கோல்கட்டா குடிசை முதல் பக்கிங்காம் அரண்மனை வரை!
பிரிட்டன் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பேராவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு, சமீபத்தில் லண்டனில் அரங்கேறியது. பிரிட்டன் இளவரசர் வில்லியமுக்கும், இளவரசி கேட் மிடில்டனுக்கும், அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த குட்டி இளவரசருக்கு, ஜார்ஜ் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.இளவரசி மிடில்டனுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதும், ஒட்டு மொத்த லண்டன் நகர மக்களும், பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டு விட்டனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள், களை கட்டின. ஒரு சிலர், கைகளில், ஷாம்பெயின் பாட்டில்களுடன், மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக காத்திருந்தனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, மீடியாக்காரர்களும் அங்கு குவிந்திருந்தனர்.பிரிட்டன் அரச குடும்பத்தில், புதிதாக குழந்தை பிறந்தால், அதை, ஏனோ தானோவென அறிவித்து விட மாட்டார்கள். அதற்கென, பாரம்பரிய நடைமுறைகள் பின்பற்றப்படும். இதன்படி, பிரிட்டன் அரண்மனையில் சேவகராக பணியாற்றும் ஒருவர் தான், குழந்தை பிறந்த செய்தியை, மக்களுக்கு தெரிவிப்பார். அரண்மனையில் ஏராளமான சேவகர்கள் பணியாற்றினாலும், யாராவது ஒருவருக்குத் தான், அரண்மனை வாரிசு பிறந்ததை தெரிவிக்கும், பேறு கிடைக்கும்.குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்ததை, உலகிற்கு தெரிவித்த பெரும் பாக்கியம் யாருக்கு கிடைத்தது தெரியுமா? 25 வயதே ஆன, இந்தியாவைச் சேர்ந்த, இளைஞர், பதர் அசீம் என்பவருக்கு தான் கிடைத்தது. ஆச்சரியமாக இருகிறதல்லவா? ஆனால், இவரின் பின்னணி பற்றி தெரிந்தால், இன்னும் வியப்பாக இருக்கும்.'இந்தியா உட்பட, 60க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசில், அரண்மனையில் சேவகராக பணியாற்றுபவர் என்றால், இவரும், மிகப் பெரிய குடும்ப பின்னணியை சேர்ந்தவராகத் தானே இருப்பார்...' என, நினைத்தால், அது, தவறு.இவர், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும், ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை பெயர், முகமது ரகீம். தாயார் பெயர், மும்தாஜ் பேகம். முகமது ரகீம், மிக சொற்ப வருமானத்தில், வெல்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு, பதர் அசீமையும் சேர்த்து, ஏழு பிள்ளைகள்.வயிற்றுக்கே உணவில்லாத போது, பிள்ளைகளை எப்படி படிக்க வைக்க முடியும்! இதனால், அயர்லாந்தை சேர்ந்த, ஒரு அறக்கட்டளை சார்பில், கோல்கட்டாவில் இயங்கி வரும், புனித மேரி ஆதரவற்றோர் பள்ளி, அசீமை அரவணைத்தது. அவரின் பள்ளி படிப்பு, அங்கு தான் கழிந்தது.அதே அறக்கட்டளை, ஸ்காட்லாந்தில் உள்ள நேப்பியர் பல்கலையில், அசீமை, பட்டப் படிப்பு படிக்க வைத்தது. இதன்பின், 2011ல், பக்கிங்காம் அரண்மனையில், உதவி பணியாளராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.ஓயாத உழைப்பு, கச்சிதமான வேலை, கரிசனம், புன்னகை பூத்த முகம் போன்ற, தன் சிறப்பம்சங்களால், உலகப் புகழ்பெற்ற பக்கிங்காம் அரண்மனையின், முதன்மை சேவகரானார் அசீம். இதுவே, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசை அறிவிக்கும், மிகப் பெரிய வாய்ப்பை, அவருக்கு பெற்றுத் தந்தது.குட்டி இளவரசர் பிறந்ததும், அதுபற்றிய விவரத்தை தெரிவிப்பதற்காக, பிரிட்டிஷ் ராணியின் மக்கள் தொடர்பாளர் அலிஷா ஆண்டர்சனுடன், பக்கிங்காம் அரண்மனையிலிருந்து, கோட், சூட்டுடன் நடந்து வந்தார் அசீம். இக்காட்சியை, கோல்கட்டாவில் உள்ள குடிசை வீட்டில், அவரது தாயும், தந்தையும், 'டிவி'யில் பார்த்து, ஆனந்த கண்ணீர் வடித்தனர்.குடிசைப் பகுதியில் பிறந்து, தன் கடின உழைப்பாலும், அறக்கட்டளை ஆதரவாலும், பக்கிங்காம் அரண்மனைக்குள் அடி எடுத்து வைத்து, குட்டி இளவரசர் பிறந்த செய்தியை உலகிற்கு, முதலில் தெரிவித்த பதர் அசீமின் சாதனை, மகத்தானது தான். ***