உள்ளூர் செய்திகள்

பாக்ஸ் மேட்டர்

3 கோடி ரூபாய்  மதிப்பில்  சொகுசு ரயில் பெட்டி!ஜனாதிபதி பயணம் செய்வதற்கென்றே  நவீன வசதிகள் கொண்ட சொகுசு ரயில் பெட்டி (சலூன்)யை ரயில்வே அமைச்சகம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் வெளிநாடுகளுக்கு  பயணம் செய்ய அதிநவீன சொகுசு விமானங்கள் உள்ளன. உள்நாட்டில் பயணம் செய்ய விமானப்படை விமானங்கள் உள்ளன. ரயிலில் பயணம் செய்ய மட்டும் விசேஷ ரயில் பெட்டிகள் இல்லை. இந்த குறையைப் போக்க, பல்வேறு அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய ரயில் பெட்டியைத் தயாரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் மாதிரி ஆகியவை தற்போது ஜனாதிபதி மாளிகையின் அனுமதி பெற அனுப்பப்பட்டுள்ளது.இப்பெட்டியில், கருத்தரங்க அறை, உணவு அறை, படுக்கை அறை, நூலகம் ஆகிய பல்வேறு அதிநவீன வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.  ஒரு ஆண்டிற்குள் இப்பெட்டியைத் தயாரித்து முடிக்க கபூர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலை அதிகாரிகளும், ஊழியர்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மூன்று கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப் படும், 'சலூன் கோச்' என அழைக்கப்படும் இந்த நவீன பெட்டி, டில்லியில் ராணுவ பாதுகாப்பில் எப்போதும் இருக்கும். — ஜோல்னா பையன்.வாட்டர் பாட்டில்களுக்கு  பயந்து ஓடும் வெறி நாய்கள்!விரட்டி, விரட்டி கடிக்கும் வெறி நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி? கேரளாவில் புது வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மாநிலத்தில்  கண்ணூர், காசர்கோடு ஆகிய இரு மாவட்ட மலையோர பகுதிகளில், வெறி நாய்களின் அட்டகாசம் அதிகம். இந்த ஊர்களில் உள்ள மக்கள், தங்கள் வீட்டு வராந்தா, முற்றங்களில் மினரல் வாட்டர் பாட்டில்களில் நீர் நிறைத்து வைத்து விடுகின்றனர். அந்த பாட்டில்களைப் பார்த்த  வெறி நாய்கள், பயந்து ஓடி விடுகின்றன. அந்த பாட்டில்களைப் பார்த்து ஏன் நாய்கள் ஓடுகின்றன என தெரியவில்லை.  எனினும்,  'நீர் நிறைந்த பாட்டில்களில் தங்கள் உருவத்தை பார்த்து தான் நாய்கள் பயந்து ஓடுகின்றன...' என, சிலர் தெரிவித்துள்ளனர். ஏதாவது ஒரு வகையில் வெறி நாய்களை பிடித்து அப்புறப் படுத்தினாலும், அடுத்த சில தினங்களிலேயே வேறு நாய்கள் வந்து தொல்லை கொடுக்கத் துவங்கி விடுகின்றன.  இப்போது, இந்த ஊரில் எல்லாரும் பாட்டிலும், கையுமாகத்தான் அலைகின்றனர்.  — ஜோல்னா பையன்.உலக மகா குண்டு குழந்தை!பிறந்து பத்து மாதமே ஆன குழந்தை எடை 20 கிலோ இருக்குமா? இப்படி ஒரு அதிசய குழந்தை சீனாவில் இருக்கிறது.சீனாவில் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில் சங்ஷா என்ற நகரில் ஒரு மருத்துவமனையில் இந்த குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இந்த குழந்தை பிறந்து பத்து மாதங்களே ஆகிறது. இன்னும் பெயர் கூட வைக்கவில்லை. பிறந்த போதே அதிக எடையுடன் இருந்தது. நாட்கள் ஆக, ஆக குழந்தையின் எடை வேகமாக அதிகரித்தது. இப்போது, இந்த குழந்தை 20 கிலோ எடை உள்ளது. ஆறு வயது குழந்தைக்கு இருக்க வேண்டிய எடை, இந்த பத்து மாத குழந்தைக்கு இருப்பது, டாக்டர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. குழந்தையின் எடை தொடர்ந்து கூடிக் கொண்டே போகிறது. எனினும் குழந்தைக்கு வேறு உடல் நல குறைபாடுகள் எதுவும் இல்லை. எடையை கட்டுப்படுத்த, குழந்தையை  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அதன் பெற்றோர் . — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !