததை மறைத்து, தலையாட்டினேன்.வி. சம்யுக்தா