உள்ளூர் செய்திகள்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்!

டிச., 25 -அஷ்டமி சப்பரம்சிலர் என்ன தான் உழைத்தாலும், சாப்பிடுவதற்கு கொடுத்து வைப்பதில்லை. ஏழை, பணக்காரர் என, இரு சாராருக்குமே இது பொருந்தும். ஒரு ஏழை, உடல்நலம் உள்ளவனாக இருந்தாலும், உழைப்புக்கேற்ற வருமானம் இல்லை என்றால், சாப்பாட்டிற்கு சிரமப்படுகிறான். பணம் படைத்தவர்களாக இருந்து, நோயாளியாக இருந்தால், சாப்பாட்டில், கட்டுப்பாடு இருக்கும். பணமும், உடல்நலமும் இணைந்து விட்டால், அவர்கள், சாப்பாட்டு விஷயத்தில் புண்ணியவான்கள். அத்தகைய புண்ணியத்தை இன்னொரு பிறவியிலாவது பெற, என்ன செய்ய வேண்டும்?ஒரு காலத்தில், மார்கழி தேய்பிறை அஷ்டமி, விசேஷ வழிபாட்டு நாளாக இருந்துள்ளது. அதை, இன்று வரை கடைபிடிப்பது மதுரைவாசிகள் மட்டும் தான். அன்று ஒருநாள் மட்டும் தான், மதுரை மீனாட்சியம்மையும், சுந்தரேஸ்வரரும் வெளிவீதிகளில் பவனி வருவர். முக்கிய திருவிழாக்களான சித்திரையில், மாசி வீதியிலும், ஆவணித் திருவிழாவில், ஆவணி மூல வீதியிலும், சிறிய விழாக்களின் போது ஆடி மற்றும் சித்திரை வீதிகளிலும் பவனி வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மார்கழி அஷ்டமியன்று மட்டும், கோவிலை விட்டு தள்ளியிருக்கும் நான்கு வெளி வீதிகளிலும், பவனி வருகின்றனர். காரணம், மக்களுக்கு திவ்ய தரிசனம் தருவதுடன், அன்று தான், உலக மக்களுக்கு அவர்கள் படியளக்கவும் செய்கின்றனர்.ஒருசமயம், பார்வதிதேவி, சிவனிடம், 'உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் கடமையை சரியாக செய்து விடுவீர்களா?' என்று கேட்டாள்.'கல்லினுள் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் சிசுவுக்கும் கூட, அது செய்த முற்பிறவி பலனுக்கேற்ப உணவளித்து விடுவேன். இதில் என்ன சந்தேகம்...' என்றார் சிவன். பார்வதி, சிவனை சோதிக்க ஆசைப்பட்டு, ஒரு எறும்பைப் பிடித்து, சிமிழுக்குள் அடைத்தாள். மறுநாள், 'நேற்று நீங்கள் ஒரு உயிருக்கு உணவளிக்காமல் விட்டு விட்டீர்களே...' என்றாள்.'யார் அது?' என்று சிவன் கேட்க, பார்வதி சிமிழைத் திறந்தாள். உள்ளே ஒரு அரிசி ஒட்டியிருந்தது. எறும்பை அடைக்கும் முன், அதனுள், ஒரு ஓரமாக அரிசி ஒட்டியிருந்ததை அவள் கவனிக்கவில்லை. கருணையுள்ள சிவன், எல்லா உயிர்களுக்கும் உணவளித்து விடுகிறார் என்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் செவிவழிக்கதை இது.இந்த நிகழ்வை வலியுறுத்தும் வகையில், அஷ்டமியன்று, மீனாட்சி சுந்தரேசுவரவர் பவனி வரும் சப்பரத்தின் மேல், நெல் மணிகளை வைத்திருப்பர். அவை, சாலை முழுவதும் கொட்டிக் கொண்டே வரும். எல்லா உயிர்களுக்கும், இறைவனின் கருணையால் உணவு தரப்படுகிறது என்பது, இதன் தாத்பர்யம். இந்த நிகழ்வின் மூலம், எல்லா உயிர்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்பதுடன், இல்லாமை இல்லாத நிலை எங்கும் நிலவ வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. வசதி படைத்தவர்கள், தேவை உள்ளோர்க்கு, இந்நாளில், தானம் கொடுத்து உதவினால், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளுக்கு பாத்திரமாகலாம். நோயற்ற வாழ்வுடன், அறுசுவை உணவு, எந்தக் காலமும் கிடைக்க, இந்த தானம் நமக்கு உதவும். தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !