நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (10)
முதல்வர் அலுவலக போன்தான் அது என்பதை உறுதி செய்தவர், 'நான், தஞ்சாவூர் நிகழ்விற்கு போகாவிட்டால், நடராஜனுக்கு தகுந்த காரணம் சொல்ல வேண்டுமே... வேண்டுமானால் முதல்வர், 'அப்பாயின்மென்ட்' இருக்கிறது. அதனால் வரவில்லை என்று சொல்லட்டுமா...''அப்படியே சொல்லுங்கள்...' என்றனர்.'நான் பொய் சொல்வது இல்லை...''நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும்...' 'அப்படியானால், நான், நாளை முதல்வரை எப்போது வந்து சந்திக்கட்டும்...' சிறிது நேர இடைவெளிக்கு பிறகு, மாலையில் நேரம் ஒதுக்கித் தரப்பட்டது.'நான் மட்டும் தான் சந்திக்க வேண்டுமா, உடன் குடும்பத்தினரை அழைத்து வரலாமா...''அழைத்து வரலாம்...' 'அந்த எண்ணிக்கையில் ஏதாவது வரையறை இருக்கிறதா...''இருக்கிறது. ஆனால், அது, உங்களுக்கு இல்லை...''கடைசியாக ஒரு கேள்வி, நான் இந்த போனை, 'அட்டெண்ட்' செய்யாமல் ரயிலில் போயிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்...' 'ஒன்றும் பிரச்னையில்லை. எங்கள் ஆட்கள் தாம்பரத்தில் இருக்கின்றனர். அவர்கள் விபரம் சொல்லி, உங்களை ரயிலில் இருந்து இறக்கியிருப்பர்...'போன் உரையாடலை முடித்து, வெளியே வந்தால், தஞ்சாவூர் ரயில், நடைமேடையைத் தாண்டி எப்போதோ போயிருந்தது.'என் லக்கேஜ், என் லக்கேஜ்...''பதட்டப்படாதீர்கள். அதை எப்பவோ இறக்கி வைத்து விட்டோம். இந்தாருங்கள்...' அரசு எந்திரம், எப்படியெல்லாம் வேலை செய்யும் என்று, அன்று தெளிவாக புரிந்தது. அரசுக்கு கீழ் தான் அனைத்தும் என்றும் புரிந்தது, எஸ்.வி.சேகருக்கு.மறுநாள், முதல்வரை சந்திக்க, அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று, 17 பேருடன் போனார்.மிக உற்சாகமாக வரவேற்ற, முதல்வர் ஜெயலலிதா, நீண்ட நேரம் அன்போடு பேசிக்கொண்டு இருந்தார். அப்பாவைப் பற்றி ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால், அவர் மீதும் மரியாதை கலந்த அன்பை வெளிப்படுத்தினார்.பின்னர் ஒருநாள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது, 'ஆமாம்... மிஸ்டர் சேகர், நீங்கள் கலைமாமணி விருது வாங்கி விட்டீர்களா?' என்று கேட்டார்.'இல்லம்மா. ஆனால், நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர் எனக்கு அழைப்பிதழ் அனுப்பும்போதெல்லாம், 'கலைமாமணி' பட்டம் போட்டு அனுப்புவார். 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள். நான் இன்னும் அந்தப் பட்டம் வாங்கவில்லையே...' என்றால், 'அதான் நான் கொடுத்து விட்டேனே...' என்பார்.'பட்டம் கொடுத்தால் போதுமா, பட்டத்துடன் மூணு பவுன் தங்க பதக்கம் தருவரே, அதை எப்போது தருவீர்கள் என்று கேட்டதற்கு சிரித்தார். இதுதான் என் கலைமாமணி பட்டத்தின் கதைம்மா...' என்றார்.மீண்டும் பலமாக சிரித்த ஜெயலலிதா, 'என்ன சேகர், எல்லாமே உங்களுக்கு தமாஷ்தானா...' என்றவர், உடனே, செயலரை அழைத்து, 'இந்த பட்டியலில், எஸ்.வி.சேகர் பெயரையும் சேர்த்து விடுங்கள்...' என்று, சொல்லி விட்டார். இவரைப் பற்றி அவர்இன்றைய ஊடக துறையின் அபரிமிதமான வளர்ச்சியில், மேடை நாடகம் நடத்துவதும், அந்த நாடகக் குழுவை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதும், மிக அரிதான செயல். கலைகளிலேயே பழமையான கலை, நாடகக் கலை தான். அந்த நாடக கலை அழிந்து விடாமல் காப்பாற்றி வருகிற ஒரு சிலரில், எஸ்வி.சேகரும் ஒருவர். அவரது சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா — தொடரும்.-எல். முருகராஜ்