தேர்தல் திருவிழா ! - பிரபஞ்சகுமார்
விசேஷமாய் வடிவமைக்கப்பட்ட வீல் சேரில், சரிவாய் அமர்ந்திருந்தார் முதல்வர் காத்தவராயன். தோளில் பச்சை நிற துண்டு கிடந்தது. கனத்த குளிர் கண்ணாடி, காத்தவராயன் யோசிப்பதை வெளிக்காட்ட மறுத்தது.காத்தவராயன் எதிரில், காவல்துறை தலைவர் வந்து நின்று, விறைத்து சல்யூட் அடித்தார்.''ஹும்... உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுது டி.ஜி.பி.,?''காவல்துறை தலைவர் சிரித்தார்.''நமக்கு மிக மிக சாதகம் தலைவரே... 83 சதவீத பேர், நம் கூட்டணிக்கு தான் ஓட்டளிக்க இருக்கின்றனர். போன தடவையை விட, இந்த தடவை அதிக சீட்கள் பெற்று, வரும் சட்டசபை பொதுத்தேர்தலில் ஜெயிக்க இருக்கிறோம் தலைவரே!''''உளவுத்துறை ரிப்போர்ட்டை, ஒவ்வொரு தொகுதிக்கும் போய் தயாரிச்சீங்களா... டேபிள்ல உட்காந்து தயாரிச்சீங்களா?''''ஹி...ஹி! அப்படி இல்லீங்க தலைவரே...''''ஆர்.சி.,பொன்சன் சர்வே என்ன சொல்லுது?''''உளவுத்துறை ரிப்போர்ட்டோட ஏறக்குறைய ஒத்துப்போகுது பொன்சன் சர்வே. 79.9 சதவீத பேர், நம் கூட்டணிக்கு ஓட்டளிக்கப் போவதாக பொன்சன் சர்வே கூறுது!''''பலே... நாம நூறு கேஸ் போட்டாலும், நமக்கு சாதகமாக இருக்கும் பத்திரிகை கூட, 74.85 சதவீத மக்கள் ஆதரவு நமக்கு இருக்கிறதா சொல்லுது.''''ஆமாங்க தலைவரே!''''வேற என்ன செஞ்சா, ஆதரவு நூறு சதவீதமாகும்?''''நம்ம கட்சில இப்ப மூணு கோஷ்டிகள் இருக்கிறதா மக்கள் கேட்கறாங்க... உங்களுக்குப் பின், இந்த கோஷ்டிகள் வலுப்பெற்று, கட்சியை உடைத்துவிடும் என்கின்றனர். இந்த மூணு கோஷ்டி ஆட்களுக்கு எம்.எல்.ஏ., சீட்டுகள் கொடுக்காமல் இருந்தால், நம் கட்சி நூறு சதவீத மக்கள் ஆதரவு பெறும்!'' என்றார் மூத்த அமைச்சர்.''என்னய்யா... தைரியமா மூணு கோஷ்டிகளை பத்தி கமென்ட் அடிக்கிற... நீ எந்த கோஷ்டிலயும் இல்லையா அல்லது மூணு கோஷ்டிகாரன்களும் உன்னை அடிச்சு விரட்டிட்டாங்களா?''''நான் எப்பவுமே காத்தவராயன் கோஷ்டிங்கோ!''''நாலாவது கோஷ்டி உருவாக்குற... நம்ம கூட்டணி தேசியக் கட்சில முப்பது கோஷ்டிகள். நாம பரவாயில்லைன்னு நினைச்சிக்க. ஒரு கட்சிக்கு, கோஷ்டிகள் கட்டாயம் தேவை. அப்பதான்ய்யா, ஒண்ணை ஒரு நேரத்துல தூக்கி, இன்னொன்னை இறக்கி அரசியல் பண்ணலாம். கோஷ்டிகள் இருக்கட்டும்... விடு!''''ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கம்ப்யூட்டர் பரிசளிக்கலாம். ஒன்மோர் இலவசம்!''''வீட்டுக்கு வீடு, 'டிவி' கொடுத்தால், அறிவு மங்கும். தொடர்ந்து நமக்கே ஓட்டுப் போடுவான். கம்ப்யூட்டர், உலக அறிவை வளர்க்கும். நமக்கு ஓட்டு போடுவதை நிறுத்தி விடுவான். இலவசம் எது கொடுத்தாலும், அது, அவன் அறிவை மங்க வைக்கணும்!''''தேர்தல் நெருக்கத்தில், எதிர் கூட்டணில இருக்கும் கட்சிகளை கையூட்டு கொடுத்து சிதறடிக்கணும்!''''ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு செய்றது தானே? புதுசா சொல்லு!''''அரசு ஊழியருக்கு இன்னும் பல சலுகைகளை வாரி வழங்கிட்டா?''''எப்படி?''''தினம் ஒரு மணிநேரம் வீதம், வாரத்துக்கு ஐந்துமணி நேரம்தான் வேலை. மாதாமாதம் டி.ஏ., 10 சதவீதம் உயர்த்தி தருவோம். ஓய்வு பெறும் வயதை 90 ஆக உயர்த்துவோம். மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்க அனுமதி!''''உருப்படியான யோசனை. பொதுக் குழுவை கூட்டி, நானே தீர்மானிக்கிறேன்!''''குடிப்பழக்கம் இல்லாதவன் ரேஷன் கார்டை ரத்து செய்யலாம். வாரம் ஐந்து லிட்டர் டாஸ்மாக் சரக்கை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் சகாய விலையில் வழங்கலாம்!'' என்றார் இன்னொரு அமைச்சர்.''சபாஷ்யா!''''வருடத்திற்கு ஒரு தலைநகரம் அறிவிப்போம். அடுத்த ஐந்து வருட ஆட்சியில், ஐந்து தலைநகரங்கள்.''''யோசிப்போம்!''''நம் கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள நடிகையை, தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகம் பேச வைப்போம். அவரால் ஒரு சதவீத ஓட்டு கூடாதா? சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு 4.5 சதவீதமாக உயர்த்துவோம். முஸ்லிம் அமைப்புகளுக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் சீட்டு தருவோம்!''''பிரதான முஸ்லிம் அமைப்பு, எதிரணிக்கு போய் விட்டதே!''''அமைப்பை இரண்டாய் உடைப்போம். உடைந்த அணிக்கு சீட்டு கொடுப்போம்!''''இரண்டாயிரத்து பதினொன்றை எல்லா கட்சிகளும், அவங்க ஆண்டு, அவங்க ஆண்டுன்றாங்களே தலைவரே!''''கழுதை ஆண்டு, எருமை ஆண்டு என சொல்லிக் கொள்ளட்டும். தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காமல், எது வேண்டுமானாலும் கூவிக் கொள்ளட்டும்!''''நம் கூட்டணியில் இடம் கேட்டு வர்ற எல்லா கட்சிகளுக்கும் சீட் தர முடியாது போலிருக்கே... அவர்கள் அதிருப்தி, நம் தேர்தல் வெற்றியை சிறிதாவது பாதிக்குமே!''''சீட்டு கொடுத்தவர்களுக்கு சட்டசபையில் இடம். சீட்டு கொடுக்காதவர்களுக்கு என் இதயத்தில் இடம். சென்டிமென்ட் வசனம் பேசி, அவர்களை கக்கத்தில் வைத்துக் கொள்வேன்!''''சில சினிமா நடிகர்கள், தனி கட்சி வைத்திருக்கின்றனரே... அவர்களை என்ன செய்வது?''''அவர்கள், டென்னிஸ் பந்து பொறுக்கி போடும் சிறுவர்கள் மாதிரி; என்னைக்குமே ஆட்டக்காரர்கள் ஆக மாட்டார்கள்!''பேச்சின் இடையே, இளைய கவிஞன் சஞ்சய் குறுக்கிட்டான். ''அய்யா... குறுக்கே பேசுவதற்கு மன்னிக்கவும்!''''என்ன... உன்னை அரசவைக் கவிஞராக்கினால், சட்டசபை தேர்தலில் நம் கட்சி 100 சதவீதம் ஓட்டு பெறும் என்கிறாயோ?''''இல்லை... இது வேறு யோசனை...''''சொல்!''''இந்த வருடம் நீங்கள், ஐந்து புதிய படங்களுக்கு கதை, வசனம் எழுதுகிறீர்கள்!''''படம் எடுப்பவர்கள் எல்லாம், நம் கட்சியின் மாவட்ட செயலர்கள் என்பது மக்களுக்கு தெரியாது தானே?''''ஆமா தலைவரே... தலைவரின் தலைவரே... புகழுரைக்கு மயங்காத புகழேந்தியே...''''நான் கதை வசனம் எழுதுகிறேன்... அதற்கென்ன?''''யோசித்து பாருங்கள் தலைவரே... இதுவரை மக்களுக்கு நீங்க பலதரப்பட்ட இலவசங்களை வாரி வழங்கியுள்ளீர்கள். எல்லா இலவசங்களையும் விட, இது மேன்மையானது. இந்த இலவசம், தமிழ் உலகம் அழியும் வரை, தமிழக மக்களின் மூளையில் நின்று தித்திக்கக் கூடியது!''''பீடிகை போடாம விஷயத்துக்கு வா!''''உங்களின் ஐந்து படங்களையும் இலவசமாய் பார்க்க, மக்களுக்கு ஒரு அட்டை வழங்கி விடுவோம். சினிமாவின் இடைவேளையில் அவர்களுக்கு, பாப்கானும், பேமிலி பேக் ஐஸ்கிரீமும் வழங்குவோம். இதில், நமக்கு இரண்டு நன்மைகள் உள்ளன...''காத்தவாரயனின் முகம் பரவசமடைந்தது. ''மேலே சொல்...''''உங்களின் படங்களை, மக்கள் பார்க்க வரமாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை பொய்ப்பித்து விடலாம். அடுத்து, மக்களுக்கு தேர்தல் வாரங்கள் முழுக்க அனுபவிக்கக்கூடிய ஒரு இலவசத்தை கொடுத்து, அவர்களின் மெகா திருப்தியை அடைகிறோம்!''''தம்பி... பிரமாதமான யோசனையை கூறினாய். நீங்கள் எல்லாம் என்னங்கய்யா நினைக்கிறீர்கள்?''அமைச்சர் அருள்முருகன், தன் மணிபர்ஸ் வாயை திறந்து சிரித்தார்.''நல்ல யோசனை தலைவரே... அமைச்சர்களாகிய எங்களுக்கும், இலவச சினிமா கார்டு வழங்க மறந்து விடாதீர்கள். நாங்கள் எல்லாம், தரை டிக்கெட்டில் அமர்ந்து, காட்சிக்கு காட்சி விசிலடிப்போம் தங்க தலைவரே...''சீனியர் கவிஞர் பவளராஜ், ''குட்டி கவிஞா... வாழ்க்கையில் இப்போதுதானடா ஒரு உபயோகரமான யோசனை கூறியுள்ளாய். இது கூட, 'ஆப் தி ரிக்கார்ட்' நான் கஜினியோடு பேசிய விஷயம். சுட்டுவிட்டாயடா சஞ்சய். தினம், தினம் நான் தலைவரோட பேசும் போது, இதை அட்வான்சா சொல்லியிருக்க வேண்டும். காப்பி ரைட் கை மாறி போச்சே!''ஏற்காடு ஏகாம்பரம், ''என்ன பேசினாலும் சத்தமா பேசுங்கப்பா. ஒண்ணுமே புரியல...''''திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான். புதிய சட்டசபை கட்டடம், எகிப்து பிரமிடு போலிருக்கிறதல்லவா... அதே போல்தான் இந்த திட்டமும். தலைவரின் ஐந்து படங்களை பார்க்க வர என்னால் இயலாது. காரணம், எனக்கு, 'கதை வசனம் போபியா' வந்திருக்கிறதாக மருத்துவர் சொன்னார் தலைவரே,'' என்றார் அமைச்சர் அறிவழகன்.ஆளாளுக்கு இந்த யோசனையை வானளாவப் புகழ்ந்தனர். காத்தவராயனின் மகன், ''இந்த இலவசத்தை, தேர்தல் வெற்றியை கொண்டாடும் போது கொடுக்கலாமே?''''இல்லை, இல்லை... தேர்தலுக்கு கொடுப்பதுதான் நல்லது!'' இன்னொரு மகன்.''என் படங்களை இலவசமாய் பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருகிறேன். இந்த இலவசத்தை எதிர்ப்பவர், என்னை சார்ந்தவர் அல்ல!''''தலைவரே... ஐந்து படங்களையும், தேர்தலுக்கு முந்திய வாரங்களில் ரிலீஸ் பண்ணிடுவோம். அப்பதான், இலவசம் வழங்கிய மொத்த பலன் நம் கூட்டணிக்கு கிடைக்கும்!''''ஆமாம் தலைவரே!''கூட்டம் முடிவுக்கு வந்தது.தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. இரு பிரதான கூட்டணிகளும், தத்தம் பாணியில், தமிழக மக்களை அதிரடித்தன. வழக்கம் போல் காத்தவராயன், ''இது தன் கடைசி தேர்தல்!'' என்றார். காத்தவராயனின் இரு மகன்களும், கோஷ்டி அமைத்து, தென் மாவட்டத்தையும், வடமாவட்டத்தையும் ஒரு கலக்கு கலக்கினர்.வாரத்துக்கு ஒரு படம் வீதம், ஐந்து வாரங்களுக்கு, தலைவர் காத்தவராயனின் ஐந்து படங்கள் ரீலிசாயின.முதல் வாரம் : மலைநாட்டு இளவரசி!இரண்டாம் வாரம்: உடன் பிறப்பே!மூன்றாவது வாரம் : இது ஒரு குடும்பக்கதை!நான்காவது வாரம் : தள்ளி நில்... கிட்ட வராதே!ஐந்தாம் வாரம் : நான் எழுதுவது கடிதமல்ல!மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். படம் முடிந்து வரும் மக்கள் அடிக்கும், 'கமென்ட்'கள், படு உற்சாகத்தை கிளப்பின. 'தூள், சூப்பர், அட்டகாசம், அற்புதம், அமர்க்களம்!'தலைவர் காத்தவராயன் ரிலாக்ஸ் ஆனார்.தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்தன. வரிசையாக இடிமேல் இடி, காத்தவராயன் கட்சி மீது விழுந்தது. காத்தவராயன் கட்சி கூட்டணி மொத்தமே, ஐந்து சட்டசபைத் தொகுதிகளை பெற்றிருந்தது.தலைவர் காத்தவராயனிடம், ''உங்க படங்களை பார்ப்பதற்கு முன், மக்கள் ஆதரவு உங்களுக்கு 79.9 சதவீதம் இருந்தது. உங்களின் முதல்படம் பார்த்தபின் 62 சதவீதம், இரண்டாவது படத்திற்கு 48 சதவீதம், மூன்றாவது படத்துக்கு பின் 37 சதவீதம், நான்காவது படத்துக்கு பின் 22 சதவீதம், ஐந்தாவது படத்துக்கு பின் 11 சதவீதம். நல்லவேளை நாம் ஆறாம் படம் காட்டவில்லை!'' என்றார் ஏ.சி.பொன்சன். எரிமலையாய் புகைந்தார் காத்தவராயன்.தலைவரின் படங்களை, தமிழக மக்களுக்கு இலவசமாய் போட்டுக் காட்டும் அரிய யோசனையை கூறிய இளம் கவிஞன் சஞ்சய் தலைமறைவாகி விட்டான். காத்தவராயன் இன்னும் அவனை தேடிக் கொண்டிருக்கிறார்! ***