காரிய நட்பு!
அமைச்சராயிருக்கும், தன் பழைய நண்பர் ஆதிகேசவனை, சந்திப்பதற்காக, அவரது வீட்டிற்கு, தன் கிராமத்து நண்பருடன் கிளம்பிச் சென்றார் கிருஷ்ணமூர்த்தி.ஒரு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புப் பிரச்னையில், தனக்குச் சாதகமாய் காரியம் சாதிப்பதே, அவரது பயண நோக்கமாய் இருந்தது.கிருஷ்ணமூர்த்தி, கிராமத்து விவசாயியோ, கூலித் தொழிலாளியோ கிடையாது. அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர். அவருடன் சேர்ந்து செல்லும், அவர் நண்பரும் ஆசிரியர் தான்.பஸ் நிலையத்தில், கிருஷ்ணமூர்த்தியைக் கண்டதும் ஆவலாய், அவரிடம் ஓடிவந்தார் ஒருவர். கிருஷ்ணமூர்த்தியைத் திடீரெனக் காண நேரிட்டதில், அந்த மனிதருக்கு அளவற்ற மகிழ்ச்சி. சந்தோஷம் ததும்பி வழியும் அவர் மனசு, அவர் கண்களில் மின்னியது.''கிருஷ்ணமூர்த்தி சுகமா இருக்கியா... என்னைத் தெரியுதா? மனோகரன்ப்பா... உன் பழைய கூட்டாளி...நரிக்குடி மனோகரன்ப்பா...ராஜகுலராமன்ல சேந்து படிச்சோமே மறந்திட்டியா?''அந்த ஆளையே இமை கொட்டாமல், இறுகிய முகத்தோடு இரண்டு நிமிடம் யோசனையாய் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.அந்த ஆள் அழுக்கு வேட்டி, கிழிந்த சட்டை, பரட்டைத்தலையும் தாடியுமாய், ஒரு பிச்சைக்காரனைப் போல இருந்தார்.அவர் கோலத்தைப் பார்த்து, தலையில் அடித்துச் சிரித்த கிருஷ்ணமூர்த்தி, சிறு கையசைப்பில், அவரைப் புறக்கணித்தார்.''நான் கிருஷ்ணமூர்த்தி இல்லய்யா... வேற ஆள்... போ போ... நீ நினைக்கிற ஆள் நான் கிடையாது.''கிருஷ்ணமூர்த்தி எரிந்து விழுந்த பிறகும் கூட, அந்த ஆள் இவரை விடுவதாய் இல்லை.''நெத்தியில பிறைநிலா மாதிரி அதே கறுப்பு மச்சம்... நிச்சயமா நீ கிருஷ்ணமூர்த்தி தான், ஏன் பொய் சொல்ற...'' என்றவாறு, தோளில் கை போட, அவர் கையைச் சட்டென்று எடுத்தெறிந்த கிருஷ்ணமூர்த்தி, அடிப்பதற்கு கை ஓங்கினார்.''சரி சரி கோபப்படாதீங்க... எங்க கிருஷ்ணமூர்த்தியப் போலவே, நீங்க இருந்ததால உரிமையாத் தொட்டுட்டேன்... மன்னிச்சிருங்க. என் பேரு மனோகரன்... ஊர் நரிக்குடி. உங்க பேரத் தெரிஞ்சுக்கலாமா?''''ம்...தெரிஞ்சு என்ன செய்யப்போற சுந்தரபாண்டி... தூத்துக்குடி... போதுமா? போடா... போ... போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திருவேன் ஓடிப்போயிரு... விளக்கெண்ணை மாதிரி விளையாடுறான்.''கிருஷ்ணமூர்த்தி, அந்த ஆள் மீது சற்று கூடுதலாகவே கோபப்பட்டபோது, அவர் நண்பர்தான், ''சரி,சரி விடுங்க...'' என்று, இதமாய் பேசி கோபத்தை தணிய வைத்தார்.தன் பெயர் மனோகரன் என்று கூறிக் கொண்ட அந்த நபர், அந்த இடத்தை விட்டே போய்விட்டார். அவர் போன பின்தான், கிருஷ்ணமூர்த்தி, தன் நண்பரிடம் சிரிக்கத் துவங்கினார்.''அந்தப்பய என்னோட படிச்சவன் தான், பழகினவன் தான்... ஆனா, இப்ப அவன் நிலமைய பாத்தீகளா? பிச்சை எடுத்துக்கிட்டு திரியுறான்... இவன் கிட்ட, நமக்கென்ன உறவு... அது அவசியமா? அம்பது, நூறுன்னு கேப்பான் அல்லது கூடவே வருவான்.''அமைச்சர் வீட்டிற்கு இவனைக் கூட்டிட்டுப் போக முடியுமா? போனா நம்மையும் சேத்து கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளிருவாங்க, அதனால தான் தெரியாதவன் மாதிரி நடந்துக்கிட்டேன்... சரிதானே சார்?''கிருஷ்ணமூர்த்தி தான் நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்திய போது, அவர் நண்பர், அதை ஏற்றுக் கொண்டோ அல்லது மறுத்தோ பேசாமல், சிறு புன்சிரிப்பில் தலையாட்டினார்.பள்ளிப் பருவத்தில், அமைச்சருடன் தான் ஒரே வகுப்பில், ஒரே வரிசையில் உட்கார்ந்து படித்த நாட்களில், நிகழ்ந்த சில சுவையான நிகழ்வுகளை, தன் நண்பரிடம் பகிர்ந்து கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.இருவரும் அமைச்சரின் வீட்டை அடைந்த போது, வீட்டில் பார்வையாளர் கூட்டம் அதிகமாய் இருந்தது. பெயர் கொடுத்துவிட்டு, இருவரும் ஒரு பிரபலமான ஓட்டலுக்குச் சென்று உணவருந்தி, அதன் பின் அங்கங்கே சுற்றித்திரிந்து, பொழுது போக்கிவிட்டு, அமைச்சரின் வீடு வந்தபோது, ஓரிருவர் மட்டுமே உட்கார்ந்திருந்தனர்.கிருஷ்ணமூர்த்தியும், அவரது நண்பரும் அமைச்சரின் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அமைச்சரைப் பார்த்ததுமே கிருஷ்ணமூர்த்தி, தாவிச் சென்று சந்தோஷமாய் தழுவிக் கொண்டார். சால்வை அணிவித்து, பூச்செண்டு கொடுத்து, அமைச்சரின் புகழ் பாடினார்.''இவர் பெயர் திருமலைச்சாமி...என்னோட நண்பர், இவரும் ஆசிரியரா இருக்கார்,''என்று தன் நண்பரை, அமைச்சரிடம் அறிமுகம் செய்து வைத்த கிருஷ்ணமூர்த்தியிடம், புன்முறுவலுடன் தலையாட்டினார் அமைச்சர் ஆதிகேசவன்.அதன் பின் அமைச்சர், கிருஷ்ணமூர்த்தியின் முகத்தையே குறு குறுவென்று பார்த்த போது... சிரித்தார் கிருஷ்ணமூர்த்தி.''ஏன் அப்படிப் பாக்கிறீக... அதே கிருஷ்ணமூர்த்தியா இருக்கேனா... அல்லது மாறீட்டேனா... எப்படி இருக்கேன்?'''இல்லை' என்பது போல் அமைச்சர் தலையசைத்தார்.''பரவாயில்லை... மாறலயா... அப்படியே தான் இருக்கேனா... பிரிஞ்சு முப்பது ஆண்டு இருக்கும் இல்லையா?''இல்லை என்பது போல் அமைச்சர் தலையசைத்தார்.''முப்பது வருஷம் இருக்காதுங்கிறீகளா? அப்ப கடைசியா எங்கே சந்திச்சோம்?''கிருஷ்ணமூர்த்தி கேட்ட போது, தன் தலையைச் சொறிந்தபடி அமைச்சர் சலிப்போடு, எங்கேயோ கண்களை ஓடவிட்டார்.''நீங்க யாரு? வந்ததும் வராததுமா... கூட வந்தவரை அறிமுகப்படுத்துனீக...உங்களைப்பத்தி எதுவுமே சொல்லல... யாரு நீங்க... என்ன வேணும்... என்ன விஷயமா வந்தீக?''அமைச்சர் சற்றுக் கோபமாய் கேட்டபோது, கிருஷ்ணமூர்த்தி மிகப் பலமாய் சிரித்தபடி, அமைச்சரின் தோளை உரிமையோடு ஓங்கி தட்டினார்.''இன்னமும், அந்தப் பழைய சேட்டை போகலியே... எப்பவுமே இப்படித்தான் விளையாடுவான் ...'' என்று, தன் நண்பரிடம் கிருஷ்ணமூர்த்தி சிலாகித்த போது, ''மிஸ்டர் பி சீரியஸ்... யாருய்யா நீ... அவன் இவன்னு பேசுற?'' என்ற அமைச்சரின் முகம் சிவந்து சத்தமாய் எகிறிய போது, கிருஷ்ணமூர்த்தியின் முகம் சுருங்கி அசிங்கமானது.''நான்... காளவாசல் கிருஷ்ணமூர்த்தி, ராஜகுலராமன்ல நாம சேந்து படிச்சோமே... நினைவில்லையா... சிவகாசி தங்கமணி தியேட்டர்ல நாம படம் பார்த்த காலமெல்லாம் மறந்துபோச்சா? நம்ம சீனிராஜ், லிங்கசாமி அண்ணாச்சி வீட்ல எத்தனை நாள் சாப்பிட்டு, அங்கயே படுத்திருப்போம்... மறந்துட்டியா?''கிருஷ்ணமூர்த்தி பழைய நிகழ்வுகளை, வாய்ப்பாடு ஒப்பிப்பது போல் வரிசையாய் ஒப்பித்து, அமைச்சரின் முகத்தையே ஆவலாய் பார்த்தார்.கால் நிமிடம் யோசிப்பது போல் கண்மூடிக் கொண்ட அமைச்சர், தன் முக இறுக்கம் மாறாமல் வேகமாய் தலையசைத்தார்.''நீங்க யாருன்னே தெரியல... தயவு செஞ்சு என்ன விஷயமா வந்தீங்க... வந்த விஷயத்த சொல்லுங்க,'' என்று அமைச்சர் அதட்டிக் கேட்டதுமே, கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் கலங்கிவிட்டன.''இன்னிக்கு நீங்க அமைச்சரா இருக்கலாம்... அதுக்காக உங்க பழைய வாழ்க்கை இல்லேன்னு போயிருமா? நம்ம நட்பைப்பத்தி, ஒரு புத்தகமே எழுதலாம்... அவ்வளவு சம்பவங்களை வரிசையா சொல்லியும் கூட என்னைத் தெரியலேங்கிறீங்களே...''தூங்கிறவங்கள எழுப்பலாம்... தூங்கற மாதிரி நடிக்கிறவங்கள எழுப்பவே முடியாது. நீங்க என்னைத் தெரியாதவன் மாதிரி நடிக்கிறீங்க... ஏன்னா அமைச்சராயிட்டீங்க. நான் ஒரு சாதாரண ஆசிரியர்தானே?பதவி வரும், போகும். ஆனா, நட்பு நிலையானதுங்க... அதுக்காக நட்பை இழந்துரக் கூடாது சரி ... சரி... தெரியாத உங்களோட இனி பேச என்ன இருக்கு... வர்றோம்,'' என்று, கும்பிட்டு விட்டு கிளம்பினார் கிருஷ்ணமூர்த்தி.''ஒரு நிமிடம் காத்திருங்க...'' என்று, அவரை காக்க வைத்துவிட்டு உள்ளே போன அமைச்சர், மனோகரனின் தோளில் கை போட்டப்படியே வெளியே வந்தபோது, கிருஷ்ணமூர்த்தியின் முகம் பேயறைந்தது போல் ஆனது.''மனோகரா இவரை உனக்குத் தெரியுதா? ராஜகுலராமன்ல நாம படிக்கும் போது, இவர் நம்மோட சேந்து படிச்சவர் தானா?''அமைச்சர், மனோகரிடம் கேட்டபோது... மனோகரன், கிருஷ்ணமூர்த்தியை பார்த்து சிரித்தார்...''நம்ம கிருஷ்ணமூர்த்தி மாதிரியே இருக்கிறாரு... காளவாசல் கிருஷ்ணமூர்த்தியை நகல் எடுத்த மாதிரியே இருக்காரு... நானும், அப்படித்தான் நம்பி, பஸ் நிலையத்துல, இவர் தோள்ல கை போட்டுப் பேசிட்டேன், அடிக்க வந்திட்டார் மனுஷன். இவர் பெயர் சுந்தரபாண்டி, ஊர் தூத்துக்குடி... இவரே என்கிட்ட சொன்னார்,''என்று மனோகரன், அமைச்சரிடம் தெரிவித்த போது, கிருஷ்ண மூர்த்தியை அமைச்சர் கோபமாய் பார்த்தார்.''பிறகு என்னங்க... என் நண்பர் கிட்ட சுந்தரபாண்டின்னும், ஊர் தூத்துக்குடின்னும் சொல்லிருக்கீங்க... என்கிட்ட வந்து, கிருஷ்ணமூர்த்திங்கிறீங்களே... என்ன விஷயம்? ஏதாவது மோசடி செய்ய வந்தீங்களா... போலீசைக் கூப்பிடவா?''அமைச்சர் பலமாக அதட்டிய போது, கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிந்தது கிருஷ்ணமூர்த்திக்கு.குற்ற உணர்வோடு, மனோகரனைப் பார்த்து, மறுகணமே கூனிக்குறுகினார்.''மனோகரா... என்னை மன்னிச்சிடு. உன்கிட்ட நான் சொன்னது பொய்தான். நான் காளவாசல் கிருஷ்ணமூர்த்தி தான். நீ நரிக்குடி மனோகரன்... உங்க அப்பா பெயர் செல்லத்துரை... நாம படிக்கும் போதே, உங்க அம்மா இறந்திட்டாங்க, உங்க அண்ணன் ஆண்டித்துரை, மதுரை மருத்துவமனையில இருந்தப்போ... நான், நீ, ஆதிகேசவன் மூணு பேரும்தான் பார்க்க போயிருந்தோம். மதுரையில, 'மூன்றெழுத்து' படம் கூட பாத்துட்டு வந்தோம்.''கிருஷ்ணமூர்த்தி, மனோகரனிடம் மளமளவென்று ஒப்பித்தபோது, அமைச்சரும், மனோகரனும் சேர்ந்து சிரித்தனர்.''வாழ்க்கையில எல்லாம் இழந்து வறுமையில வாடினாலும், மனோகரன் உன்னைத் தேடி வந்து உதவி கேட்கல. திடீர்ன்னு வழியில உன்னைப் பார்த்த சந்தோஷத்துல, பேச வந்தவனை அவன் நிலைமையப் பாத்து, 'நீ யாரோ... எனக்குத் தெரியாது'ன்னு, ஒரு நண்பனை விரட்டி விட்டுட்ட... அமைச்சரா இருக்கிறதால, இன்னொரு நண்பனை, நீயே தேடி வந்து நட்பு கொண்டாடுறியே... எப்ப என்னோட இன்னொரு நண்பனை, நீ தெரியாதுன்னு அவமதிச்சியோ அப்பவே நீ செத்துட்ட; உன் நட்பும் செத்திருச்சு. போடா வெளியில...''அமைச்சரின் நியாயமான கோபத்தின் முன், ஒரு உண்மையான நட்பின் குமுறலின் முன், கிருஷ்ணமூர்த்தியின் கள்ளம் கபடம் நிறைந்த போலி நட்பு, எதிர் நிற்க இயலாமல் புறமுதுகு காட்டியது.''ச்சீ... உங்களோட நானும் வந்து அசிங்கப்பட்டுட்டேன். நீயெல்லாம் என்ன மனுஷன்?''கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து வந்த நண்பர், வேகமாய் முன்னால் சென்றுவிட, பின்னால் தனிமையே தனக்குக் கிடைத்த தண்டனையாய் தளர்ந்து நடந்தார் கிருஷ்ணமூர்த்தி.***வே. குருநாதன்