கடமை உணர்வு!
சில ஆண்டுகளுக்கு முன், எர்ணாகுளம் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், திருட்டுக் குற்றம் சாட்டப் பட்ட தமிழ் நாடோடி பெண் ஒருவர், அழும் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு சோகமாக நின்றிருந்தார். குழந்தையின் அழுகுரல் அதிகமாக இருந்தது. அதை கவனித்த நீதிபதி எஸ்.எச்.பஞ்சாபகேசன், குழந்தை பற்றி அப் பெண்ணிடம் விசாரித்தார். 'இவன் என் குழந்தைதான்...' என்றார் அப்பெண். அவள் பொய் சொல்கிறாள் என்பதை உணர்ந்த நீதிபதி, குழந்தையை, சாயி அனாதை இல்லத்தில் தங்க வைத்து படிக்க ஏற்பாடு செய்தார். ஆண்டுகள் பல ஓடியது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் சாயி கிராம இன்ஜினியரிங் கல்லுாரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் நீதிபதி எஸ்.எச்.பஞ்சாபகேசன். அங்கு தான் அனாதை இல்லத்தில் சேர்த்த குழந்தை, வாலிபனாக காட்சியளித்தார். அக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவனாக இருந்த அவனை கட்டிப்பிடித்து மகிழ்ந்தார் நீதிபதி.அன்று அவர் கடமை உணர்வுடன் செயல்பட்டதால், ஒரு குழந்தை சமூக விரோத செயல்களில் இருந்து தப்பித்து விட்டது.— ஜோல்னாபையன்.