அத்தை!
அலுவலகத்திலிருந்து திரும்பிய, ஹாசினி, உடை மாற்றி, கால், கைகளைக் கழுவினாள். மாமியார் திலகா, 'ப்ளாஸ்கில்' போட்டு வைத்திருந்த சூடான காபியை டம்ளரில் ஊற்றி, மெல்ல உறிஞ்சினாள். சுவை அமிர்தமாய் இருந்தது. 'கைமணம் கச்சிதமாக இருக்கிறதால் தானே கல்யாணம் ஆன பின்பும், மகனை கைக்குள் பிடிச்சு வச்சிருக்கு கிழடு...' என, மனதுக்குள் நினைத்தபடி, காபியை ருசித்தாள், ஹாசினி.ஹாசினிக்கும், மாமியார் திலகாவிற்கும் எப்போதும் எட்டாம் பொருத்தம் தான். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.திலகா, மத்திய அரசுப் பணியிலிருந்து, பணி நிறைவு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது.மருமகள் ஒன்று சொன்னால், மாமியார் பத்து சொல்வாள். உப்புப் பெறாத விஷயத்துக்கு எல்லாம் போர் தான்.எல்லா இடத்திலும் இருக்கிறதுதானே என்று ஆரம்பத்தில் மெத்தனமாக இருந்த கவுதமுக்கு, போகப் போக இவர்களின் சண்டை, பெரிய தலை வலியாகி போனது.நல்லவள் தான், ஹாசினி. எல்லாரிடமும் அன்பாய், பாசமாய் இருப்பாள். ஆனால், மாமியார் என்றால் எட்டிக்காய்.எல்லாரிடமும் சிரிச்ச முகமாய், பாந்தமாய் பழகுவாள், திலகா. அக்கம்பக்கத்தில் யாரும் கேட்காமலேயே ஓடிப்போய் உதவுவாள். ஆனால், மருமகள் ஹாசினியிடம், ஏட்டிக்கு போட்டி தான்.கவுதம் வீட்டிற்குள் நுழையும் முன்பே, மாமியாரும், மருமகளும் குற்றப் பத்திரிகையை வாசிக்கத் துவங்கி விடுவர். அலுவலகப் பணி, போக்குவரத்து நெரிசல் என்று அல்லாடி வரும் கவுதமுக்கு, 'சுர்'ரென்று கோபம் தலைக்கேறும்.கையிலிருந்த பையை ஹாலில் வீசி எறிந்து, பூட்ஸ் காலோடு அறைக்குள் நுழைந்து, கதவை ஓங்கி அறைந்து பூட்டுவான். ஆடைகளை மாற்றாமல் தொபுக்கடீர்னு கட்டிலில் சாய்வான்.தலை கொதிக்கும், சினம் தொண்டையை அடைக்கும், காதுக்குள் புதுவித இரைச்சல். 'ஓவென்று...' கத்தி அலறணும் போல கவுதமுக்கு இருக்கும்.காலையில், 6:00 மணிக்கெல்லாம் எழுந்து, முகம் கழுவி, அடுப்படிக்கு வந்து, கவுதமுக்கு, டிக்காஷன் துாக்கலாய் காபி கலந்து, ஹாலுக்கு எடுத்துப் போவாள், திலகா.அங்கு, ஹாசினி கொடுத்த காபியை சுவைத்தபடியே அவளோடு பேசிக் கொண்டிருப்பான், கவுதம்.'நான் அவனுக்கு பிடித்த மாதிரி காபி கலக்குவேன். நீ, காபிங்கிற பேர்ல கழனித்தண்ணி மாதிரி எதையாவது கொடுத்து தொலைப்ப...' என்பாள், திலகா.'அத்தை, அவருக்குப் பிடிச்ச மாதிரி தான், காபி போட்டுருக்கேன். நல்லாயிருக்குன்னு சொன்னாரு. உங்களுக்கும் கலந்து வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க...' என்பாள், ஹாசினி.'நாய் குடிக்குமா நீ போடுற காபியை, கொண்டு போய் சாக்கடையில கொட்டு...''அடடா... நம் வீட்டுக்கு ஒரு நாய் வாங்கி வளர்க்கலாமுன்னு நினைச்சேன். தேவையில்ல போலிருக்கே...' தயவு தாட்சண்யமின்றி பதிலடி கொடுப்பாள், ஹாசினி.'கவுதம், இன்னைக்கு மதியம், மோர்க்குழம்பும், உருளைக்கிழங்கும் தயார் பண்றேன். உனக்குப் பிடிக்குமே...' என்பாள், அம்மா.'