உள்ளூர் செய்திகள்

களப் பலி!

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்இரைந்து கத்தினான், ராஜா என்கிற ராஜாமணி; அவன் எதிரில் தலைகுனிந்து நின்றாள், தைலாம்பாள்.ராஜாவின் கைகளில் ஸ்கேன் ரிப்போர்ட்.''மறுபடியும் பொட்ட புள்ள. வேற வேலை இல்லை.''''யாருக்கு?''''கிண்டலா... ஏற்கனவே நாலு பெண் குழந்தைகள். ஒவ்வொரு தடவையும் ஆம்பள புள்ள பொறக்கும் பொறக்கும்ன்னுட்டு, பொட்ட புள்ள. இத, 'அபார்ஷன்' பண்ணிடு.''''ஏங்க, இதற்கு நான் மட்டும்தான் காரணம்கிற மாதிரி பேசுறீங்க... நீ பாதி, நான் பாதி தானே?'' ''இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம்... கலைச்சுடு.''''இப்ப வேணாங்க; ஆரம்பத்திலேயே எச்சரிக்கையா இருந்திருக்கணும். இப்போ மூணு மாசம் ஆயிடுச்சு.'' ''வேண்டாம்... நான் சொல்றத கேளு, மறுபடியும் மறுபடியும் என்னால இந்த குடும்ப பாரத்தை சுமக்க முடியாது. பேசாம சொல்றதைக் கேளு, ஒண்ணும் ஆகாது. குழந்தைகளை கூட்டிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போ. அங்க போய் கலைச்சிடு,'' என்றான்.பிளஸ் 2 படித்து, தனியார் கம்பெனி ஒன்றில் டைப்பிஸ்ட் ஆக வேலை பார்த்தவளை, திருமணம் செய்து கொண்டான். 'நீ, உன் வேலைய, 'ரிசைன்' பண்ணிடு. நான் உன்ன பார்த்துக்கிறேன்...' என்று, கல்யாணமான புதிதில் சொன்னவன், குடும்ப பாரம் அதிகமாக, 'நீயும் வேலைக்கு போயேன்...' என்றான். அப்போது, இவளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். 25 வயதிற்குள் திருமணம் ஆகி, 35 வயதிற்குள் நாலு குழந்தைகளை பெற்றவள். 'ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்' என்று தெரியாமலா கூறினர்.குழந்தைகளுக்கு, 'டயாபர், பேபி புட்' முதல், பெரிய குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடை, புத்தகம் என்று வாங்கி தர சிரமப்பட்டான்.அம்மா வீட்டுக்கு கிளம்பியவளிடம், ''பெரிசு ரெண்டையும் விட்டுட்டு, சின்னதுகளை மட்டும் கூட்டிட்டு போ,'' என்றான்.''இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்ளும் அம்மாவால், கூட ரெண்டு குழந்தைகளைப் பார்த்துக்கறது கஷ்டமில்லை. நான் எல்லாரையும் கூட்டிட்டு போறேங்க... ஒரு மாசம் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு, அங்கேயே இருக்கட்டும்,'' என்றாள்.கடன் அடைக்கும் கவலையில் ராஜா, எதையுமே யோசிக்கவில்லை. அவள் அழுதபடி கிளம்பி சென்றாள்.ஒரு மாதம் ஆகியது. தைலாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. போன் செய்தால் எப்போதுமே, 'ஸ்விட்ச் ஆப்' என்றே வந்தது.'கோபமாக இருந்துவிட்டுப் போகட்டும். எப்படியும், 'அபார்ஷன்' முடிந்து தகவல் தெரிவிப்பாள். வரட்டும் கழுதை எங்கே போவாள், இங்கதானே வரணும்...' என நினைத்துக் கொண்டான்.இவன் கனவுகளில் பெரியவளும், சின்னவளுமாக வந்து, 'எங்களை எப்ப கூட்டிட்டு போக போறீங்க அப்பா?' என்று கேட்டனர். அதை எல்லாம் புறம் தள்ளி எந்திரத்தனமாக இருந்தான்.ஒருநாள், அழைப்பு மணி அடிக்க, தைலா தான் திரும்பி விட்டாளோ என, அவசரமாக ஓடி, கதவை திறந்தான்.சித்தப்பா நின்றிருந்தார். திடீர் திடீரென்று வருவார்; பிறகு காணாமல் போவார். ரயில்வே வேலையில் இருந்தவர், வேலையை ராஜினாமா செய்து வந்த பணத்தில், நிம்மதியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை. ''வாங்க சித்தப்பா,'' என்று வரவேற்றான். கைப்பையில் இருந்து எதையோ எடுத்தார், சித்தப்பா.''வீடு ஏன் நிசப்தமா இருக்கு... தைலா எங்கே?'' என்றார்.''பிறந்த வீட்டுக்கு போயிருக்கா.'' ''வெரிகுட். எனக்கு எழுதியிருந்தா கர்ப்பமா இருக்கிறதா... ஊருக்கு போயிட்டாளா... சரி, அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகணும்ன்னு, கர்ப்ப ரக் ஷாம்பிகை கோவிலுக்கு போயி, அர்ச்சனை பண்ணி, பிரசாதம் வாங்கிட்டு வந்தேன்.''நானே கொண்டு கொடுத்துடறேன்; பக்கத்துல ஈரோடு தானே... ஆமா, போன் ஏன், 'ஸ்விட்ச் ஆப்'ல இருக்கு... என்ன ஆச்சு?'' இன்னும் சொல்லாமல் இருந்தால் தப்பாகும் என்று, மெல்ல நடந்தவைகளை கூறினான். சற்று நேரம் பேசாமல் இருந்தவர், ''உனக்கு ஒண்ணு தெரியுமா ராஜா... உங்க பாட்டிக்கு நான், 16வது குழந்தை. உங்க அப்பா, 15வது குழந்தை. 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க'ன்னு பெரியவங்க சொன்னாங்க... அவங்க, 16 குழந்தைகள்ன்னு தப்பா நினைச்சுட்டாங்க. 16 வளங்களைத் தான் அப்படிச் சொன்னாங்க... ''இப்படித்தான் எல்லாத்தையும் நாம தப்பு தப்பா புரிஞ்சுக்கறோம். மூத்த அண்ணாவின் மனைவி அதாவது என் பெரிய அண்ணி பட்ட பாடு ஒண்ணு ரெண்டு இல்ல. அந்தக் காலத்திலே சின்ன வயசுக் கல்யாணம். வருஷத்துக்கு ஒரு குழந்தை; பிள்ளை பெற்று நலிந்த உடம்பு, கணவனுக்கு ஊழியம் செஞ்சு தேய்ந்து போன பெண்மை. அவங்களை பார்த்து நான், திருமணமே செஞ்சுக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.''நீ என்னடான்னா ஏதோ ஒன்றுக்காக பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பிட்டே... இதோ பார் உன்கிட்ட இருக்கிற ஆணாதிக்க மனப்பான்மையை விட்டு ஒழி,'' என்றார். ''சித்தப்பா, நான் பேச்சுக்கு தான் சொன்னேன். கோவிச்சுட்டு போய்ட்டா,'' என்றான்.''இருக்கட்டும் கோபப்படற உரிமை உனக்கு இருந்தா, அவளுக்கு பதிலுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லையா? காலம் மாறிப்போச்சு. சரியான அர்த்தத்தை சரியான கோணத்தில் புரிஞ்சுக்கணும். 'ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்' அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ''ஐந்து பெண்கள் இல்லப்பா... ஐந்து விதமான தகவல்கள் சொல்றேன் கேட்டுக்கோ... ஆடம்பரமாக வாழும் தாய் - வரவுக்கு மேல் செலவு செய்யும் தாய்; பொறுப்பில்லாத தகப்பன் - அதாவது, கடன் வைக்கும் தந்தை; ஒழுக்கம் தவறும் மனைவி; துரோகம் செய்யும் உடன்பிறப்புகள்; பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள் - சொல் கேட்காத பிள்ளைகள். இவைகள்தான் அந்த ஐந்து அடையாளங்கள்,'' என்றார், சித்தப்பா.திகைத்தான், ராஜா.''இந்த அடையாளங்கள் உன்கிட்ட எதுவுமே இல்லை. நீ என்னத்துக்கு அவள் மேலே கோபப்பட்டே?''யோசித்தான், ராஜா.'ஊரிலே நிறைய நுாலகங்களை அடையாளம் காட்டினால், அந்த ஊரில் படித்தவர்கள் அதிகம் என்று பொருள். கோவிலை அடையாளம் காட்டினால், பக்திமான்கள் நிறைய இருக்கின்றனர் என்று பொருள். மதுக் கடைகளை அடையாளம் காட்டினால், குடிமகன்கள் நிறைய இருக்கின்றனர் என்று பொருள்...' என, வெ.இறையன்பு ஒரு கட்டுரையில் எழுதியிருந்ததை படித்தான். 'எனக்கு என்ன அடையாளம்? கணவனா, தகப்பனா, தோழனா? இப்படி எந்த அடையாளமும் இல்லாத எனக்கு என்ன பெயர், மனிதன் என்ற பெயரா?' என யோசிக்கையில், மொபைலில் அழைப்பு வந்தது.தைலாவின் தாய் அழைத்தாள். 'என்னாச்சு, எதற்காக கூப்பிடுகிறார்?' என்று திகைத்தவன், மொபைலை உயிர்ப்பித்து, பேசினான். அதன்பின், இவனும், சித்தப்பாவும் அவசரமாக கிளம்பினர்.மருத்துவமனை. தனி வார்டில் படுத்திருந்த தைலாவின் முன் கண்ணீருடன் நின்றிருந்தான், ராஜா. அவள் கையைப் பிடித்து, ''என்னை மன்னிச்சிடு என்னை மன்னிச்சிடு,'' என்று நுாறு முறை மன்னிப்பு கேட்டும், தைலா பேசவில்லை.நர்ஸ் வந்தார்.''வாங்க மேடம், 'ப்ரிமெச்சூர் பேபி' பெண் குழந்தை. 'இன்குபேட்டரில்' இருக்கு. பேபிக்கு பால் கொடுக்கணும்,'' என்று தைலாவை, 'வீல் சேரில்' அழைத்துச் சென்றார்.கைகூப்பி, 'அம்மா கர்ப்பரட்சாம்பிகே... மனைவியையும், குழந்தையும் காப்பாற்றிய உனக்கு நன்றிம்மா... தைலா குணமாகி, வீட்டிற்கு வரட்டும். கண்டிப்பா என் குடும்பத்தோட உன் சன்னிதானத்திற்கு வரேன். விரைவில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்கிறேன்...' என, மனமுருக வேண்டிக் கொண்டான், ராஜா. அதே சமயம், மருத்துவமனையிலிருந்த கோவிலின் வாசலில், ராஜாவின் குழந்தைகளுடன் நின்றிருந்தார், சித்தப்பா.இவர் காதலித்த பெண், காமாட்சி. ரயில் விபத்து ஒன்றில் அகால மரணமடைந்தாள். அப்போது, அவள் வயிற்றில் இவருடைய கரு. கருவை அழிக்க சொன்னார். ஆனால், அது அவளை தற்கொலை வரை கொண்டு போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.அதன்பின், சன்னியாசி வாழ்வு வாழ ஆரம்பித்தார். இவருடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு உதவுவதில் போனது. இப்போதுகூட பிராயச்சித்தமாக தான் இங்கு வந்து, ராஜாவின் குழந்தையை காப்பாற்றி இருக்கிறார். வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.கவுரி மனோஹரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !