முதலாளி! (19)
சில சமயங்களில் உடன் இருப்போர் சரியான யோசனைகள் சொல்லவில்லை என்றால், முக்கியமான விஷயங்கள் கவனத்திற்கு வராமலே போய்விடும். தவறான அறிவுரைகள் சொல்வோர் எங்கும் இருப்பர். சினிமா உலகில், ராமசுந்தரம் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலைக் கற்றுக் கொண்டு வந்த போதிலும், நடிக, நடிகையர் தேர்வில் தன் யோசனையாளர்களைத் தான் நம்பி இருந்தார்.புதிய படத்திற்கு நடிக, நடிகையர் தேர்வுக்காக, சென்னையில் முகாமிட்டிருந்தார் ராமசுந்தரம். புதிய முகங்களை அறிமுகம் செய்ய வேண்டும், என்ற எண்ணம் அவருக்கு.அவருடன் எப்போதும் இருக்கும் இரு நண்பர்களும், ஒரு உதவி டைரக்டரும் அறையினுள் அமர்ந்திருக்க, தேர்வுக்காக பிரபல நடிகை ஒருவர், தன் மகளை அழைத்து வந்திருந்தார்.உதவி டைரக்டர் முதலில் கேட்ட கேள்வி களுக்கு, ஒழுங்காக பதில் சொன்ன அந்த பெண், அடுத்தபடியாக, 'உனக்கு நடனமாடத் தெரியுமா, ஸ்டைலாக நடக்கத் தெரியுமா...' என்றெல்லாம், இடக்கு மடக்காக கேள்வி கேட்கவும், கோபித்துக் கொண்டு போய் விட்டார். அந்தப் பெண் தான் இந்தி பட உலகையே, தன் நடிப்பால் அசர வைத்த ரேகா. ஒரு அருமையான நடிகையை, மாடர்ன் தியேட்டர்ஸ் இழந்ததற்கு அந்த உதவி டைரக்டர் தான் காரணம் என்று கூறினர்.நடனம் நன்றாகத் தெரிந்த ஒரு பெண்ணை, மறுநாள் தேர்வுக்கு வரச் சொல்லியிருந்தனர். வசதியில்லாததால் அப்பெண் டாக்சியில் வந்தார். மிகவும் அழகாக இருந்தார். ஆனால், கீழ்த்தாடை சற்று நீளமாக தெரிகிறது என்று உடன் இருந்தவர்கள் சொல்ல, அப்பெண்ணும் நிராகரிக்கப்பட்டார். பிற்காலத்தில், கனவுக் கன்னியாக ஜொலித்த ஹேமமாலினி தான் அந்தப் பெண்.மற்றவர்கள் சொல்லும் யோசனையைக் கேட்டு, சொந்தமாக முடிவெடுக்கும் திறமை, டி.ஆர்.சுந்தரத்திற்கு உண்டு. அது, அவருக்கு அனுபவம் கற்றுத் தந்த பாடம்.இரண்டு, மூன்று படங்களுக்கு பின் தான், நிர்வாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தேர்ச்சி பெற்றார் ராமசுந்தரம்.வல்லவன் ஒருவன் படத்திற்கு பின் ராமசுந்தரம், எதிரிகள் ஜாக்கிரதை என்றொரு படத்தை தயாரித்தார். இதில், ரவிச்சந்திரன், எல்.விஜயலட்சுமி, மனோகர் போன்றோர் நடித்தனர். இதுவும், ஏறக்குறைய ஸ்டன்ட் படமாகவே இருந்தது.மாறுதலுக்காக, ஒரு சமூகப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கம்பெனி டைரக்டர்கள் கேட்டுக் கொள்ளவே, காதலித்தால் போதுமா? எனும் சமூகப்படம் தயாரானது. இதில், ஜெய்சங்கர், வாணிஸ்ரீ போன்றோர் நடித்தனர். மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டதால், இப்படமும் நன்றாக போயிற்று. அடுத்த படம் எடுப்பதற்கு முன், எதிரிகள் ஜாக்கிரதை படத்தை தெலுங்கில், 'டப்' செய்து வெளியிட்டனர்.இதற்குப் பின் தான், வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஒரு புதுவிதமான கதையை தயார் செய்தார். ஜெயிலில் இருந்து தப்பி வந்த நான்கு கைதிகள் ஒரு பேங்க்கை கொள்ளை யடித்து, அப்பணத்தை மூலதனமாக வைத்து ஒரு சினிமாப் படத்தை எடுக் கின்றனர். படமோ நூறு நாட்கள் ஓடுகிறது. அந்த மகிழ்ச்சியில், அவர்கள் நால் வரும் மீண்டும் சிறைக்குப் போகின்றனர். இக் கதையை, நான்கு கில்லாடிகள் எனும் தலைப்பில் ராமசுந்தரம் படமாக எடுத்தார். ஜெய்சங்கர், மனோகர், ஆனந்தன், ஓ.ஏ.கே. தேவர், தேங்காய் சீனிவாசன், சி.ஐ.டி.சகுந்தலா போன்றோர் நடித்தனர். கதை புதுவிதமாகவும், காமெடியாகவும் இருந்ததால் படம் மிகவும் நன்றாக போயிற்று.தொடர்ந்து வந்தது, ஜஸ்டிஸ் விஸ்வநாதன். இந்த படத்தை தெலுங்கிலும் எடுத்தனர்.புதிய கதைகளுக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டார் ராமசுந்தரம். அவருக்கு, தன் தந்தையைப் போல் ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. நிறையப் படித்து, தான் படித்த கதைகளை மற்றவர்களுடன் விவாதிப்பார். ஓரளவு, படவுலகத்தின் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், 1970ல் அவர் எடுத்த, கருந்தேள் கண்ணாயிரம் ஒரு தோல்விப் படமாக அமைந்து விட்டது.இதனால், மனம் சோர்ந்து போன ராமசுந்தரம் படம் எடுப்பதை சற்றே ஒத்தி போட்டார். ஏன் படங்கள் தோல்வியடைகின்றன, வெற்றிப் படங்களுக்கு என்ன பார்முலா என்பதைப் பற்றி யோசித்து, தந்தையிடம் பணிபுரிந்த, தொழிலாளர்களிடம் கலந்து, ஆலோசனை செய்தார்.எல்லாவற்றிற்கும், நல்ல கதை அடிப்படை என்பது பாலபாடம். அதை ராமசுந்தரம் புரிந்து கொண்டு இருந்தாலும், நல்ல கதைக்கு பஞ்சம் எதனால் ஏற்பட்டது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கதை சொல்ல வரும் கதாசிரியர்கள் அரைத்த மாவையே அரைத்தனர்.அடுத்து, 1972ல் பலத்த ஏற்பாடுகளுடன் ஜெய்சங்கர், லட்சுமி ஆகியோர் நடிக்க, தேடி வந்த லட்சுமி எனும் படத்தை எடுத்தார் ராமசுந்தரம். படம் சுமாராக ஒடியது.1974ல், பிராயசித்தம் படமும், 1979ல், வல்லவன் வருகிறான் எனும் படமும், அதே வருடம், காளி கோயில் கபாலி எனும் படமும் எடுக்கப்பட்டன. இந்த படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை என்றாலும் சுமாராகப் போயின.இதனால், தயாரிப்பில் சற்று தொய்வு ஏற்படவே, ஆண்டிற்கு ஒன்று என்று 1980ல், துணிவே தோழன் என்ற படமும், 1981ல், அன்று முதல் இன்று வரை எனும் படமும், 1982ல், வெற்றி நமதே எனும் படமும் எடுக்கப் பட் டன. இந்தப் படங் களும், எதிர் பார்த்த அளவுக்கு வெற்றியை தேடித் தரவில்லை.தயாரிப்பில், சரி யான ஆலோசனைகள் இல்லாததால், மாடர்ன் தியேட்டர்சின் தயாரிப்புகள், தரம் இல்லாமல் போயின. அதனால், பட விநியோகஸ்தர்கள் படங்களை குறைந்த விலைக்கு கேட்டனர். இதனால், கம்பெனியின் வருவாய் குறைந்து விட்டது. தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுக்க முடியாமல் போனதற்கு, முக்கிய காரணமாக, அங்கே வேலை செய்து வந்த தொழிலாளர்கள், யார் யாரையோ சுட்டிக் காட்டினர். ஆனால், தலைமை ஏற்று நடத்த, அங்கே இன்னொரு டி.ஆர்.சுந்தரம் இல்லையே என்று தான் ஸ்டுடியோ நிர்வாகம் கவலைப்பட்டது. தொடர்ந்து, நஷ்டம் ஏற்பட, படம் எடுப்பதை நிறுத்துவதை தவிர, வேறு வழி இல்லாமல் போய்விட்டது.இந்தக் காரணத்தினால், மாடர்ன் தியேட்டர்ஸ் தன்னுடைய தயாரிப்பை நிறுத்திக் கொண்டது.சினிமா உலகமே இதற்காக மிகவும் வருந்தியது. ஏனெனில், தரமான படங்களை தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருந்த, ஒரு பெரிய நிறுவனம், தன் தயாரிப்பை நிறுத்தி விட்டது தான், இதற்கு காரணம். இதற்காக வெளிநபர்கள் யார் மீதும் குறை சொல்ல முடியாது. முழுக்க, முழுக்க இது ஸ்டுடியோ நிர்வாகத்தில் இருந்த சிலரின் அசிரத்தையால் தான் நடந்தது என்று, கலையுலக வல்லுநர்கள் பேசிக் கொண்டனர். — தொடரும்.ரா. வேங்கடசாமி