உள்ளூர் செய்திகள்

குப்பைக்காரி!

காலை, 6:00 மணி -கையில் ஒயர் கூடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள், ராமலட்சுமி. ஒல்லியான தேகம். எண்ணெய் தேய்த்து இறுக கட்டிய கொண்டை. பளிச்சென்று தெரியாத நிறத்தில் சேலை. காலில் ரப்பர் செருப்பு. முகத்தில் எப்போதும் ஒரு வாட்டம்.ஒயர் கூடையில், ஒரு சம்படத்தில், மோர் சாதமும், ஓரத்தில் ஊறுகாய். கை, முகம் துடைத்துக் கொள்ள, ஒரு துண்டு.சாலையில் பரபரப்பின்றி ஒன்றிரண்டு வாகனங்கள் போவதும், வருவதுமாய் இருந்தன. பைக்கில் வந்து கொண்டிருந்த வழுக்கை தலை மனிதர், ராமலட்சுமி அருகில் வண்டியை நிறுத்தி, ''ரெண்டு நாளா, உங்களைதான்மா தேடிக்கிட்டிருக்கேன். சாக்கடை அடைச்சிருக்கிறதால, என் வீட்டுக்கு முன் கழிவுநீர் தேங்கி, நாத்தம் தாங்க முடியலை,'' என்றார்.''எங்க இன்ஸ்பெக்டர், இன்னைக்கு எங்களுக்கு வார்டு பிரிச்சு விடுறாரு... எந்த வார்டு ஒதுக்குவார்ன்னு தெரியலை, சாயங்காலம் வந்து பார்க்கிறேன். இந்நேரம் அவர் வந்திருப்பார்,'' என்று சொல்லி நடந்தாள், ராமலட்சுமி.''எல்லாரும் வந்துட்டீங்களா,'' என கேட்டவாரே, தலைகளை எண்ணிய சுகாதார ஆய்வாளர், ''ஒண்ணு குறையுதே,'' என்றார்.''வீராச்சாமி, ஆஸ்பத்திரிக்கு போய், ஊசி போட்டுட்டு வர்றேன்னு சொன்னார். இப்ப வந்துருவார் சார்,'' என்றார், கூட்டத்திலிருந்த, தாடிக்காரர்.''அவர் வந்ததும், என்னை பார்க்க சொல்லு,'' எனக் கூறி, கையிலிருந்த பேப்பரை பார்த்து, யார் யாருக்கு எந்தெந்த வார்டு என்பதை வாசித்தார்.''எட்டாவது வார்டுக்கு, ராமலட்சுமியும், கண்ணம்மாவும்,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குண்டாயிருந்த அம்மா, முகத்தை பரிதாபமாக வைத்து, ''சார்... எனக்கு, உடம்புக்கு முடியலை... நான், ராமலட்சுமி கூட போறேன்... அதுன்னா கொஞ்சம், 'அட்ஜஸ்' பண்ணிக்கும்,'' என்றாள்.''உனக்கு, என்னைக்கு தான் உடம்பு நல்லா இருந்தது. எந்த வேலை கொடுத்தாலும் மறுக்காமல், அதை சரியா செய்து, வார்டு ஜனங்ககிட்டேயும் நல்ல பேர் வாங்கி வச்சிருக்கிறது, ராமலட்சுமி மட்டும் தான். எல்லாரும், அவங்களை பார்த்து கத்துக்குங்க... போய் வேலையை பாருங்க,'' என, கட்டளையிட்டார்.அனைவரும் கலைந்தனர்.எதிரே இருந்த கடையிலிருந்து, டீ குடித்தபடியே இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான், பாஸ்கர். நகராட்சி அலுவலக கிளார்க். ஊழியர்கள் சார்பாக நடத்த வேண்டிய பணி ஓய்வு பாராட்டு விழா, பிரிவுபசார விழா போன்றவைகளை, இவன் தான் ஏற்பாடு செய்து நடத்துவான். இதுவரை எத்தனையோ விழாக்களை சிறப்பாக நடத்தியிருக்கிறான்.இம்மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறாள், ராமலட்சுமி. அவளுக்கு விழா நடத்துவதற்கு, பாஸ்கருக்கு மனம் வரவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. நகராட்சி அலுவலகத்தில், 'ஸ்வீப்'ப்பராக, ராமலட்சுமி வேலை பார்த்த காலத்தில், அவளை பார்க்க வருவாள், மகள் ஜனப்பிரியா.ஜனப்பிரியாவிடம் மெல்ல பேச்சு கொடுத்து, பழக ஆரம்பித்த, பாஸ்கர், ஒருநாள், 'எனக்கு, உன்னை பிடிச்சிருக்கு. நான், உன்னை காதலிக்கிறேன். நீ சம்மதிச்சா, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்...' என்று, தன் ஆசையை வெளிப்படுத்தினான்.இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத, ஜனப்பிரியா, அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல், தன் தாயிடம் விஷயத்தை சொன்னாள்.'உங்கப்பா, உன் மேலயும், அண்ணன்கள் ரெண்டு பேர் மேலயும் அளவு கடந்த பாசம் வச்சிருந்தார். நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சு, உயர்ந்த நிலைக்கு வரணும்ன்னு கனவு கண்டார். தன் குழந்தைகள், சிறந்த வாழக்கையை அனுபவிக்கணும்கறத்துகாக, அவர் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கலை. 'கல்யாணம், குழந்தை எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி. அது எப்போதுங்கிறது அவங்கவங்க முடிவு தான். உன் பின்னாலேயே வந்து என்னால கண்காணிக்க முடியாது; யோசிச்சு முடிவெடு. என் பிழைப்பு கடைசி காலம் வரைக்கும், உங்கப்பா இருந்த இந்த வீட்டுல தான்...' என்றவள், அதிகம் பேசியதால், களைப்பாகி, கையை தலைக்கு வைத்து, தரையில் படுத்து விட்டாள்.அம்மா வாழ்ந்து வரும் வாழ்க்கையை அசை போட்ட, ஜனப்பிரியா, தன்னை சுருக்கி, தவ வாழ்க்கை வாழும் தாய்க்கு, வேதனை தர விரும்பவில்லை. ஒருநாள், பாஸ்கரை சந்தித்து, 'நீங்க வாங்குற சம்பளத்திற்கு, உங்களுக்கு, இன்னும் நல்ல இடத்துல சம்பந்தம் கிடைக்கும்; என்னை விட்டுருங்க...' என, நாசூக்காக ஒதுங்கி, படிப்பில் கவனம் செலுத்த துவங்கினாள்.தன்னை ஏற்க மறுத்தவளின் தாய்க்கு, தானே விழா நடத்துவதா என, எண்ணினான், பாஸ்கர்.ராமலட்சுமியிடம், ''நீங்க, இந்த மாதம், பணி ஓய்வு பெறப் போறீங்க... பணி ஓய்வு பெறுபவர்களுக்கு, நம் ஊழியர்கள் சார்பா, பாராட்டு விழா நடத்துறது வழக்கம். நீங்க விரும்பலைன்னா, எல்லாரும் ஓட்டலுக்கு போயி, சந்தோஷமா டிபன் சாப்பிட்டு போகலாம்,'' என்றான், பாஸ்கர்.''நான் ஒரு குப்பைக்காரி. என்ன செய்துட்டேன்னு எனக்கு இப்ப பாராட்டு. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் தம்பி. நீங்க சொன்ன மாதிரியே, எல்லாரும் ஓட்டலுக்கு போய் சாப்பிட்டா போதும்,'' என்றாள், ராமலட்சுமி.தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் பட்டியலை தயாரித்துக் கொண்டிருந்த பாஸ்கரிடம், ''கமிஷனர் உங்களை வரச்சொன்னார்,'' என்றான், பியூன்.கமிஷனரின் அறை முன் நின்ற, பாஸ்கரை, ''உள்ளே யாரும் இல்லை. போங்க,'' என்று, கதவை திறந்து விட்டான். ''இந்த மாதம், 'ரிடையர்மென்ட் பார்ட்டி' எதுவும் இருக்கா,'' என்றார், கமிஷனர்.''ராமலட்சுமின்னு ஒரு, 'ஸ்வீப்பர், ரிடையர்' ஆகுறாங்க சார்... 'பார்ட்டி' எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க... எல்லார் முன்னிலையும் மேடையில சேர்ல உட்கார சங்கோஜ பட்டுகிட்டு, சில பெண்கள் வேண்டாம்ன்னு சொல்லிடுவாங்க, அவங்களை நாம வற்புறுத்தறதில்லை,'' என்றான்.''ஆனா, இவங்களை நீங்க வற்புறுத்தணும், பாஸ்கர். கலெக்டரோட பி.ஏ., இப்ப பேசினாங்க. ராமலட்சுமின்னு பேரை சொல்லி, அவங்க இந்த மாசம், 'ரிடையர்' ஆகுறாங்கன்னும், 'ரிடையர்மென்ட் பார்ட்டி' வைக்கிற தேதி, நேரம், 'மெனு' சொல்லுங்கன்னு கலெக்டர் கேட்டுருக்கார்...''அந்தம்மாகிட்ட மறுபடியும் பேசி, கலெக்டர் வர்றார்ன்னு சொல்லுங்க, ஒத்துக்குவாங்க; அப்படி சம்மதிக்கலைன்னா, இங்கே கூட்டி வாங்க, நான் பேசறேன். எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டு, அரைமணி நேரத்துல எனக்கு, 'ரிப்போர்ட்' தர்றீங்க... நீங்க, போகலாம்,'' என்றார்.வெளியே வந்த பாஸ்கருக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. இருக்கைக்கு அருகிலிருந்த சீனியர் ஊழியரிடம், ''சார்... 200 ரூபாய் கொடுங்க; ராமலட்சுமிக்கு, 'பார்ட்டி' நடத்தியே ஆகணும். அந்த அம்மாவை பாராட்டி பேச, கலெக்டர் வர்றாராம்,'' என்றபடியே, தொலைபேசியில், கல்யாண மண்டப எண்களை அழுத்தினான். எல்லா மண்டபங்களும் பதிவாகி இருந்தன.''ஒண்ணுத்துக்கும் ஆகாதவனையெல்லாம் நல்லவரு, வல்லவருன்னு ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளுறதை உட்கார்ந்து கேட்கறோம். நாங்க சாப்பிடறதுக்காக, தலைக்கு, 200 ரூபாய் வாங்கி, டிபன் கொடுக்க போறீங்க. ஆனா, இந்த அம்மாவுக்காக, கலெக்டரே வர்றார்ன்னா, ஏதோ பெரிசா சாதிச்சிருக்கணும்; என்னன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கு. இந்தா, 200 ரூபாய்,'' என்று நீட்டினார்.''பாஸ்கர் சார், கமிஷனர், உங்களை கூப்பிடறார்,'' என்றான், பியூன்.''இதோ வந்துட்டேன்!'' என்றான்.''பாஸ்கர், கூடுதலா இன்னும் மூணு பேர், சிறப்பு விருந்தினரா வர்றாங்க... ஆறு மாலை வாங்கணும்,'' என்றார்.''அந்தம்மாகிட்ட மறுபடி பேசினேன்; ஒத்துக்கிட்டாங்க. நடத்தலாம் சார்,'' என்றான், பாஸ்கர்.போனில், கலெக்டர் பி.ஏ.,விடம், ''ஆகஸ்ட் 31, மாலை, 6:00 மணி, ரத்னா கான்பரன்ஸ் ஹால், ஊரப்பாக்கம்,'' என்றார், கமிஷனர்.குளிரூட்டப்பட்ட அறையில் பணியாளர்கள், தங்கள் மகன் - மகள்களுடன் அமர்ந்திருந்தனர். இருக்கை கிடைக்காமல் சிலர் நின்றிருந்தனர். 'ஏசி' காற்றுக்கு பழக்கப்படாத பெண்கள், சேலை தலைப்பால் போர்த்தியிருந்தனர்.மேடையில் கமிஷனர், மாவட்ட கலெக்டர், ராமலட்சுமி மற்றும் ஒரு பெண் அமர்ந்திருந்தனர். வரவேற்றல், மாலை அணிவித்தல் எல்லாம் முடிந்தது.''மாவட்ட கலெக்டருக்கும், டாக்டர், இன்ஜினியர் மற்றும் அனைவருக்கும் வணக்கம். இதுபோன்ற பாராட்டு விழா இதுவரை நடந்ததில்லை. பள்ளி அருகில் கழிவு நீர் தேங்கியிருந்தது. மாணவர்கள் தவறி விழுந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, உயிரை கொடுத்து அதை சரி செய்தார், ராமலட்சுமியின் கணவர். அவர் இறந்ததற்காக, கருணை அடிப்படையில், ராமலட்சுமிக்கு இங்கு வேலை கொடுத்தோம்.''இன்று வரை, அவரது, 'சர்வீஸ் ரெகார்டில்' தவறான புகார் ஒன்று கூட கிடையாது. மாறாக, நிறைய பாராட்டுகள். தன் முயற்சியாலும், அயராத உழைப்பாலும், மகள், ஜனப்பிரியாவை டாக்டர் ஆக்கியுள்ளார். அவர், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேவை புரிகிறார்.''மகன் வனராஜை, இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். இன்று, குஜராத்தில் உள்ள, எல் அண்டு டி கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தன் மூத்த மகன், குணாவை, மாவட்ட கலெக்டராக்கி, நம்மை எல்லாம் மலைக்க வைத்து விட்டார்,'' என்று, கமிஷனர் கூறியதும், மூவரும் எழுந்து வணங்கினர்.கூட்டம் மொத்தமும் எழுந்து, 'ஓ' என்ற இரைச்சலுடன் பலமாக கை தட்டினர். தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள், ராமலட்சுமி.கூட்டத்தை அமைதிப்படுத்திய, கமிஷனர், ''இனிமேல் தான், நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். முதலில், துாத்துக்குடி மாவட்டத்தில், கலெக்டராக பொறுப்பேற்றிருக்கும், ராமலட்சுமியின் மூத்த மகன், குணா பேசுவார்,'' என்றார்.''வணக்கம். இம்மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர், என் நண்பர். 'என் தாயார், 'ரிடையர்' ஆகிறார், நான் வருகிறேன்' என்று சொன்னதும், தன் தாய்க்கு நடக்கும் விழா போல பாவித்து, பிரமாதப்படுத்தியதற்கு என்ன கைமாறு செய்ய போகிறேன். முதலில், அவரை பேச வைத்து, பிறகு நான் பேசுவது தான் சரி,'' என்றான்.''நீங்க கலெக்டர் ஆகறதுக்கு எடுத்துக் கொண்ட நடைமுறைகளையும், யுக்திகளையும் மற்றும் உங்களை உருவாக்க, உங்கம்மா எடுத்த முயற்சிகளையும், சந்தித்த சோதனைகளையும் சொல்லணும்; கூட்டம் அதை கேட்கணும். இங்கிருந்து, நாளை இன்னொரு கலெக்டர் உருவாகணும். நேரம் ஆனாலும் பரவாயில்லை. நீங்களே விளக்கமா பேசுங்க,'' என, சொல்லி அமர்ந்தார், மாவட்ட கலெக்டர்.''