கடுந்தவமும் காற்றாகி விடும்!
முன்னேறலாம் என்று, எதையாவது முனைந்து செய்யத் துவங்கினால், ஏதாவது ஓர் இடையூறு வருகிறது. அதை ஒதுக்கி விடலாம் என்றால், அதுவும் முடியவில்லை. விளைவு, முனிவர் ஒருவரின் வரலாறு இது:பெருங்காடு. அந்த அழகான காட்டில், முனிவர் ஒருவர், கடுந்தவத்தில் இருந்தார். இவ்வாறு யாராவது தவம் செய்தால், அவர்கள் தவத்தை கெடுப்பது, தேவேந்திரனின் வழக்கம்.முறைப்படி, ரம்பை, ஊர்வசி முதலானோரை அனுப்பவில்லை. முனிவரின் தவத்தை கலைப்பதற்கு, தேவேந்திர வடிவில் வராமல், ஒரு வீரனை போல, வேடம் தாங்கி வந்தார்.முனிவரை வணங்கி, 'சுவாமி... நான், வெளியூர் யாத்திரை செல்கிறேன் அதுவரை, இந்த கத்தியை தாங்கள் பத்திரமாக வைத்திருங்கள்...' எனச் சொல்லி, பளபளக்கும் கத்தியை, அவரிடம் தந்து, போய் விட்டார். அதன்பின், தேவேந்திரன் திரும்பி வரவேயில்லை.அவருக்கு தெரியும், இனிமேல், முனிவர் தவம் செய்ய மாட்டார் என்று. தன் திறமை மீது, அவ்வளவு நம்பிக்கை தேவேந்திரனுக்கு.இப்போது, முனிவருக்கு தவம் செய்வதோடு, கத்தியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் வந்து விட்டது. யாராவது திருடி போய்விட்டால் என்ன செய்வது... கண்கள் மட்டுமல்ல, கருத்தும் கத்தியிடமே இருந்தது. முனிவரின் தவம் செய்யும் நேரம் குறைந்தது. எங்காவது சென்றால் கூட, கையில் கத்தியை எடுத்துச் சென்றார். 'இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது...' என்பரே... அதுபோல, கத்தியை சுமக்க ஆரம்பித்த முனிவரும், சும்மா இருக்கவில்லை. அதுவரை, தர்ப்பை- மற்றும் காய்-கனிகள் ஆகியவற்றை, கையால் பறித்து வந்த முனிவர், பளபளக்கும் கத்தியால் நறுக்கத் துவங்கினார்.முனிவரின் தவம், மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. நாளாக நாளாக, கத்தியைப் பயன்படுத்தி, மிருகங்களையும் கொல்லத் துவங்கினார். அப்புறம் என்ன... முற்றிலும் சிதைந்தது, முனிவரின் தவம். புத்தியோ, கொடூரமாகப் போனது. இனிமேல், அந்த முனிவர் தவம் செய்து, பழைய நிலையை அடைவது, நடக்காத காரியம். அது மட்டுமல்ல, முறை தவறிய முனிவர், நரகத்தை அடைந்தார் என்று முடிகிறது கதை.ஒரு சிறு ஆயுதம்; பெரும் தபஸ்வி ஒருவரை, அடியோடு திருப்பிப் போட்டு விட்டதென்றால், நாம் எம்மாத்திரம்!எச்சரிக்கை... சற்று அயர்ந்தாலும், பட்ட பாடெல்லாம் வீணாகப் போய் விடும். ஞானானந்தமாக இருக்க வேண்டிய வாழ்வு, அஞ்ஞானானந்தமாக ஆகி விடும். கைபேசிகளிலும், மடிக்கணினிகளிலும், மனதையும், நேரத்தையும் பறிகொடுத்து, கஷ்டப்படும் நமக்கு, சொல்லப்பட்ட பாடம், இக்கதை. வால்மீகி சொன்னது போல், எச்சரிக்கையாக இருப்போம், ஏற்றம் பெறுவோம்.- பி.என்.பரசுராமன் அறிவோம் ஆன்மிகம்!சிரார்த்தத்தில் சேர்க்க வேண்டியவை எவை?உளுந்து, கறுப்பு எள், கோதுமை, பயத்தம் பருப்பு, வெல்லம், மிளகு, சம்பா நெல், பிரண்டை, கறிவேப்பிலை, பாகற்காய், வாழை, மாங்காய், இலந்தை பழம், நார்த்தங்காய், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, எலுமிச்சை, கொத்தவரங்காய், பலாக்காய் மற்றும் தேன். இவைகள் மிகவும் விசேஷமானவை.