உள்ளூர் செய்திகள்

தேரும் திருவிழாவும்

துளசி செடிக்கு நீர் ஊற்றும்போது தான், கவனித்தாள் சபர்மதி... அது, மிகச் சிறிய மொட்டை பிரசவித்திருந்தது. மருதாணிப் பூ போல, இதுவும் ஒரு பிரத்யேக அழகு. ''சபர்மதிம்மா... கொரியர்,” என்று குரல் கேட்டது. 'யார், என் பெயருக்கு கொரியர் அனுப்பியிருப்பர்' என்று நினைத்துக் கொண்டே, கதவைத் திறந்தவள், அந்த வெள்ளை உறையை, கையெழுத்து போட்டு வாங்கினாள். ''மேடம்,” என்று, தயக்கத்துடன் அழைத்த கொரியர் பையனை, நிமிர்ந்து பார்த்து,''என்னப்பா... குடிக்க தண்ணீர் வேணுமா,” என்று கேட்டாள். ''இல்ல மேடம், உங்க பேர் அழகா, வித்தியாசமா இருக்கு. யார் வச்ச பேர் மேடம்,''என்றான் ஆர்வமாக. ''சபர்மதி ஆற்றங்கரையில், ஒரு ஆசிரமம் வைத்திருந்தார் காந்திஜி. அந்த ஆசிரமத்தின் பேர், சபர்மதி. எங்கப்பா காந்திஜியின் தீவிர தொண்டர் என்பதால், அந்த ஆசிரம பேரையே எனக்கு வச்சுட்டார்,” என்றாள். ''சரிங்க மேடம், வர்றேன்,” என்று, அவன் விடைபெற்று சென்றவுடன், உறையைப் பிரித்துப் பார்த்தாள், ஒரு வார இதழிலிருந்து அவள் பெயருக்கு, ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வந்திருந்தது. கூடவே, ஒரு கடிதம்.'எனக்குப் பிடித்த எங்கள் ஊர் என்ற தலைப்பில், நாங்கள் நடத்திய கட்டுரை போட்டியில், உங்களுக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருக்கிறது. அதற்கான, காசோலையை இத்துடன் இணைத்துள்ளோம். வாழ்த்துகள்' என்றிருந்தது. திருச்செந்தூர் பற்றி, ஒரு பக்க கட்டுரையாய், கடற்கரை, முருகன் கோவில், நாழிக்கிணற்றின், உப்புச்சுவை இல்லாத தண்ணீர் என்று, தன் சிறு பிராயத்து நினைவுகளை, அவள் முதல் முறையாக, ஏதோ ஒரு வேகத்தில் எழுதி அனுப்பியிருந்தது நினைவுக்கு வந்தது. அந்த கட்டுரைக்குத்தான், பரிசுத் தொகைக்கான காசோலை வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன், மாவு மில்லிற்கு போயிருந்த போது, அங்கிருந்த ஒரு வார இதழை பார்த்தாள். அதில் வெளியாகியிருந்த கட்டுரை போட்டி அறிவிப்பை யதேச்சையாகப் புரட்டிப் பார்த்தாள். வீட்டுக்கு வந்தவுடன், ஒரு வேகத்தில், கட்டுரையை எழுதி முடித்திருந்தாள். முதுகுக்குப் பின்னாலிருந்து, அதைப் படித்து, சத்தம் போட்டுச் சிரித்தான் தியாகு... 'இன்னும் ஸ்கூல் பொண்ணு மாதிரி கட்டுரைப் போட்டி, கோலப் போட்டின்னு... டேய் ராகுல், நம்ம அசோசியேஷன்ல, குடியரசு தின விழா, இருக்கில்ல...' என்று, கிண்டலுடன், மனைவியைப் பார்த்துக் கொண்டே, மகனிடம் கேட்டான். ராகுல், தன், 'பென்டென்' விளையாட்டிலிருந்து, கண்களை எடுக்காமலேயே, 'ஆமா டாடி, லேடீஸ் ஸ்பெஷல்ன்னு, ரன்னிங் ரேஸ் கூட இருக்கு...' என்றான். 'குழந்தைகள் ஸ்பெஷல்ன்னு ஏதாவது இருக்கும்டா... அதுல, உங்க அம்மா பேரக் கொடுத்து, மியூசிக் சேர், பாசிங் த பால், இப்படி சேத்து விடலாமாடா, ஹா ஹா... எட்டாங்கிளாஸ் பாப்பா மாதிரி, கட்டுரைப் போட்டிக்கு எழுதிகிட்டிருக்காடா உங்கம்மா...''ஹையோ மம்மி... ஏன் இப்படி என்னை அவமானப்படுத்துறீங்க...' என்று, அலுத்துக் கொண்ட ராகுல், 'யூ டியூப்ல 3டி' கண்ணாடி போட்டு படம் பாத்துகிட்டிருக்கேன் நான்... எனக்கு அம்மாவா நீ...' என்றான். 'சரி சரி... விடு, அவ மூளை, எட்டாம் கிளாசுக்கு மேல வளரல. பாவம் என்ன செய்வா...' என்ற தியாகு, தன் சோழி பற்கள் தெரித்து விழும்படியாக சத்தம்போட்டு சிரித்தான். அந்த கட்டுரைக்குதான் பரிசு கிடைத்திருக்கிறது. முகம் தெரியாத மனிதர்கள், அவள் எழுத்தை வாசித்து, மதித்து, ஏற்றம் கொடுத்திருக்கின்றனர். வாசல் மணி அடித்தது. விரைந்து சென்று கதவை திறந்தவள், தியாகு நிற்பதை பார்த்து, சிரித்தாள். ''என்ன சப்பி, வாயே தெரியல, எல்லாம் பல்லாவே இருக்கு. என்ன விஷயம்... என் ஷர்ட், எதையாவது போட்டு, எவர்சில்வர் சொம்பு வாங்கினியா என்ன?'' என்று கேட்டு, சிரித்துக் கொண்டே உள்ளே வந்தான். ''திருச்செந்தூர் கட்டுரைக்கு, இரண்டாம் பரிசு கிடைச்சிருக்கு!'' ''என்னது... பரிசா! உனக்கா... யார், அந்த இளிச்சவாயன்? உன் உப்பிலி கிராமத்து ஸ்கூல்மேட்டா?” என்றான் அலட்சியமாக. ''தெரியாது... ஆயிரம் ரூபாய்க்கு செக் வந்திருக்கு.'' ''வாட் மம்மி... என்ன சொன்னே... ஆயிரம் ரூபாயா... காட்டு காட்டு,” என்று, அப்போதுதான் பள்ளியிலிருந்து வந்திருந்த ராகுல், பள்ளி புத்தகப் பையை, வைத்தவன், அம்மாவின் அருகில், ஓடி வந்தான். அதற்குள் காசோலையை கையில் எடுத்திருந்தான் தியாகு. ''எப்படி டாடி, அம்மாதான் சமையல், செடி, கோலம், தையல்ன்னு இருப்பாங்களே... அம்மாவுக்கு எழுதக்கூட தெரியுமா?” என்று கேட்டு, சந்தேகத்துடன் பார்த்தான் ராகுல். ''இதெல்லாம் குருட்டாம் போக்குல கிடைக்குறதுடா ராகுல். அது ஒண்ணும் பெரிய பத்திரிகை இல்ல. அதை எவன் படிச்சு போட்டில கலந்துக்கப் போறான். மொத்தம் வந்ததே மூணாதான் இருக்கும். அதுல பொம்பளைன்னு அம்மாவுக்கு செகண்ட் பிரைஸ் கொடுத்திருப்பான்,” என்று கூறி, அலட்சியமாக சிரித்தான். ''அப்படியா டாடி... அதானே பார்த்தேன். என் வகுப்பில, கனிஷ்கான்னு, ஒரு பொண்ணு டாடி, ஈ.வி.எஸ்.,கிளாஸ்ல எப்பவும் அவதான் டிஸ்டிங்ஷன் வாங்கறா. மரத்தை வெட்டாதே, மரத்தை வெட்டாதேன்னு, 'அட்வைஸ்' செய்வா... டிராபிக் நடுவுல இருக்கிற மரத்தை வெட்டாம இருக்க முடியுமா டாடி?'' ''இந்த பொண்ணுங்களே இப்படித் தாண்டா ராகுல். எப்ப பார்த்தாலும், ஒரே, 'அட்வைஸ்'ன்னு டார்ச்சர். சரி, ஆங்கரி பேர்ட்ஸ்ல புதுசா, ஒரு வீடியோ கேம் வந்திருக்குன்னு சொன்னியே... என்னடா அது?” ''ஆமா டாடி... ஆனா, டவுன்லோட் ஆக மாட்டேங்குது. பிரவுசிங் சென்டர் போனாத்தான் விளையாட முடியும். என் நண்பர்கள் எல்லாம், சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க டாடி. ஆனா, அரை மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் போகுமாம்,''என்றான் சோகமாக. ''அதுக்கேன்டா கவலைப்படுற... இதோ ஆயிரம் ரூபாய்,” என்று, பரிசு காசோலையை, எடுத்து, கைவிரலில் வைத்து ஆட்டினான் தியாகு. ''வாவ் கிரேட் டாடி,” வாய் பிளந்த ராகுல், ''இதோ ஒரு நிமிடத்தில் ரெடியாயிடுறேன் டாடி,'' என்று ஓடினான். அவள் கவலையுடன், கணவனிடம், ''என்னங்க... இது சரியில்ல. ஆடம்பர வாழ்க்கைக்கு, அவனைப் பழக்கப்படுத்தாதீங்க, குழந்தைங்க, கஷ்டம் தெரிஞ்சு வளரணும். அப்பதான் பின்னால, கை நிறைய சம்பாதிக்கும்போது, விரயம் செய்யாம இருப்பாங்க,” என்றாள். ''அட்வைசா... எனக்கேவா? பிசாத்து ஆயிரம் ரூபா சம்பாதிச்சதும், வாய் நீள ஆரம்பிச்சுடுச்சா... போ போய் சீரியல் பாருடி சப்பி,” அவன் சிரித்தான். பவுடர் அப்பிக் கொண்டு வந்தான் ராகுல். ''டாடி வரும்போது, சப்வேல பர்கர் சாப்பிடலாம் டாடி.” ''ஷ்யூர்டா.” ''அம்மாவுக்கு உடுப்பில, நாலு இட்லி, சட்டினி வாங்கிட்டு வரலாம். என்னம்மா, உன் பேவரைட் அதுதானே!” தாயின் கன்னத்தை தட்டி, சிரித்தான் மகன். தியாகு குறுக்கிட்டு, ''நீ வேற... உங்க அம்மா பழைய சோறும், மாவடும்தான் விரும்பி சாப்பிடுவா. அதையே அவ சாப்பிடட்டும். நீ வா.” ''பை பை மம்மி. நாங்க கிளம்பறோம்,” என்று கூறி, இருவரும், விரைந்தனர். இது என்ன வாழ்க்கை... உழைப்பு அவளுடையது, ஊதியமும் அவளுக்கானது. ஆனால், உழைப்பின் பலன் அவளுக்கில்லை. அது கூட வேண்டாம். குறைந்த பட்சம் ஒரு பாராட்டு... எதுவுமே இல்லை. அவளைத் தவிர, அவளுக்கான வாழ்க்கையை யார் யாரோ வாழ்கின்றனர். சபர்மதிக்கு, தன்னையும் அறியாமல் பெருமூச்சு வந்தது. அழகான, நீளமான கருங்கூந்தல் அவளுக்கு. இறுக்கமாக பின்னி, விரலளவு நெருக்கமான மல்லிகையை, உச்சியில் வைத்துக் கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். அதுதான் அவளுக்கும் பிடிக்கும். ஆனால், திருமணம் ஆகி வந்த முதல் நாளே, கழுத்து வரை கூந்தலை குறைக்க வைத்து, பின்ன முடியாமல், வெறும் கிளிப் போட வைத்தான். அதுதான் தனக்குப் பிடிக்கும் என்றும், நல்ல மனைவி என்பவள், புருஷனின் ஆசையை மட்டும் நிறைவேற்றுபவளாக இருக்க வேண்டும், அது அவளின் கடமையும் கூட என்று கூறினான். நினைவுகளை கலைக்கும் விதமாக, தொலைபேசி அழைத்தது; எடுத்தாள். ''இது ராகுல் வீடா... பேசறது அவன் அம்மாவா?” என்று, யாரோ கேட்டனர் ''ஆமாம்... நீங்க?” ''நான் கனிஷ்காவோட அம்மா. என்னங்க உங்க பையன் இப்படி அறுந்த வாலா இருக்கான். என் பொண்ணு நிறைய மார்க் வாங்கிட்டாள்ன்னு, அவளோட நோட்டுல கிறுக்குறானாம், லஞ்ச் டப்பாவுல மண்ணைக் கொட்டறானாம். வகுப்பில லாவண்யான்னு ஒரு பொண்ணு, அவளோட காலைத் தட்டி, கீழே விழ வெச்சானாம். கேட்டா, 'ரன்னிங்ல, நீ எப்படி, எனக்கு முன்னால ஓடலாம்'ன்னு கத்தறானாம். மேடம், கொஞ்சம் பாத்துக்குங்க உங்க பையனை, அவ்வளவுதான் சொல்வேன்,” என்று கூறி, தொடர்பை துண்டித்தாள். திகைத்துப் போனாள் சபர்மதி. இரவு உணவுக்கு, சப்பாத்தியும் குருமாவும் தயாரித்து, நிமிர்ந்தபோது, தியாகுவும், ராகுலும் சிரித்து சிரித்து, பேசுவது கேட்டது. அவள் கைகளைத் துடைத்துக் கொண்டு, அவர்கள் எதிரில் போய் நின்றாள். ''ராகுல்... இங்கே வா.” ''என்னம்மா...'' ''இங்க வான்னு சொல்றேன்ல... காம்பவுன்ட்கிட்ட இருந்த துளசிச் செடியை, யார் பிச்சுப் போட்டது?'' ''ஏன் நாந்தான்... இப்போ அதுக்கு என்ன?” என்றவனை நெருங்கி, 'பளாரெ'ன்று, ஒரு அறை விட்டாள். தடுமாறிப் போனான் ராகுல். திகைத்து, நிமிர்ந்தான் தியாகு . ''ஒரு சின்ன விதையை உன்னால உருவாக்க முடியுமா, இல்ல ஒரு கைப்பிடி மண்ணைத்தான் உருவாக்க முடியுமா? ஆனா, ராட்சசன் மாதிரி எல்லாத்தையும் அழிக்கிறே; வேரோட பிடுங்கி எறியறே. யார் உனக்கு இந்த உரிமையை கொடுத்தது... மண்ணைக் கீறி, சூரிய வெளிச்சம், தண்ணீர்ன்னு போராடி போராடி, அந்த விதை பாடுபட்டு மேலே வந்து, ஒரு செடியாகி தன் கால்ல நிக்கும் போது, அதோட உழைப்பையும், உழைப்புக்கான பலனையும் நாசமாக்கறதுக்கு நீ யார்? ராகுல், இது நமக்கான பூமி. இந்த பூமி, ஆண், பெண் இருவருக்கும் சமமானது. ''கனிஷ்கா சுற்றுச் சூழலுக்கு குரல் கொடுத்தா, நீ அவளோட கை கொடுக்கணும், லாவண்யா ஓட்டப் பந்தயத்துல வேகமா ஓடினா, நீ பயிற்சி எடுத்து போராடி, ஜெயிக்க பாக்கணும். ஆண் என்பது பெண்ணை ஒடுக்கறது இல்ல; பெண்ணை மதிக்கிறது புரியுதா?'' என்று, சிறு கோபத்துடன், பொறுமையாக விளக்கினாள். ''சப்பி ... நீயா பேசறே?'' என்று, ஆச்சரியப்பட்டான் தியாகு. ''சப்பியா... என்ன வார்த்தை இது, மிஸ்டர் தியாகு?” ''என்ன... என்னை பேர் சொல்லி கூப்பிடறே.” ''ஆமா... ஆனா, மிஸ்டர்ன்னு மரியாதையா கூப்பிடுறேன்,” என்றவள் தொடர்ந்தாள்... '' நல்ல மனைவி, நல்ல மனைவின்னு, என் தலையில விஷத்தை தடவி, என் சுயத்தை அழிச்சுட்டீங்க மிஸ்டர் தியாகு. இது என்னோட போகட்டும். நாளைக்கி மருமகளா வரப் போற இன்னொரு பொண்ணுக்கு, இது நடக்கக் கூடாது. ஒரு நல்ல தாயா ராகுலை, நான் உருவாக்கணும். ''கட்டுப்படுத்தி அடக்கி வைக்காம, அதே சமயத்துல கட்டவிழ்த்தும் விடாம, அவனை, மென்மையான, பெண்மையை மதிக்கத் தெரிந்த ஆண்மகனா வளர்க்கப் போறேன்; மரியாதையும், மனித நேயமும் கத்துத் தரப் போறேன். நல்ல மனிதனா நம்ம வீட்டுப் பிள்ளையை மாத்தற பொறுப்பு இது. நீங்களும் கை கோத்து, என்கூட வர இஷ்டமின்னா வரலாம்; இல்லைன்னா, தனியா போகலாம். ''இனி, என்னை சப்பி, சப்புன்னு எல்லாம் கூப்பிடக்கூடாது. சபர்மதின்னு என் அப்பா வெச்ச அழகான, அர்த்தமான பேரைச் சொல்லித் தான் கூப்பிடணும். ராகுல், நீ, மொதல்ல கனிஷ்காவை போன்ல கூப்பிட்டு சாரி கேளு,” என்றாள்.ராகுல் சத்தமில்லாமல் எழுந்து, தொலைபேசியிடம் போக, தியாகு தலை குனிந்தான். வானத்தில் நிலவு, உற்சாகமாய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது.உஷா நேயா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !