உள்ளூர் செய்திகள்

கொடுப்பதற்கு மனம் இல்லையா!

அறம் செய விரும்பு மற்றும் பரோபகாரத்தால் ஏற்படும் பலன் பற்றியெல்லாம், நமக்கு உபதேசித்துள்ளனர், ஆன்றோர். ஆனால், நடைமுறையில் அதை மறந்து விடுகிறோம். உதவி செய்ய மறந்தவருக்கு நேர்ந்த நிலையை பற்றி பார்ப்போம்...அனுமார் கோவில் ஒன்றில், ஆண்டுதோறும் திருவிழா நடக்கும்; கூட்டம் ஏராளமாக கூடும். கூட்டம் இருந்தால், கடைகளும் முளைக்கும், வியாபாரமும் நன்றாக நடக்கும். வழக்கம்போல், இனிப்பு கடை வைத்து, சம்பாதிக்கும் சேட் ஒருவர், அந்த ஆண்டும், கடை வைத்தார்.ஏராளமான மக்கள், அனுமாரை தரிசிக்க வந்தனர். திருவிழாவின் கடைசி நாள், மாலைப் பொழுது நெருங்கிக் கொண்டிருந்தது.துறவி ஒருவர், இனிப்பு கடைக்காரரிடம், ஒரு ரூபாயை நீட்டி, இரண்டு நாளாக நான் சாப்பிடவில்லை. மிகவும் பசியாக இருக்கிறது. கால் கிலோ இனிப்பு கொடுங்கள்...' என, கேட்டார்.காசை வாங்கிய கடைக்காரர், 'கால் கிலோ இனிப்பு, ஐந்து ரூபாய்; ஒரு ரூபாய்க்கு எப்படி கொடுக்க முடியும்...' என, கேட்டார். 'பசி தாங்கவில்லை. எப்படியாவது கொடு அப்பா...' என, வேண்டினார், துறவி. கடைக்காரருக்கு கோபம் வந்தது, 'இது என்ன, உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா... நீர் கேட்டவுடன் கொடுப்பதற்கு... உம் காசு இந்தாரும்... எடுத்து போங்கள்...' என்று சொல்லி, துறவி தந்த ஒரு ரூபாயை வீசி எறிந்தார்; தரையில் இருந்த சிறு பொந்தில் போய் விழுந்தது, காசு.துறவி கோபப்படவில்லை; மாறாக, 'உன் அப்பன் வீட்டு சொத்தா என்று கேட்கிறாயே... எல்லாமே, நம் இருவருக்கும் அப்பனான, இந்த அனுமாரின் சொத்து தானே, அப்பா...' என, கேட்டார். அதை காதில் வாங்காததைப் போல், தன் வேலையை கவனிக்கத் துவங்கினார், கடைக்காரர். அருகே இருந்த ஒரு கல்லின் மேல் போய் உட்கார்ந்தார், துறவி.கடையை மூட வேண்டிய நேரம்... அன்றைய விற்பனை எவ்வளவு என்று, பணத்தை எண்ண துவங்கினார், கடைக்காரர். 490 இருந்தது. 'ப்ச்... இன்னும், 10 ரூபாய் இருந்தால், 500 ரூபாயாக ஆகுமே...' என எண்ணிய கடைக்காரர், பணத்தை ஒரு பையில் போட்டு, கட்டி வைத்தார்.அனுமார் கோவிலுக்கு அருகில் இருந்த மரத்தில் இருந்து, சில குரங்குகள் கீழே இறங்கின. பணப்பையை எடுத்து, மரத்தில் ஏறியது, ஒரு குரங்கு; இன்னொன்று, இனிப்புகளை துாக்கி வீசியது. இன்னொரு குரங்கு, கால் கிலோ இனிப்பு பொட்டலத்தை எடுத்து போய், கல்லின் மேல் உட்கார்ந்திருந்த துறவியின் மடியில் போட்டது. மற்றொரு குரங்கு, வேறு யாரும் அக்கடைக்காரருக்கு உதவிக்கு வந்து விடாதபடி, வாசலில் உட்கார்ந்து, பல்லைக் காட்டியது.பணத்தை பறிகொடுத்த கடைக்காரர், அழ ஆரம்பித்தார்.பசியோடு வந்த துறவியை அவமானப் படுத்தி, அவர் மனதை நோகச் செய்ததன் காரணமாகவே, இத்துயரம் விளைந்தது -என்று எண்ணிய அவர், துறவியின் கால்களில் விழுந்து, மன்னிக்கும்படி வேண்டினார்.'அப்பா... என் காலில் விழாதே... அதோ, அனுமார் காலில் போய் விழு...' என்றார், துறவி.அவர் சொன்னபடியே, அனுமார் திருவடிகளில் விழுந்தார், கடைக்காரர்.அதே வினாடியில், மரத்தின் மீதிருந்த குரங்கு, கையில் இருந்த பணப்பையை வீசியது. ஓடிப்போய் அதை எடுத்த கடைக்காரர், மிகுந்த நன்றியுடன் துறவியை நெருங்கினார். 'அப்பா... அடுத்தவர்களுக்கு உதவியாக, பரோபகாரனாக இருக்கப் பழகிக்கொள்... அப்போது தான் தெய்வம் உன் பக்கம் இருக்கும். பரோபகாரம் செய்வோரை, ஒருபோதும் கைவிட மாட்டார், பகவான்...' என்று, கடைக்காரருக்கு உபதேசம் செய்தார், துறவி.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு அருகில் நடந்த வரலாறு இது.அடுத்தவர்களுக்கு எதையாவது கொடுக்க முடிகிறதோ இல்லையோ... 'யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே' என, திருமூலர் சொன்னபடி, இனிமையாக, சில வார்த்தைகளாவது பேசிப் பழகலாமே! பி.என்.பரசுராமன் அறிவோம் ஆன்மிகம்!மனிதர்கள் செய்ய வேண்டிய, நற்குண செயல்கள் எவை?வேள்வி, தர்ம சிந்தனை, ஆன்மிக ஆர்வம், தவம், வாய்மை, மன்னித்தல், கருணை மற்றும் பிறர் பொருளை விரும்பாமை. இந்த எட்டும், நாம் பின்பற்ற வேண்டிய நற்குண பாதைகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !