வழக்கு!
மீட்டிங் முடிந்து வெளியே வரும்போது, மாலை, 6:30 மணி. வழக்கம்போல், 5:00 மணிக்கே ஸ்கூல் விடுவர்; இன்றைக்கு மீட்டிங் என்பதால் இவ்வளவு நேரமாகி விட்டது.என் வருகைக்காக சோர்ந்து போய், வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தான், ஐந்து வயதான என் மகன் தினேஷ். வீட்டிற்கு வந்து அவனுக்குப் பால் காய்ச்சி கொடுத்து, பிஸ்கெட்டும் கொடுத்தேன்.''ஏம்மா... நான், 'கேக்' தானே கேட்டேன்... அதை வாங்கி கொடுக்காம, எப்ப பாரு இந்த பிஸ்கெட்டையே கொடுக்கிறே...'' என்றான்.''நாளைக்கு வாங்கி கொடுக்கிறேன்; இப்போது இதை சாப்பிடு. உனக்கு பிடித்த, டிபன் செய்து தரேன்,'' என்று கூறிவிட்டு, வேலையை தொடங்கினேன்.''அம்மா இங்கே பாரேன்... அப்பா வந்திருக்காங்க...'' என்று, தினேஷ் சொன்னதும், அவசரமாக வெளியே வந்தேன். என் மகனை அணைத்தபடி நின்று கொண்டிருந்தார், கணவர் சுந்தரம். அதைப் பார்த்த எனக்கு, ஆத்திரம் அதிகமானது. அவரிடமிருந்து அவனை, 'வெடுக்'கென இழுத்தேன். எதுவும் புரியாமல் திகைத்தான், தினேஷ்.''தினேஷ்... நீ பக்கத்து வீட்டில், 'டிவி' பார்க்க போ,'' என்றேன்.''அப்பா இப்போதான் வந்திருக்காங்க... நான் அப்புறம் போறேனே...'' என்றவனை, நானே அழைத்துப் போய் பக்கத்து வீட்டில் விட்டு விட்டு வந்தேன்.''சத்யா, நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா... என் மேலே வழக்கு போட்டு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கே...''''ஆமாம்! தப்பு செய்தவங்க தண்டனை அனுபவிக்கணும்; அதனால் தான் வழக்கு போட்டேன்.''''இதோ பார், சத்யா... நான் சொல்றதை நல்லா கேட்டுக்க... சமாதானமா போய் விடலாம். ஏதோ தப்பு நடந்துச்சி... இல்லைன்னு சொல்லலை. அதுக்காக நம்ப குடும்ப மானம் இப்படி கோர்ட் வரைக்கும் போகலாமா? நீ சரின்னு சொல்... நாம் ஒன்றாகவே இருக்கலாம்.''இதைக் கேட்ட எனக்கு கோபம் அதிகமானது.''இதோ பாருங்க தப்பு செய்தது நீங்க... அதை உணர்ந்து ஒத்துக்கொள்ளாமல், அவளோடு சேர்ந்து இருக்கலாம் என்று சொல்றீங்க பாருங்க... இனிமே உங்களிடம் எனக்கு பேச ஒன்றும் இல்லை. நாம் கோர்ட்டிலேயே சந்திக்கலாம்,'' என்றேன்.''என்னடி பெரிசா பேசற... ஏதோ சமாதானமா போகலாம் என்று நினைத்து வந்தால், ரொம்பத் தான் திமிரா பேசறே. இதோ பார்... தோற்க போவது நீ தான்; அவமானபடப் போவதும் நீ தான்,'' என்று கத்தி விட்டு போய் விட்டார்.பட்டப்படிப்பு முடிந்ததும் வேலைக்குப் போகலாம் என, எண்ணியிருந்த எனக்கு, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர், பெற்றோர். அரசு வேலையில் உள்ளவர், பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்பதாலும், சுந்தரத்தை என் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்துப் போய், திருமணம் ஆனது.திருமணம் ஆன அடுத்த ஆண்டே பிறந்தான், தினேஷ். மூன்று ஆண்டுகள் பிரச்னை இல்லாமல் வாழ்ந்தோம். வேலை மாற்றலாகி நாங்கள் சிதம்பரம் வந்தோம். மாமனார் - - மாமியார் சொந்த ஊரிலேயே தங்கி விட்டனர்.சுந்தரத்திடம் சில மாற்றங்கள் ஏற்பட்டன. நேரம் கழித்து வருவது; சில நாட்கள் வெளியூரில் வேலை இருப்பதாக கூறி செல்வது. இதை எல்லாம் முதலில் நான் சந்தேகம் கொள்ளவில்லை.இந்நிலையில் தான், என் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விடவே, ஒரு மாதம் அம்மா வீட்டில் தங்க நேர்ந்தது.திரும்பி வந்தபோது, வீட்டின் சூழ்நிலையே மாறி இருந்தது. யாரோ ஒரு பெண் தங்கி இருந்ததாக பக்கத்து வீட்டில் கூறினர்.சுந்தரத்திடம் கேட்டதற்கு, 'என் அப்பாவுக்கு உறவுக்காரப் பெண். அவள், தேர்வு எழுத வந்தாள்...' என்றார்.சில மாதம் சென்றதும், கைக் குழந்தையுடன் ஒரு பெண் சுந்தரத்துடன் வந்தாள். அதன் பிறகு தான் எல்லா விபரமும் தெரிய வந்தது. என் கல்யாணத்திற்கு முன்னே இந்த பெண்ணும், சுந்தரமும் காதலர்கள் என்ற விஷயம்.இவர்கள் காதலை, மாமனார் -- மாமியார் ஒத்துக் கொள்ளவில்லை.'நாங்கள் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வோம்...' என்று மிரட்டியுள்ளனர். பெற்றோரின் சொல்லை மீற முடியாமல் என்னை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.சுந்தரத்திடம் கேட்டதற்கு, 'எல்லாம் உண்மை தான். அவளை என்னால் மறக்க முடியவில்லை; அவளும் நம்முடன் இருக்கட்டும்...' என்றார்.வெறி பிடித்தவள் போல் அவரை அடித்து வெளியே தள்ளினேன், நான். அதன்பிறகு, எப்போது வந்தாலும் வீட்டில் அவரை சேர்ப்பதில்லை.மாமனார் - மாமியாரை வரவழைத்தேன்.'நீங்க அந்தப் பெண்ணையே உங்க மகனுக்கு திருமணம் செய்து இருந்தீங்கன்னா, எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது...' என்று அழுதேன்.'நீ சொல்றது சரிதான்... இவன் காதல் விவகாரம் தெரிந்தவுடன், அந்த குடும்பத்தை விசாரித்தோம். அவர்கள் பணம் பறிக்கும் குடும்பம் என்று தெரிய வந்தது. அதனால் தான் நாங்கள் இப்படி செய்தோம். 'கல்யாணம் ஆனதும் திருந்தி விடுவான் என்று நினைத்தோம். அவன் மறுபடியும் அவள் வலையில் விழுவான் என்று நினைக்கவில்லை. இப்போது ஒரு குழந்தை இருப்பதால், நாம் ஜாக்கிரதையாக செயல்படணும்...' என்றனர்.'நீங்கள் எது சொன்னாலும் சரி... நான் அவருடன் இனிமேல் சேர்ந்து வாழ மாட்டேன். நான் விவாகரத்து கேட்கப் போகிறேன்...' என்றேன்.'அவசரப் படாதே... நீ விவாகரத்து வாங்கி விட்டால், அவர்களுக்கு வசதியாக போய்விடும். உன் கணவன் மட்டுமில்லாமல், அவன் சம்பந்தப்பட்டது எல்லாம் அவர்களுக்குப் போய் விடும். நீயும், குழந்தையும் அநாதையாக போகக் கூடாது.'இதற்கு ஒரே வழி, அவன் மேல் வழக்கு போடு. முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது. வா... வக்கீலைப் பார்த்து பேசுவோம்...' என்றார், மாமனார்.வக்கீலைப் பார்த்துப் பேசி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். இந்நிலையில் இங்கு உள்ள கான்வென்ட் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்தேன்... வக்கீல் நோட்டீசை பார்த்ததும், என்னிடம் கத்திவிட்டுச் சென்றார், சுந்தரம்.ஒரு வாரம் சென்றதும், மறுபடியும் வந்தார், சுந்தரம்.'எதற்காக இங்கே வந்தீங்க? இன்னும் இரண்டு நாட்களில் நம்ம வழக்கு தான் கோர்ட்டுக்கு வருதே... அங்கேயே சந்திக்கலாமே...' என்றேன்.'நான் மறுபடியும் சொல்கிறேன் என்று நினைக்காதே... எனக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் உனக்கு என்ன அப்படி சந்தோஷம்? எனக்கு வேலை போய்விடும் என்று நினைக்கிறாயா? உன்னால் எதுவும் செய்ய முடியாது.'உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கு, இல்ல நாங்க சேர்ந்து இருப்பது போல் போட்டோ தான் இருக்கிறதா? நான் மறுபடியும் சொல்றேன்... நாம் சமாதானமாக போய் விடலாம்...' என்றார், சுந்தரம்.'நாம் கோர்ட்டிலேயே சந்திக்கலாம்...' என்றேன்.கோர்ட்டில் என்னை விசாரித்தார், நீதிபதி.''முதல் மனைவி நான் இருக்கும் போது, அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்,'' என்றேன்.''நீ தான் முதல் மனைவி என்பதற்கு சாட்சி இருக்கா?'' என்றார்.என்னிடம் இருந்த பதிவு செய்த திருமண சான்றிதழ் மற்றும் கல்யாண போட்டோ எல்லாவற்றையும் கொடுத்தேன்.அடுத்து என் கணவரை விசாரித்தார்.''உங்க மனைவி கூறுவதெல்லாம் உண்மையா?'' என்றார்.''இல்லீங்க... என் மனைவி எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவாள்; அப்படித்தான் இதுவும். இந்தப் பெண்ணும், நானும் ஒன்றாக கல்லுாரியில் படித்தோம். அதனால், நண்பர்கள் என்ற முறையில் தான் பழகி வந்தோம்.''நீங்கள் வேண்டுமென்றால் அவளின் அண்ணன் இருக்கிறார்; அவரிடம் கேட்டுப் பாருங்கள்,'' என்றார்.என்னைப் பார்த்த நீதிபதி, ''ஏம்மா... இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கு சாட்சி இருக்கா?'' என்றார்.''இல்லை,'' என்று கூறினேன்.அவளைக் கூப்பிட்டு விசாரித்தார்...''நீ என்ன சொல்கிறாய்?'' என்றார்.''இவர் சொல்றது சரிதாங்க. நாங்கள் நண்பர்கள் தானே தவிர, எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை,'' என்றாள்.''இல்லீங்க... பொய் சொல்றாங்க. இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உண்டு,'' என்றேன்.''அவர்கள் சொல்றது உண்மையா?'' என்றார். ''குழந்தை இருக்கிறது உண்மை தான்; ஆனால், அந்த குழந்தை இவருக்கு பிறந்தது இல்லை. என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். அதற்கு உண்டான சாட்சி,'' என்று, சில புகைப்படங்களைக் காட்டினாள். அதில் அவளும், வேறு ஒருவரும் மாலையும் கழுத்துமாக இருந்தனர்.''என்னம்மா நீ இப்படி சொல்கிறாய்... அவர்களோ வேறுவிதமாக சொல்றாங்க...'' என்றார், நீதிபதி.''அப்படியானால் இவங்களுக்கும், என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்றாங்களா?''''ஆமாம், அப்படித்தான் சொல்றாங்க!'' ''அப்படியானால் நான் அவர் மனைவி என்றும், என் குழந்தை தான் அவர் வாரிசு என்றும் சட்டப்படி பதிவு செய்து கொடுக்க ஒத்துக் கொள்கிறாரா?'' என்றேன்.''அப்படியே செய்கிறேன்,'' என்று ஒத்துக் கொண்டார், சுந்தரம்.''ஏம்மா... விபரம் தெரியாமல் ஒருத்தர் மேலே பழி போடாதே... கணவருடன் ஒற்றுமையாக வாழு. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாதே...'' என்று, 'அட்வைஸ்' செய்து அனுப்பினார், நீதிபதி.கோர்ட் வாசலில் வந்து நின்றேன். சுந்தரமும், அவளும் வெற்றிப் புன்னகையுடன் என்னை நோக்கி வந்தனர்.''என்னடி பெரிசா தண்டனை வாங்கி கொடுத்து, வேலையிலிருந்து துாக்கி விடுவதாக கூறினாயே... உன்னால் என்ன, யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது,'' என்றார்.''நான் தோற்று விடுவேன் என்று தெரியும். என் உரிமையை நிலை நாட்டவே இந்த ஏற்பாடு. புரியலை...''சட்டப்படி நான் தான் உன் மனைவி என்றும், என் பிள்ளை தான் உன் வாரிசு என்றும் எல்லார் முன்னிலையிலும் ஒத்துக்கொள்ள வைத்து விட்டேன். இப்போது நீ எங்கே வேண்டுமானாலும் இரு; அதைப் பற்றி கவலை இல்லை. ''உன் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக உனக்கு பிறந்த குழந்தையை அடுத்தவன் குழந்தை என்றும், அவளை அடுத்தவன் மனைவி என்றும் கூறினாயே... அதைவிட கேவலம் வேற இல்லை.''நான் வழக்கு போட்டதே இதற்கு தான்... உனக்கு தண்டனை கிடைக்காமல் இருக்க நீ இப்படித்தான் செய்வாய் என்று தெரியும். பின்னால் இவளோ அல்லது இவள் குழந்தையோ உன் சொத்தில் பங்கு கொடு என்று கேட்க முடியாது. ''ஒரு வேளை நீ இறந்து விட்டால், நானும், என் பிள்ளையும் தெருவில் நிற்கக் கூடாது அல்லவா? அதனால் தான், சட்டப்படி நான் தான் உன் மனைவி என்பதையும், என் குழந்தை தான் உன் வாரிசு என்றும் நிலை நிறுத்திக் கொண்டேன்.''காதலிப்பது தப்பு என்று சொல்லவில்லை. எல்லார் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்து கொண்டிருக்கணும். அதை விட்டு விட்டு கல்யாணம் ஆகி, ஒரு குழந்தையும் இருக்கும்போது, என் வாழ்க்கையை வீணடிக்கும் உன்னைப் போன்ற ஆண்களை இப்படித்தான் தண்டிக்கணும்,'' என்று கூறிவிட்டு, நிமிர்ந்து நடந்தேன். வி. சந்திரமோகன்