உள்ளூர் செய்திகள்

நாடு சுத்தலாம் வாங்க!

பாலைவன சாகச பயணம், 30 நிமிடம் தொடர்ந்தது. பயணத்தின் முடிவில், பாலைவனத்தின் ஒரு பகுதியில், செயற்கையாக அமைக்கப்பட்ட ஒரு திறந்தவெளி அரங்கில் எங்களை இறக்கி விட்டனர். அங்கு, இரவு உணவு அருந்தவும், கலைநிகழ்ச்சிகளை பார்க்கவும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.'ஒட்டக சவாரி இலவசம்; பைக் சவாரி கட்டணம்...' என்றனர்.உயரமான ஒட்டகத்தின் மீது ஏறுவது சிரமமான காரியம் என்பதால், நெல்லை தம்பதியினரும், பெண்களும், அதை தவிர்த்தனர். நானும், வெங்கடாசலமும், ஒட்டக சவாரிக்கு தயாரானோம். ஒரு ஒட்டகத்தில் இரண்டு பேர் அமரும் வகையில், அம்பாரி அமைக்கப்பட்டிருந்தது.படுத்திருந்த ஒட்டகத்தில் ஏறுவதற்காக, 'ஸ்டூல்' வழங்கப்பட்டது. 'ஸ்டூல்' மீது நின்று, ஒட்டகத்தின் முதுகில் அமைக்கப்பட்டிருந்த அம்பாரியில் ஏறி அமர்ந்து கொண்டோம்.முதலில், பின் கால்களை உயர்த்தி, முன் காலை துாக்கி ஒட்டகம் எழுந்தபோது, தலைகுப்புற கவிழ்ந்து விடுவோமோ என, அச்சமாக இருந்தது. எனினும், அதை வெளிக்காட்டாமல் சிரித்தபடி சமாளித்து, ஒட்டக சவாரியை துவக்கினேன்.பாலைவனத்தில், மரம், செடி, கொடிகள் எதுவும் இல்லாததால், வானம் முழுமையாக தெரிந்தது. நாங்கள் சென்றது, சூரிய அஸ்தமன நேரம் என்பதால், சிவப்பு கோளமாக சூரியன் தகதகத்தது. இதையெல்லாம் ரசித்தபடி ஒட்டக சவாரியை முடித்து, பாலைவன திறந்தவெளி அரங்கிற்குள் வந்தோம்.எங்களுக்காக, 10 பேர் அமரக்கூடிய வகையில், ஒரு பகுதியை ஏற்பாடு செய்திருந்தனர். தரையில் போடப்பட்டிருந்த மெத்தைகளில் அமர்ந்தோம். அங்கே, காபி, தேநீர் போன்ற பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. குளிர்பான பாட்டில் ஒன்றும், ஒரு டம்ளர் தண்ணீர் ஆகியவை, ஒவ்வொருவருக்கும் இலவசமாக வழங்கினர்.சிற்றுண்டியை முடித்தபோது, இருட்டத் துவங்கியிருந்தது. வெப்பநிலையும் குளிருக்கு மாறியிருந்தது.பொதுவாகவே, பாலைவனத்தில், பகல் நேரத்தில், சூரிய வெப்பம் அதிகமாகவும், இரவு நேரத்தில், குளிர் அதிகமாகவும் இருக்கும் என, படித்திருந்தேன். எனவே, நான் எடுத்து வந்திருந்த காதை மறைக்கும் கம்பளி வளையத்தையும், முழுக்கை கம்பளி சட்டையும் அணிந்து கொண்டேன்.பாலைவன இரவு உணவின்போது, நாட்டிய மங்கையின், 'பெல்லி' நடனம் நடைபெறும் என்று, ஏற்கனவே கூறியிருந்தனர். எகிப்தை பூர்வீகமாக கொண்ட, 'பெல்லி' நடனம், மத்திய கிழக்கு நாடுகளில் பாரம்பரிய நடனமாக கருதப்படுகிறது. பாலைவன அரங்கங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில், 'பெல்லி' நடனம் தவறாமல் இடம்பெறுகிறது.சரி விஷயத்துக்கு வருவோம்... உணவு உண்ண ஆரம்பித்தபோது, நடன நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது.அரேபிய இசை ஒலிக்க, அரேபிய நடன உடை அணிந்த ஒரு இளம்பெண் நடனமாட மேடைக்கு வந்தார்.பழைய சரித்திர படங்களில், எம்.ஜி.ஆர்., வாளை சுழற்றி சண்டையிடுவது போன்றதொரு பெரிய வாள், மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இசைக்கேற்ப ஆடியபடி வந்து, வாளை எடுத்த நடன மங்கை, அதை சுழற்றியபடி நடனம் ஆட ஆரம்பித்தார்.இந்த வகை வாள் நடனத்திற்கு, 'அர்தா' என்று பெயர். அரபு தேசத்தின் பாரம்பரிய நடனம், இது.அந்த நடன மங்கை, அடுத்து, இசைக்கேற்ப தன் இடுப்பை அசைத்து, 'பெல்லி' நடனம் ஆட ஆரம்பித்தார். 'பெல்லி' நடனத்தை ரசித்தபடி, சாப்பிட ஆரம்பித்தனர், பார்வையாளர்கள்.வித்தியாசமான சூழ்நிலை, மனிதர்கள் மற்றும் தட்பவெப்பம் என, அந்த இரவு பொழுது சுவாரஸ்யமாகவே கழிந்தது.எங்களது சுற்றுலாவின் மூன்றாவது நாள், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான, அபுதாபிக்கு புறப்பட்டோம். துபாயிலிருந்து, 140 கி.மீ., துாரத்தில் உள்ளது, அபுதாபி.நவ்ஷாத், வேனை ஓட்ட, அபுதாபி பற்றிய விபரங்களை கூறியபடி வந்தார், சர்புதீன். வழியெல்லாம் வித்தியாசமான வடிவத்துடன் கூடிய கட்டடங்கள் இருந்தன.அபுதாபியின், 'ஷேக் செய்யது கிராண்ட் மசூதி' சுற்றுலா பயணியரின் பார்வைக்குரிய ஒரு இடமாக அமைந்துள்ளது.தொலைவிலிருந்து பார்க்கும்போதே, மிக பிரமாண்டமாக தெரிந்தது, மசூதி. 380 அடி உயரம் கொண்ட மினார்கள், இந்த மசூதியின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ளன. இந்த மசூதியில், மொத்தம், 57 குவி மாடங்கள் உள்ளன. மசூதியின் உட்புறத்தில் சலவை கற்களும், வண்ண கற்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு அழகூட்டப்பட்டிருந்தன.கடந்த, 2007ல் திறந்து வைக்கப்பட்ட இம்மசூதி, உலக அளவில், ஆறாவது பெரிய மசூதியாகும். ஒரே நேரத்தில், 40 ஆயிரம் பேர் வழிபடுவதற்கான இட வசதி உள்ளது. இங்குள்ள பெரிய தொழுகை மண்டபத்தில், 9,000 பேர் வரை தொழுகை செய்யலாம்.மூரிய இஸ்லாமிய மற்றும் அரேபிய கட்டட கலைகளின் பாணியில் அமைந்துள்ள இந்த மசூதியின் முன் நின்று, குழுவாகவும், தனித்தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மசூதியை பார்வையிட அனுமதிக்கின்றனர். எனினும், ஆடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பெண்கள், தங்கள் கைகளை மறைக்கும் அளவிற்கு...கடந்த, 1970க்கு முன், பாலைவனமாகவே இருந்தது, துபாய். இங்கு வசித்த அரேபியர்கள், முத்து குளித்தல் மற்றும் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின், அரபு நாடுகள், பணக்கார நாடுகளாக மாற ஆரம்பித்தன.உலக மக்களை ஈர்க்கும் சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி மேற்கொண்டனர், துபாயின் ஆட்சியாளர்கள்.கடல் பகுதியில், மண்ணும், பாறைகளும் கொட்டி, செயற்கை தரை பகுதிகள் உருவாக்கப்பட்டு, அதில் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், ஓட்டல்கள், கேளிக்கை அரங்கங்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டன. துபாய் என்றதும், எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் வருமானம், நம் மனக்கண்ணில் வந்தாலும், துபாயின் பெரும்பான்மையான வருமானம், சுற்றுலாவை ஒட்டியே உள்ளது.பாலைவன பகுதியிலும், சில இடங்கள் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு, உணவு மற்றும் கேளிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன — தொடரும்.ஜே.டி.ஆர்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !