உள்ளூர் செய்திகள்

பாக்ஸ் மேட்டர் !

மிக விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம்!ஐம்பது கோடி ரூபாய் செலவு செய்து, கிறிஸ்துமஸ் மரம் அமைக்க முடியுமா? இப்படி ஒரு விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் ஐரோப்பிய நாட்டில் அல்ல. இஸ்லாமியர்கள் வசிக்கும் அபுதாபியில் என்பதுதான் கூடுதல் விசேஷம். இந்த நகரில் அமைந்துள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலின் வரவேற்பு அறையில் தான் இந்த பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டது. 43 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மரத்தில், 131 வகை ஆபரணங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. அந்த ஆபரணங்கள் எல்லாமே தங்கம், வைரம், முத்துக்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 50 கோடி ரூபாய் செலவில் இந்த மரம் உருவாக்கப்பட்டது. ஓட்டலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்த மரத்தை வியப்புடன் பார்த்துச் சென்றனர். அதன் அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளவும் தவறவில்லை. — ஜோல்னா பையன்.பாம்பு மன்னன் கொசு கடித்து சாவு!மிகக் கொடிய விஷம் கொண்ட பல பாம்புகள், பல முறை கொத்தியும் பலியாகாத அதிசய பாம்பு மனிதன், கொசுக்கடிக்கு பலியாகியுள்ளார். இந்த நூதன சம்பவம், ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த ஆசாமியின் பெயர் கே.ராஜ்குமார்; பிரபல பாம்பு மன்னன். ஏராளமான கொடிய விஷப் பாம்புகளுடன் கூண்டில் பல நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்தவர். ஐதராபாத்தில் வசித்து வந்த இவருக்கு, நகரில் எங்கு பாம்பு இருந்தாலும் போன் வரும். உடனே, அங்கு போய் துணிச்சலாக பாம்புகளைப் பிடித்து விடுவார். புனே பாம்பு பூங்காவிலும், அமெரிக்காவில் பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவிலும் இவர் பாம்புகள் குறித்து பயிற்சி பெற்றுள்ளார். இருபத்தியொன்பது முறை பாம்பு கடியில் இருந்து தப்பியுள்ளார். சமீபத்தில், இவர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, சில நாட்களிலேயே மரணம் அடைந்தார். மலேரியா காய்ச்சல் ஏற்பட காரணம், இவர் வசித்த பகுதியில் அதிகம் உள்ள கொசுக்கள் தான். பாம்புக்கு தப்பியவர், கொசுக்கடியில் உயிரை விட்டார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !