உள்ளூர் செய்திகள்

திகில் பங்களா பார்க்கலாம் வாரீங்களா?

அந்த நுழைவாயிலில் நுழைந்தால், நிறைய கதவுகள் இருக்கும். ஆனால், திரும்பி வர ஏதாவது ஒரு கதவில் தான், வழி இருக்கும். மற்றவைகளில், வழி இருக்காது. முட்டி மோதி திரும்பி வரவேண்டும். இப்படி, தட்டுத் தடுமாறி, சரியான கதவை கண்டுபிடித்து, வெளியே வர வேண்டும். இது, ஒருவித வேடிக்கை விளையாட்டு. அதே போல, இருட்டான கூடாரம் ஒன்று இருக்கும். அதன் உள்ளே நுழைந்தால், திகிலூட்டும் இசை பின்னணியில், ஆங்காங்கே ரத்தம் வழிய, நிறைய பிசாசுகள், மண்டை ஒடுகள், எலும்பு கூடுகள் மெல்லிய விளக்கொளியில் தென்பட்டு, திகிலை ஏற்படுத்தும். பேய் பொம்மைகள் தானே என்று, கொஞ்சம் மனதை தைரியப்படுத்தியபடி, முன்னேறினால், அந்த பொம்மைகளில் சில உயிர்பெற்று, நம்முன் வந்து நின்று, கோரமாய் சத்தமிட்டு கூச்சலிடும். இந்த பேய்களை கடந்து வெளியில் வருவது, இன்னொரு விதமான திகில் விளையாட்டு. இந்த இரு விளையாட்டுகளையும் இணைத்து, ஒரே விளையாட்டாக்கினால் எப்படி இருக்கும் என்று, சிந்தித்ததன் விளைவுதான், 'ஸ்கேரி ஹவுஸ்' எனப்படும், திகில் பங்களா! இந்த திகில் பங்களா, தினமலர் இதழ் சார்பில், சென்னையில் நடத்தப்பட்ட, 'தினமலர் ஸ்மார்ட் எக்ஸ்போ'வில் இடம் பெற்றிருந்தது.'குளுகுளு' அரங்கத்தில், பொழுதை போக்கியபடி, ஜாலியாய் ஷாப்பிங் செய்ய, பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், இந்த திகில் பங்களாவிற்கு தான், மக்களிடம் கூடுதல் வரவேற்பு! திகில் பங்களாவின் வாசல் வழியாக, ஒரு எலும்புக்கூட்டின் கை, நம்மை கூப்பிடும்போதே, பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. உள்ளே என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவும், உண்மையிலேயே நாம் தைரியசாலியா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், இந்த திகில் பங்களாவிற்குள், நுழைகின்றனர். மனைவி,மைத்துனி முன், 'நான் ஆம்பிளை சிங்கம், நான் போறேன் முன்னாடி...' என்றபடி உள்ளே நுழையும், 'சிங்கங்கள்'அலறியடித்து, 'போதும்...போதும். இதுக்கு மேலே என்னால பயப்பட முடியாது...' என்றபடி, வெளியே ஓடிவருவதையும், அதே நேரம், பயந்தபடி உள்ளே நுழைந்த குழந்தைகள், பேய் வேஷம் போட்ட, 'அங்கிள்'களிடம் பேட்டி எடுத்துவிட்டு, குஷியாக குதூகலித்தபடி வெளியே வருவதையும் பார்க்க முடிந்தது. பெண்கள் சும்மாவே அலறுவர். இது, திகில் பங்களா என்பதால், இன்னும் பெரிதாக அலறுகின்றனர். இவர்களின் அலறல்களை பார்த்து, உள்ளே, பேய் வேஷம் போட்டு உட்கார்ந்திருக்கும் பையன்கள், பயந்து போய் அலறுவது இன்னும் வேடிக்கை. பொதுவாக பேய் என்றாலே, மோகினியில் ஆரம்பித்து, கொள்ளிவாய் வரை, எல்லாமே நமக்கு பெண் பேய்களாகத்தான் அறிமுகம். ஆனால், இந்த திகில் பங்களாவிற்குள் இருப்பவை அனைத்தும், ஆண் பேய்களே! 'யாரையும் தொடக்கூடாது, குழந்தைகள், பெண்கள் வரும்போது, ரொம்ப சத்தம் போடாமல் அடக்கி வாசிக்கணும், இந்த திகில் பங்களாவிற்கு வருபவர்கள், தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு, திகில் அனுபவத்தை பெற திரும்ப திரும்ப வர வேண்டும்' என்ற தினமலர் இதழ் கட்டளையின்படி, நடைபெற்ற திகில் பங்களாவை, சென்னையில் பார்க்க தவறியவர்கள், இப்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும், 'தினமலர் ஸ்மார்ட் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்த்து, திகில் அனுபவத்தை பெறலாம்.எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !