ரசிகர்கள் அல்ல பக்தர்கள்!
மே 25 - டி.எம்.சவுந்தரராஜன் நினைவு நாள்தமிழ் திரை உலகில் பின்னணி பாடகராக, 50 ஆண்டு காலம் கோலோச்சியவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., - சிவாஜி என இரு துருவங்களுக்கும் ஈடு கொடுத்து பாடியதோடு நில்லாமல், அனைத்து நடிகர்களுக்கும், இவரது குரல் பொருந்தியது, இறைவன் கொடுத்த வரம்.மீனாட்சி அய்யங்கார் - வேங்கடம்மாள் தம்பதியருக்கு மார்ச் 24, 1923ல் மதுரையில் பிறந்தார் டி.எம்.எஸ்., புரோகிதர் குடும்பத்தை சேர்ந்த இவர், ஆறாம் வகுப்பு படிப்பதற்கு, மாதம் ஒண்ணேகால் ரூபாய் சம்பளம் கட்ட வசதி இல்லாததால், இவரே கலெக்டர் அலுவலகம் சென்று, உதவி பணம் கேட்டு விண்ணப்பம் செய்தார். அரசு உதவியால் படிப்பு தொடர்ந்தது.சவுராஷ்டிரா பள்ளியில் படிக்கும் காலத்தில், இறை வணக்கத்தின் போது பிரார்த்தனை பாடல்கள் பாடி, அனைவரையும் கவர்ந்தார்.கடந்த, 1946ல், டி.எம்.எஸ்.,சுக்கும், சுமித்ராவுக்கும் திருமணம் நடந்தது. இவரது திருமண பத்திரிகையில், 'தாங்கள், ரேஷன் அரிசியை, இரண்டு தினங்களுக்கு முன்பாகவே அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்...' என்று சுவாரசியமான அடிகுறிப்பு அச்சிடப்பட்டிருந்தது.காரணம், அக்காலகட்டத்தில் அரிசி தட்டுப்பாடு இருந்ததால், அரசுக்கு கண்துடைப்புக்காக பத்திரிகையில் இப்படி போடுவர். உண்மையில், சாப்பிட வருவோர், ரேஷன் அரிசியை அனுப்ப மாட்டார்கள். திருமணத்தின் போது அதிகாரிகள் வந்து, 'இத்தனை பேருக்கு உணவளிக்க எங்கிருந்து அரிசி கிடைத்தது?' என்று கேட்டால், 'திருமணத்திற்கு வந்தவர்கள் கொடுத்தது...' என்று கூறுவதற்காக, இப்படி அச்சிடுவது வழக்கம். இரண்டாம் உலகப் போர் காரணமாக, மக்கள் அதிக விலை கொடுத்து அரிசியை, கள்ள மார்க்கெட்டில் வாங்கி திருமணத்தின் போது பயன்படுத்துவர். திருமணத்திற்கு பின், சினிமா வாய்ப்பு கேட்டு சென்னையில் அலைந்த காலத்தில், ஏகப்பட்ட கசப்பான அனுபவங்களை சந்தித்துள்ளார் டி.எம்.எஸ்., கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி செல்லும் போது, பெட்டி கடையிலிருந்து பெறப்பட்ட சிகரெட் அட்டையைக் கிழித்து, அதன் பின்புறம், தன் முகவரியை எழுதிக் கொடுப்பார்.இவ்வளவு கடும் முயற்சிக்கு பின், கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் பாட, முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், தூக்கு தூக்கி படத்தில், எட்டு பாடல்கள் பாடி அசத்தினார். முதலில் டி.எம்.எஸ்., பாடுவதை ஏற்றுக் கொள்ளாத சிவாஜி, பின், அவரது பாடலை ரிகார்டிங் தியேட்டரில் கேட்டபின், 'இனி, நீங்கள் தான் எனக்கு பின்னணி பாட வேண்டும்...' என்றார். இன்னொரு பக்கம் இவரது பாடலை கேட்ட எம்.ஜி.ஆர்., தன், மலைக்கள்ளன் படத்திற்கு டி.எம்.எஸ்., தான் பாட வேண்டும் என்று கூறி பாட வைத்தார். பாடல்கள் அனைத்தும், 'ஹிட்' ஆனது.அவ்வளவு தான்... அதிர்ஷ்ட காற்று, டி.எம்.எஸ்., பக்கம் திரும்பியது. காலை முதல், இரவு வரை பாடல் ரிகார்டிங் தான். தூங்கவும் நேரமில்லை என்ற அளவுக்கு, பல நடிகர்களுக்கு பின்னணி பாடும் வாய்ப்பு ஏற்பட்டது.இப்படி, 50 ஆண்டு காலம், தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தார் டி.எம்.எஸ்., இவருக்கு, தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்கள் உண்டு. ஆனால், அவர்கள் தங்களை ரசிகர்கள் என்று கூறாமல், 'டி.எம்.எஸ்., பக்தர்கள்' என்று கூறிக் கொள்வதுடன், ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாள் அன்று, பட்டிமன்றம், கச்சேரி என்று அமர்க்களப்படுத்துவர்! - எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்