ஆழ்ந்த பக்தி ஆனந்தம் தரும்!
பிருந்தாவனத்தில், சேவாகுஞ்ஜ் பகுதிக்கு அருகில், கண்ணன் கோவில் கட்டி வழிபாடு செய்து வந்தார், வியாசதாசர் எனும் மகான். தான் பூஜித்த கண்ணனை கல் விக்கிரகமாக நினைக்காமல், நிஜமானவராக கருதி, வழிபட்டார். அவரைப் பொறுத்தவரை, அவர் பூஜிக்கும் கண்ணன், உயிருள்ள திருமேனி. கண்ணனையும், கண்ணன் லீலைகளையும் நினைந்து நினைந்து, உருகி வழிபாடு செய்வார், வியாசதாசர். ஒருநாள், அப்பகுதியைச் சேர்ந்த மன்னர், அந்த கண்ணன் கோவிலுக்கு வந்தார்; வியாசதாசரின் மனமொத்த வழிபாட்டைக் கண்டு மெய் மறந்தார்.'சுவாமி, தாங்கள் என் அரண்மனைக்கு வர வேண்டும்...' என, அழைப்பு விடுத்தார். 'மன்னா, மன்னியுங்கள். என் கண்ணனைப் பிரிந்து என்னால் வர இயலாது...' என, மறுத்தார், வியாசதாசர்.வற்புறுத்தவில்லை; அமைதியாக திரும்பிச் சென்றார், மன்னர்.சில நாட்கள் கடந்தன. ரத்தினங்கள் பல பதித்த ஒரு தங்கப் புல்லாங்குழலை, வியாசதாசரின் கோவிலுக்கு அனுப்பிய மன்னர், 'இதை, பகவானுக்கு அணிவிக்க வேண்டும்...' என்ற வேண்டுகோளையும் அனுப்பினார்.வியாசதாசரும், அந்தப் புல்லாங்குழலைக் கண்ணன் திருக்கரங்களில் பொருத்த முயற்சி செய்தார். அது சரியாகப் பொருந்தவில்லை; கொஞ்சம் பெரிதாக இருந்தது. அதற்காக, வியாசதாசரும் விடவில்லை; கொஞ்சம் அழுத்தி, புல்லாங்குழலைப் பகவான் திருக்கரங்களில் சொருகி வைக்க முயன்றார்.அப்போது, பகவானின் ஒரு திருக்கரத்தில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசியத் துவங்கியது. பதறிப் போனார், வியாசதாசர். புல்லாங்குழலை எடுத்து ஒரு பக்கமாக வைத்து விட்டு, ஒரு துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து, பகவான் கை காயத்துக்கு கட்டு போட்டார். அதன்பின், கண்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்டு, கதவுகளை மூடி, வெளியில் வந்தார்.மிகுந்த வருத்தத்தோடு உட்கார்ந்த வியாசதாசர், தண்ணீர் கூட குடிக்காமல் தியானம் செய்யத் துவங்கினார். மாலை நேரம், கதவைத் திறந்து கருவறையில் நுழைந்தார், வியாசதாசர். பார்த்தால், பகவான் கையில் கட்டு போட்டிருந்த துணியைக் காணவில்லை; காயமும் இல்லை. புல்லாங்குழலும் மிகவும் கச்சிதமாகக் கண்ணன் திருக்கரங்களில் பொருந்தி இருந்தது. ஆனந்தத்தில் குதித்தார், வியாசதாசர்.'கண்ணா... என் தெய்வமே, என் மனக்குறையைத் தீர்த்த உனக்கு, நான் என்ன கைம்மாறு செய்வேன்...' என்று சொல்லி, துதித்தார். ஆழ்ந்த பக்தி, அல்லல் நீக்கி ஆனந்தம் தரும்! பி.என்.பரசுராமன்