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இன்னைக்கு, சாம்பாரும், பீட்ரூட் பொரியலும் தான்...' என்பாள், ஹாசினி.கவுதமை மையமாக வைத்து, மாமியாருக்கும், மருமகளுக்கும் ஓயாத சண்டை; வீடு, எப்பவும் போர்க்களம் தான். இதில், பொறியில் சிக்கிய எலியாய் தவிப்பான், கவுதம்.திலகாவிற்கு, மகன் கவுதம் மீது கொள்ளைப் பிரியம். சிறு வயதிலிருந்தே, அவனுக்கு பார்த்துப் பார்த்து செய்வாள். சாப்பிடுவது, டிரஸ் போடுவது, தலை வாரி விடுவது என, எல்லாவற்றிலும் திலகாவின் தலையீடு இருக்கும்.வீட்டிலிருக்கும் வரை, 'சரிம்மா... சரிம்மா...' என்று தலையாட்டிவிட்டு, வெளியே வந்தவுடன் இஷ்டத்துக்கு நடந்து கொள்வான், கவுதம்.வாரிய தலை முடியை விரல்களால் கோதி, கலைத்து விடுவான். அம்மாவிற்கு தெரியாமல் மாற்று ஆடைகளை மறைத்து எடுத்துச் சென்று, மாற்றி, தன் இஷ்டத்திற்கு இருப்பான்.மகன் தன் சொல்லைத் தட்டுவதில்லை என்பதில், திலகாவிற்கு மகா கர்வம். கவுதம் மீது வைத்த அன்பு, அவளை ஆட்டிப் படைத்தது. திருமணம் ஆகி, ஹாசினி வந்த பிறகும், திலகாவின் பிடி தளரவில்லை.'பிள்ளை மீது அத்தனை கரிசனம் இருந்தால், என்னை எதுக்குக் கல்யாணம் செய்து வைக்கணும்...' என்று சண்டையிடுவாள், ஹாசினி.வேறு எதற்காகவும் அவர்களுக்கிடையே சண்டை வருவதில்லை. சரி, கொஞ்சம் அனுசரித்துப் போக நினைச்சாலும், 'நான் எதுக்கு அனுசரிக்கணும்... கவுதம், முழுக்க எனக்கு சொந்தமானவன்...' என்பாள், திலகா.'இருபத்தி ஐந்து வருஷமா மகனை கொஞ்சிக் குலாவியாச்சே. இப்ப தான் நான் வந்துட்டேன்ல, விலக வேண்டியது தானே...' என்று வரிந்து கட்டி, மாமியாருடன் மல்லுக்கு நிற்பாள், ஹாசினி.ஒருநாள், இரண்டு நாள் இல்லை. தினம் தினம் இந்தப் போராட்டம் தொடர்ந்தது.அலுவலகம் முடிந்து வந்து, வழக்கம்போல் தன் அறைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள், ஹாசினி.ஹாலில் அமர்ந்து, புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள், திலகா. படுத்திருந்த ஹாசினி, எழுந்து தன் பீரோவில் கலைந்து கிடக்கும் துணிகளை அடுக்க ஆரம்பித்தாள்.அடுக்கிக் கொண்டிருந்தவளின் காலடியில், காபி நிறத்தில் ஒரு காட்டன் சேலை பீரோவிலிருந்து பொத்தென்று விழுந்தது. அதன் உள்ளே இருந்த ஜாக்கெட் தனியாக தெறித்து விழுந்தது.இந்த புடவை, கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கும்போது, மிகவும் பிடித்துப் போய் வாங்கியிருந்தாள், ஹாசினி.ப்ளைன் சாரி, தங்க நிறத்தில் சிறிய பொட்டுக்கள் நிரம்பிய பார்டர். அந்த புடவையை அவள் அணியும் போதெல்லாம் அத்தனை மகிழ்ச்சியாக இருப்பாள், ஹாசினி.'இந்த புடவையில் ரொம்ப அழகாய் இருக்கேப்பா...' என்று கூறுவர், தோழியர்.இந்த புடவை வாங்கி, 10 - 12 ஆண்டுகள் ஆகியிருக்கும். கொஞ்சம் பழசு தான். ஆனாலும், அவளுக்கு அந்தப் புடவை மீது, அத்தனை பிரியம்.கட்டி அலுத்த பின் எத்தனையோ புடவைகளை தங்கள் வீட்டுப் பணிப்பெண்ணுக்கும், துப்புரவு பெண்ணுக்கும் கொடுத்திருக்கிறாள். ஆனால், இந்த காபி நிற புடவை மட்டும், அவள் பீரோவில் எப்பவும் இருக்கும்.துணிகளை அடுக்கும்போதெல்லாம் அந்த புடவையை எடுத்து, தோள் மீது படர விட்டு, அழகு பார்த்துவிட்டு தான் வைப்பாள்.இன்றும் அப்படித்தான். கீழே விழுந்த புடவையை ஆசையாய் கைகளில் எடுத்து தோளில் படர விட்டாள். கண்கள் பரவசத்தில் மூடித் திறந்தன.அதேசமயம், சடக்கென உள்ளூர ஒரு உறுத்தல்.இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தவள், துணிகளை அடுக்கி முடித்து, பீரோவை மூடிவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள், ஹாசினி.புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த திலகா, ஹாசினி உட்கார்ந்ததைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து, தன் அறைக்குள் போய் விட்டாள்.காலையில், ஹாசினி அறையை விட்டு வெளியே வரும்போது, சமையற்கட்டிற்குள் இருந்தாள், திலகா.''அத்தை...'' மெல்லிய குரல், இசையாக காதில் விழுந்தது, திலகாவிற்கு.'இது எங்கே நம்மல அத்தைன்னு கூப்பிடப் போகுது. அதுவும் இவ்வளவு மென்மையாய்...' என நினைத்தபடி, பாலை காய்ச்சினாள், திலகா.அவளின் அருகே வந்த ஹாசினி, ''அத்தை, உங்க மகனுக்கு பிடிச்ச மாதிரி நீங்களே காபி கலக்குங்க; அப்படியே எனக்கும்,'' என்றாள்.ஹாசினியின் வார்த்தையை கேட்ட திலகாவிற்கு மயக்கம் வருவது போல் இருந்தது. நம்ப முடியாமல் மருமகளை விழி உயர்த்தி பார்த்தாள். விழி ஓரம் நீர் கசிந்தது.''அத்தை...'' என்ற ஹாசினிக்கு, அதற்குமேல் வார்த்தை வரவில்லை.சுதாரித்த திலகா, இரண்டு டம்ளரில் காபியை கலந்து, ''இந்தா ஹாசினி... நீயும், அவனும் குடிங்க,'' என்றாள். ''நீங்களும் வாங்க அத்தை!''இருவரின் வார்த்தைகளும் அவர்களால் உச்சரிக்கப்பட்டனவா என்ற அவநம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது உண்மை தான்.நேற்று மாலை, துணிகளை அடுக்கிய, ஹாசினியின், காபி நிற புடவை தான், அவளுக்குள் இந்த மாற்றத்தை உண்டாக்கி இருந்தது.உயிர் இல்லாத புடவை, தன் மனதில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியது.'உயிரிலும், ரத்தத்திலும், உடம்பிலும் கலந்த, கவுதம், அத்தையின் மனதில் எப்பவும் பரவசத்தை ஏற்படுத்தக் கூடியவன் என்பதை எப்படி மறந்தேன். மகனுக்கு, மனைவி என்று ஒருத்தி வந்து விட்டால், அம்மா முழுவதுமாக விலகிக் கொள்ளணுமா... அவளின் ஆசையும், பாசமும், பரிவும் நிமிடத்தில் துண்டித்து போய் விடுமா! 'பத்து மாதம் வயிற்றில் சுமந்தவள். ரத்தத்தைப் பாலாக்கி ஊட்டியவள். இடுப்பிலும், தோளிலும் துாக்கிச் சுமந்தவள். தன் கனவை பிள்ளையிடம் பார்க்க விரும்பியவள். அவள் உயிர் இருக்கும் வரை, பெற்ற பிள்ளைங்கிற கரிசனம் இருக்கத் தானே செய்யும்?'பழசாகிப் போனதும் துாக்கிப் போட முடியாம, ஒரு புடவையை ஆரத்தழுவி ஆனந்தப்படும் எனக்கு, ஒரு முதியவளின் அன்பை புரிந்து கொள்ள முடியாமல் போயிடுச்சே... ச்சே, என்ன மனுஷி நான்!' இப்படி நெடுநேரம் சிந்தித்தவளின், தேன் கலந்த வார்த்தை தான், அந்த, 'அத்தை!' உ. அனார்கலி