எங்கப்பா இறக்கும்போது, நான், ஒன்பதாவது படிச்சேன். அப்பவே, அம்மாவுக்கு உறுதுணையாய் இருக்கணும்ன்னு மனசுக்குள்ள உறுதி எடுத்துக்கிட்டேன். பிளஸ் 2 முடிச்சதும், இன்ஜினியரிங் படிக்கிறேன்னு, அம்மாகிட்ட சொன்னதும், 'உன் படிப்புக்கு செலவு பண்ணினா, இப்ப, பிளஸ் 1 படிக்கிற, தம்பி மேல் படிப்புக்கு என்ன செய்ய, எப்படி சமாளிக்கிறது'ன்னாங்க...''உள்ளூரிலேயே, பி.எஸ்சி., படிச்சேன். காலேஜுக்கு சைக்கிள்ல தான் போனேன். படிப்பை தவிர வேறு எதுக்கும் ஆசைப்படாம கட்டுப்பாடா இருந்தோம். இப்பவும் எங்க வீட்டுல, அரசாங்கம் கொடுத்த, இலவச, 'டிவி'தான் ஓடிட்டிருக்கு. நான், குரூப்-2ல தேர்ச்சி பெற்று, அதுல கிடைச்ச சம்பளத்தில், தம்பி வனராஜ், அதிக மார்க் எடுத்து, அரசு இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சதனால, அவன் செலவையும் சமாளிச்சோம். ''குரூப்-4ல தேர்ச்சி பெற்றதும், சம்பளம் கூடுச்சு... தம்பியும் வேலைக்கு சேர்ந்தான்; தங்கையின் டாக்டர் கனவையும் எங்களால நிறைவேற்ற முடிஞ்சது. பிரச்னை வரும்போது, பேசி முடிவு பண்ணினோம். அம்மாவின் அர்ப்பணிப்பு தான், எங்களை இந்தளவுக்கு முன்னேற வச்சது,'' என்று, குணா முடித்ததும், பேச எழுந்தாள், ராமலட்சுமி.''கமிஷனர் சாருக்கும், என்னை தாயாய் மதிக்கிற மாவட்ட கலெக்டருக்கும், வணக்கம். நான் செஞ்சது எதுவுமே இல்லை; நிழல் தரும் மரமா நின்னேன்; அவ்வளவு தான். அவங்கவங்க சரியான முடிவு எடுத்தாங்க... தங்களுக்குன்னு ஒரு வழி ஏற்படுத்திக்கிட்டு, அதை விட்டு விலகாம நடந்ததால ஜெயிச்சாங்க... இப்படி ஒரு விழா நடத்தினவங்களுக்கும், கலந்துகிட்டவங்களுக்கும் ரொம்ப நன்றி,'' என்றாள்.விழா முடிந்து, அனைவரும் கலைந்தனர்.''எனக்கு, 'லீவு' கிடைக்கலேம்மா... 'பிளைட்'டுக்கு நேரமாச்சு... அடுத்த மாசம் வர்றேன்,'' என்றான், வனராஜ்.''ஒரு ஆபரேஷன் இருக்கும்மா... அடுத்த வாரம் வீட்டுக்கு வர்றேன்,'' என்றாள், ஜனப்பிரியா.இருவரையும் கையில் பிடித்தபடியே, ''உங்க ரெண்டு பேர் வேலையும், பொது ஜனம் சம்பந்தப்பட்டது. கஷ்டப்படுகிறவங்களுக்கு, பணத்தாலும், பதவியாலும் உதவுங்க; அதுதான் என் சந்தோஷம். குணா... நீ உன் நண்பனோடு பேசிட்டு மெதுவா வா... இருட்டாயிருச்சு, எனக்கு ஒரு ஆட்டோ பிடி,'' என்றாள், ராமலட்சுமி.பொ. மகாலிங்கம்வயது: 61,ஊர்: சென்னை. இவரது படைப்புகள், தமிழில் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு எழுத வேண்டும் என்பது, இவரது நீண்ட நாள் ஆசை. இப்போட்டியில் இவர் எழுதிய முதல் சிறுகதையே, ஆறுதல் பரிசு பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !