உள்ளூர் செய்திகள்

ஆண் குழந்தை பிறந்தால் தான் குளியல்!

உ.பி., மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் கைலாஷ் சிங், வயது 66. நீண்ட சடை முடியுடனும், அழுக்கு படிந்த ஸ்வெட்டருடனும் வலம் வரும் இவரை தெரியாதவர்கள், வாரணாசியில் அதிகம் இருக்க முடியாது. 'அப்படி என்ன சாதனை செய்து விட்டார்' என, படிக்கும்போதே, உங்களின் புருவம் உயர்கிறதா? கடந்த 38 ஆண்டுகளாக, இவர் குளித்ததே இல்லை என்பது தான், இவர் செய்த சாதனை.'ஆண் குழந்தை பிறக்கும் வரை, குளிக்க மாட்டேன்' என, திருமணம் ஆன புதிதில் சபதம் செய்துள்ளார். இதுவரை, ஏழு பெண் குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டார். ஆனாலும், ஆண் குழந்தை பிறக்காததால், தன் சபதத்தை தொடர்கிறார். 'ஒரு நாளைக்கு குளிக்கவில்லை என்றாலே, உடலில் நாற்றம் தாங்க முடியாதே. உங்களால் எப்படி, 38 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்க முடிகிறது?' என, கேட்டால், 'ஒரு லட்சியத்தை நோக்கி, பயணம் செய்யும்போது, ஒரு சில விஷயங்களை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்...' என, தத்துவ மழை பொழிகிறார்.'லட்சியத்துக்காக அவர் வேண்டுமானால், நாற்றத்தை சகித்துக் கொள்ளலாம். அவரது மனைவி எப்படி சகித்துக் கொள்கிறார்?' என, அவரது மனைவி கலாவதியிடம் கேட்டபோது, 'அதை ஏன் சார் கேட்கிறீங்க. அவர் வீட்டிற்குள் நுழைந்தாலே, நாற்றமும், கூடவே வந்து விடும். ஒருமுறை, கட்டாயப்படுத்தி, குளிக்க வைக்க முயற்சித்தோம். கடும் ஆத்திரமடைந்த அவர், கம்பு, கத்தியை கையில் எடுத்து, எங்களை தாக்க வந்து விட்டார். அதிலிருந்து, விஷப் பரீட்சையை ஒத்தி வைத்து விட்டோம்...' எனக் கூறினார்.கைலாஷ் சிங்கோ , 'விரைவில் எனக்கு ஆண் குழந்தை பிறந்து விடும். அதற்கு பின், என் சபதத்தை முடித்து விட்டு, குளித்து விடுவேன். அதுவரை, அந்த ஆண்டவனே வந்தாலும், என்னை, யாரும், கட்டாயப்படுத்தி, குளிக்க வைக்க முடியாது...' என, கண்களில் பொறி பறக்க பேசுகிறார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !