அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் (2) - தாய் சொல்லைத் தட்டினேன்!
எம்.ஜி.ஆர்., அசரும்படி எப்படி என்ன பேசினேன் என்கிறீர்களா? சில பின்னணிகளைச் சொன்னால் தான், நான் ஏன் அப்படி வசனம் பேசினேன் என்பது தெளிவாகும்.'பொம்மை' இதழில், வாசகர்களின் கேள்விக்கு, எம்.ஜி.ஆர்., பதில் சொல்லி வந்த நேரம் அது.எவரையும் கணக்கில் கொள்ளாத, கண்டுகொள்ளாத எம்.ஜி.ஆர்., தமிழ்வாணனை இருமுறை அதில் தாக்கி எழுதினார்.வருத்தம் கொள்ள வேண்டிய தமிழ்வாணன், தம் நெருங்கிய நண்பர்களை தொலைபேசியில் அழைத்து, 'எம்.ஜி.ஆர்., என்னை ஒரு பிடிபிடித்திருக்கிறார், படித்தீர்களா?' என்று கேட்க ஆரம்பித்து விட்டார். 'படிக்கவில்லை...' என்றவர்களுக்கு, 'பொம்மை' இதழின், 10 பிரதிகளை வாங்கி வரச் சொல்லி, அவர்களிடம் கொடுத்து படிக்க வைத்தார்.ஒரு பிரதியை, 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யிடம் கொடுத்து மகிழ்ந்தார்.அதன் பிறகு நடந்தது தான் விசேஷம். 'கல்கண்டில்' வாரா வாரம், எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்தார், தமிழ்வாணன்.அந்தக் காலத்தில், திரையுலகில் கொடி கட்டி பறந்த எம்.ஜி.ஆரை, விமர்சிக்கவும், தாக்கவும் பெரும் தைரியம் வேண்டும். ஆனால், துணிந்து அதைச் செய்தார், தமிழ்வாணன்.எம்.ஜி.ஆர்., வாழ்ந்த காலத்தில் அரசியல் களத்திற்கும், சினிமா தளத்திற்கும் அப்பாற்பட்டு, யாருமே அவரை இவ்வளவு விமர்சித்திருக்க மாட்டார்கள்.தந்தையின் நண்பர்கள் எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.'வேண்டாம், தமிழ்வாணன்! எம்.ஜி.ஆரை மட்டுமல்ல, அவரது ரசிகர்களையும் மிகவும் சோதித்துப் பார்க்காதீர்கள். வேண்டாம் இந்த விபரீத வேலை...' என்று சொல்லி பார்த்தனர்.குடும்ப உறுப்பினர்களான நாங்களும் சொல்லிப் பார்த்தோம். தந்தை மசிவதாக இல்லை.வெளியில் போனால் அவர், பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று, நாங்கள் கவலைப்படும் அளவுக்கு நிலைமை தொடர்ந்தது.இந்தப் பின்னணியை மனதில் கொண்டால் தான், நான், எம்.ஜி.ஆரிடம் பேசிய வசனத்தின் கனம் உங்களுக்குப் புரியும்.என் தாயார் மணிமேகலையும், 'நீ, உன் விருப்பத்துக்கு அழைக்கிறாய். அப்பா மீது, எம்.ஜி.ஆர்., இன்னமும் வருத்தத்தில் இருப்பார். எனக்கு அவர் வருவார் என, நம்பிக்கை இல்லை...' என்றார்.'பரவாயில்லை, அம்மா. முயன்று பார்க்கிறேன்...' என்று புறப்பட்டேன்.என்ன பேசுவது? என்னவென்று சொல்லி அவரைத் திருமணத்துக்கு அழைப்பது என்றெல்லாம், கண்ணாடி முன் நின்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டேன்.வரவேற்பறையில், எம்.ஜி.ஆருக்காக காத்திருந்தேன். புன்னகைத்தபடி, தன் அறையில் இருந்து வெளி வந்த எம்.ஜி.ஆர்., தகதகவென்று தங்கம் போல் மின்னினார்.'வாங்க! 'கல்கண்டு' பாக்குறேன். அப்பாவுக்குப் பிறகு நல்லாப் பண்றீங்க! என்ன விசேஷம்?' என்றார்.'அடேங்கப்பா! நம்மைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறாரே...' என, வியந்தேன்.ஒத்திகை பார்த்த வசனத்தை வார்த்தை பிசகாமல் பேசினேன்.'அப்பா மேல உங்களுக்கு நிறைய வருத்தங்கள் இருக்கக் கூடும். எனக்கு நல்லாத் தெரியும். அதை எதையுமே மனதில் வைத்துக் கொள்ளாமல், உங்களுக்கே உரிய பெருந்தன்மையுடன், என் தம்பி திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்த வேண்டும். ரொம்ப அன்பாக உங்களிடம் கேட்டுக்கிறேன்...' என்றேன்.நான் இப்படிப் பேசுவேன் என, அவர் எதிர்பார்க்கவே இல்லை என்பதை, அவரது முகம் எனக்கு உணர்த்தியது.அசந்து போனார். சில வினாடிகள் பதில் வரவில்லை.'அவசியம் வர்றேன்...' என்றார், தீர்மானமாய்.என் காலின் கீழே, ஒரு பூஸ்டர் ராக்கெட் முளைத்து, என்னை அப்படியே அலாக்காகத் துாக்கியதைப் போல் உணர்ந்தேன்.'நான் கிளம்புறேன். அவசியம் சாப்பிட்டுட்டுப் போங்க...' என்றார்.ராமாவரம் போய், வெறும் வயிற்றுடன் திரும்புவதா? வாய்ப்பே இல்லை.திருமணத்தன்று காலையில் செய்தித்தாளைப் புரட்டினால், ஒரே ஏமாற்றம்!எம்.ஜி.ஆருக்கு, 'கஞ்சங்விட்டிஸ்' என்ற வெள்ளைக் கண் நோய் பாதிக்கப் பட்டிருப்பதால், அவர் கலந்து கொள்ள இருந்த அன்றைய நிகழ்ச்சிகள் ரத்து என்று, அதில் இருந்தது.எப்படி இருக்கும் எனக்கு!ஆனால், நடந்ததோ வேறு.திருமணத்துக்கு சரியான நேரத்துக்கு வந்துவிட்டார்.அவர் வந்து, 40 நிமிடங்கள் எங்களுடன் இருந்ததும், ஒலிம்பிக் பாஸ்கரனுக்கு வீடு வழங்க, எங்கள் திருமண இல்லத்தில் உறுதி தந்ததும், எதிரே வந்த, டணால் தங்கவேலு, எம்.சரோஜாவை, 'வாங்க தோட்டத்திற்கு...' என, அவர்களை, கையோடு அழைத்துப் போனதும், மறக்கவியலாத நினைவுகள். எம்.ஜி.ஆர்., வந்து சென்றதில் சில செய்திகளை நான், அவசியம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். சொல்கிறேன்! அடுத்த இதழில்...— தொடரும்லேனா தமிழ்வாணன்