உள்ளூர் செய்திகள்

நம்முடனே இருக்கும் தெய்வம்!

தெய்வம் நம் கூடவே இருக்கிறது. அது தெரியாமல், எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டிருக்கிறோம். அந்த உண்மை தெரிந்து விட்டால், தானாகவே பயம் விலகிப் போய் விடும் என்பதை விளக்கும் மகாபாரதக் கதை இது:பஞ்ச பாண்டவர்களும், திரவுபதியும் வனவாசம் முடித்து, மறைந்து வாழ வேண்டிய ஒரு ஆண்டு காலம், விராட நகரில் வசித்தனர். அப்போது, அவர்கள் வடிவங்களையும், பெயர்களையும் மாற்றிக் கொண்டிருந்தனர்.ஒருநாள், பகைவர் சிலர், விராட நகரிலிருந்த பசுக் கூட்டங்களை கவர்ந்து போயினர். அதை மீட்க, படைகளுடன் போனார், மன்னர். அச்சமயம், பாண்டவர்கள், விராட நகரில் இருப்பதாக சந்தேகப்பட்ட துரியோதனன், மற்றொரு பக்கமாக விராட நகரில் நுழைந்து, அங்கிருந்த பசுக் கூட்டங்களை கவர்ந்தான்.காவலர்கள் ஓடிப்போய், இளவரசனான உத்தரனிடம் தகவலைச் சொல்லி, 'பசுக் கூட்டங்களை காப்பாற்றுங்கள்...' என்று வேண்டினர்.அதைக்கேட்ட இளவரசன், 'திறமைசாலியான தேரோட்டி ஒருவன் இருந்தால் போதும். அர்ஜுனனைப் போல பகைவரை வென்று, பசுக் கூட்டங்களை மீட்டு வருவேன்...' என்றான்.பிருகன்னளை என்ற பெயரில், திருநங்கை வடிவில் இருந்த அர்ஜுனனைத் தேரோட்டியாக ஏற்பாடு செய்தனர். அர்ஜுனனை பற்றிய உண்மை அறியாமல், அரைகுறை மனதுடன் பசுக் கூட்டங்களை மீட்க புறப்பட்டான், இளவரசன்.போர்க்களத்திற்கு போனதும், அங்கிருந்த துரியோதனன், பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் முதலான மாவீரர்களைப் பார்த்ததும், பயந்து நடுங்கிப் போய், தேரிலிருந்து குதித்து, அரண்மனை நோக்கி ஓடத் துவங்கினான்.அதைப் பார்த்ததும், திருநங்கை வடிவிலிருந்த அர்ஜுனனும் தேரை நிறுத்தி குதித்து, ஓடிப்போய் இளவரசனைப் பிடித்தான்.'இளவரசரே... பயப்படாதே, நீ தேரை ஓட்டு. நான் பகைவருடன் போரிட்டு, பசுக் கூட்டங்களை மீட்டு வருவேன்...' என்றான்.'எதிரில் இருப்பவர்கள் எல்லாம் பெரும் வீரர்கள். அவர்களைப் போய் நீ வெல்வதாவது! என்னை விட்டு விடு. நான் அரண்மனைக்கு ஓடி விடுகிறேன். உனக்கு வேண்டிய செல்வம் தருகிறேன்...' என்று கெஞ்சினான், இளவரசன்.பயந்து நடுங்கிக் கொண்டிருந்த இளவரசனிடம், தான் அர்ஜுனன் என்பதை நிரூபித்து, உண்மை வடிவை வெளிப்படுத்தினான்.உண்மையை அறிந்ததும், இளவரசனை பிடித்திருந்த பயம் விலகியது. துரியோதனன் முதலானவர்களை வென்று, பசுக் கூட்டங்களை மீட்டு திரும்பினர்.அர்ஜுனனின் உண்மை வடிவை, இளவரசன் உணரவில்லை. போர்க்களத்தில் எதிரில் இருப்பவர்களை பார்த்து, பயந்து ஓடினான். அதேசமயம், தன்னுடன் இருப்பது அர்ஜுனன் என்ற உண்மையை உணர்ந்ததும், அவனைப் பிடித்திருந்த பயம் தானாகவே விலகிப் போனது.அதுபோல, தெய்வம் நம்முடன் பலவிதமான வடிவங்களில் இருக்கிறது. தகுந்த நேரத்தில் தைரியம் ஊட்டி, தன்னை வெளிப்படுத்தி நம்மை காக்கிறது. பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

ஒருவரது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது, பைரவர் வழிபாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !