செய்யும் தொழிலே தெய்வம்!
செய்யும் தொழிலை சிறப்பாக்கும் ஆயுத பூஜை அறிவை அள்ளித்தரும் சரஸ்வதி பூஜை விஸ்வரூப வெற்றி தரும் விஜயதசமி கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி, கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளே, சரஸ்வதி பூஜை. கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள். இதை உணர்ந்து, தொழிலையும், தொழிற் கருவியையும் கடவுளாக கருதி வழிபடுவதே, இதன் ஐதீகம்.ஆயுதத்தின் பயனை உணர்த்தத்தான், ஆயுத பூஜை கொண்டாடப் படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக, அவற்றையும் இறை பொருளாகப் பாவித்து வணங்குகிறோம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இனி சிறப்பாக நடக்க அருள் வேண்டியும், இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.நம் பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர் மற்றும் அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும், தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை, இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வெற்றி தரும் விஜயதசமி!விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என, எது துவங்கினாலும், ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி மற்றும் புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை, இந்த நாளில் துவங்கினால், சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில், 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது, 'வித்யாரம்பம்' எனப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், கூத்தனுாரில் குடி கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியை ஏராளமானோர் சென்று வழிபட்டு, குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுப்பர். மகிஷனை வென்ற துர்க்கை!தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க, தேவியானவள், துர்க்கை வடிவம் எடுத்தாள்.ஒன்பது நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை வதம் செய்தாள், துர்கா தேவி. நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக, விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன, புராணங்கள்.இந்த நாளில் அன்னை துர்கா தேவியை வேண்டி, எந்த செயலையும் துவங்கினால், தீமைகள் விலகி, நலங்களும், வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை.தனம், தான்யம், முன்னேற்றம், சந்தோஷம், வெற்றி, நம்பிக்கை, புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, ஐஸ்வர்யம் மற்றும் நிம்மதி ஆகிய அனைத்தையும் தரும் இப்பண்டிகையை கொண்டாடி, நாமும் வாழ்வில் முன்னேறுவோம். தொகுப்பு: மாணிக்ப்ரபா