பசுமை நிறைந்த நினைவுகளே.... (13)
கடந்த, 93-ல், டூரில் கலந்து கொண்ட விருத்தாச்சலம் வாசகர் பன்னீர் செல்வம், உள்ளத்தை உருக்கும் வகையில், ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்று சொல்லியிருந்தேன். அந்த கடிதத்தின் சாராம்சம் இதுதான்;அன்புள்ள அந்துமணி ஐயா அவர்களுக்கு,ஒரு ஊரில் வறுமையும்,நேர்மையும் கொண்ட ஏழைக்குடும்பம் இருந்தது. அந்த குடும்ப தலைவன், அன்றாடம் வழிபடும், கடவுளிடம், ஒரு வரம் கேட்டான். 'ரொம்ப நாளா சந்தோஷம் என்றால், என்னவென்றே தெரியாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஒரே ஒரு நாள், நான், ராஜ வாழ்க்கை வாழ வேண்டும். அதன் பிறகு, இறக்கும் வரையில், கஷ்டம் வந்தாலும் கவலையில்லை. அந்த ஒரு நாள் நினைவிலேயே, நான், என் வாழ்நாள் முழுவதும் இருந்து விடுவேன்...' என்று.கடவுளும், அந்த ஏழையின் பக்திக்கு, மனமிரங்கி, 'நீ கேட்ட வரத்தை அருளுகிறேன். உனக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது என்பது எனக்கு தெரியாது. இதை எல்லாம் புரிந்து, அறிந்து, என்னைவிட, உன்னை நன்றாக கவனித்து, நீ எதிர்பார்க்கும் சந்தோஷத்தை தரும், ஒரு உபாயம் செய்கிறேன், அதற்கு நீ, தினமலர் - வாரமலர் குற்றால சீசன் டூர் கூப்பனை அனுப்பவேண்டியது தான்...' என்று, சொல்லி சென்று விட்டார்.அந்த ஏழையும், கூப்பனை அனுப்ப, தேர்வானார்; டூரில் கலந்து கொண்டார். அந்த ஏழை வாசகன் தான், இந்த பன்னீர் செல்வம்.நான், ஒரு நாள்தான் ராஜாவாக இருக்க, வாழ ஆசைப்பட்டேன். ஆனால், மூன்று நாள் ராஜாவாக வாழ்ந்து விட்டேன். அது மட்டுமல்ல, என் மனைவியை ராணியாக்கி விட்டீர்கள்; போதும் போதாததற்கு, எங்கள் மகளை இளவரசியாக்கி விட்டீர்கள்.போதுமய்யா... போதும்; இந்த பிறப்பிற்கு, இந்த மகிழ்ச்சி போதும். இதற்கு மேல், ராஜ உபசாரம் எதுவும் எங்களுக்கு கிடைக்காது; வேண்டவும் வேண்டாம். எங்களைப் போன்ற எளிய வாசகர்களை தேர்ந்தெடுத்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும், அந்துமணிக்கு கோடி நமஸ்காரங்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.இதே போல, கடிதம் என்றவுடன், உடனே, நினைவிற்கு வருபவர் காஞ்சிபுரம் வாசகர் லட்சுமணகுப்தாதான். இவர், கடந்த, 94-லிலும், பின்னர், வெள்ளி விழா சிறப்பு டூரிலும், தன் மனைவி சுதேஷ்ண குப்தாவுடன் கலந்து கொண்டார்.இவரை, 94ல், சந்திக்க போகும் போது, வடமாநிலத்தை சேர்ந்த, 'சேட்' குடும்பம் போல... 'நிம்பள்கி நம்பள்கி' என்று பேசப்போகின்றனர் என, எதிர்பார்த்து போனால், வளமான தமிழில் வரவேற்றார். ஆம்... நல்ல தமிழ் ஆர்வலரான இவர், சாதாரணமாக பேசுவதே, மேடையில் பேசுவது போன்று கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு சிறப்பாக இருக்கும்.வழக்கமாக நான் சந்திக்க செல்லும் வாசகர்கள், நாங்கள் என்ன என்ன ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்பதை அறிவதில் தான், ஆர்வமாய் இருப்பர். ஆனால், இவரோ, 'அதெல்லாம் சரி ஜி... டூர் சிறப்பாக இருக்க, நான் ஏதாவது செய்தாக வேண்டுமே, என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்...' என்று கேட்டார். 'எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் குடும்பத்தோடு வந்தால் போதும்...' என்று மட்டும் சொன்னோம்.ஆனால், அவரோ, நிறைய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு தோதாக வந்திருந்தார். அதே போல, நடத்தவும் செய்தார். மேலும், காஞ்சி காமாட்சியின் பிரசாதத்தை கொண்டு வந்து, அனைவருக்கும் வழங்கினார்.ஒரு நிமிடம் சும்மாயிருக்க மாட்டார். அவ்வளவு சுறுசுறுப்பு.கிட்டத்தட்ட, 19 ஆண்டுகள் கழித்து, வெள்ளி விழா டூருக்கு வந்த போதும், அதே துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் குறையாமல் காணப்பட்டார். இந்த முறை, 'யார் அந்துமணி என்பது தெரியும் என்பதால், காஞ்சிபுரத்தில் இருந்து வரும் போதே, காமாட்சியம்மன் போட்டோ, சால்வை, சந்தன மாலை என்று, வாங்கி வந்து விட்டார். அந்துமணிக்கு மட்டுமின்றி, அவரது நண்பர்களுக்கும் அணிவித்து, அழகுபார்த்து, தன் அன்பை வெளிப்படுத்தினார். சந்தோஷம் என்பது, பெறுவது மட்டுமல்ல, மற்றவருக்கு கொடுக்கும் போதும் வரும் என்பதை, உணர்ந்தவர் குப்தாஜி. ஒரு 'டான்ஸ்' என்றால் போதும், உடனே, 'ஸ்டார்ட் ம்யூசிக்' என்று கவுண்டமணி ஸ்டைலில், இசையை இசைக்க சொல்லி, நடனமாடியவர்.இவரிடம், இன்னொரு நல்ல பழக்கம் உண்டு. அது, கடிதக்கலையை மறக்காமல் இருப்பது. போனில் பேசுவதை விட, கடிதம் எழுதுவதே சிறப்பானது என்று கருதும் இவர், கடந்த, 19 ஆண்டுகளாக, அந்த குரூப்பில் வந்த வாசகர்களோடு, வைத்திருக்கும், கடித தொடர்பை, இன்னும் தொடர்கிறார்.வழக்கமாக, பா.கே.ப., பகுதியில், டூர் பற்றி அந்துமணி எதுவும் எழுத மாட்டார். ஆனால், அந்த வாரம்,(94ம் வருடம்) அவர், மூன்று விஷயங்களை மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்து எழுதியிருந்தார். முதல் விஷயம், குப்தாவின் பாசம் பற்றியது. இரண்டாவது மற்றும் மூன்றாவது விஷயங்கள் என்ன என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.குற்றாலமும், செண்பகா அருவியும்....தேனருவிதான், சில சிற்றாறுகளை சேர்த்துக்கொண்டு, செண்பகா அருவியாகிறது. செண்பகா அருவி, மேலும், சில சுனைகளின் நீரை சேர்த்து, மூலிகை செடிகளின் வழியாக, பேரருவியாக(மெயினருவி)விழுகிறது.செண்பகா அருவி, புகழ்பெற்ற செண்பகதேவி அம்மன் கோவிலின் பின்புறம் அமைந்துள்ளது. சிற்றருவியில் இருந்து பிரிந்து செல்லும் மலைப்பாதை வழியாக, மூன்று கிலோமீட்டர் துாரம் நடந்து சென்றால், ஆர்ப்பரிப்புடன் விழும் செண்பகா அருவியை காணலாம்.போகும் வழியில், மெயின் அருவியின் மேல்பகுதியில் கடந்து செல்வதும், அங்கு இருந்து குற்றால நாதர் கோவிலை வித்தியாசமான கோணத்தில் தரிசிப்பதும், சின்ன சின்ன மலை ஆறுகளின் ஜில்லிப்பில், கால் நனைத்து செல்வதும், இனிய அனுபவமாக இருக்கும்.யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, இரும்புக்கம்பி தடுப்பை, மெயினருவிக்கு மேல் செல்லும் பாதையில், அமைத்துள்ளனர். ஆனாலும், சாகசம் செய்வதாக கருதும் இளைஞர்கள், அந்த கம்பி தடுப்பை தாண்டி, மெயினருவியை எட்டிப்பார்ப்பதும், எதிர்பாராமல் கால் இடறி விழுந்து இறப்பதும், ஒவ்வொரு ஆண்டும் நடப்பதால், சீசன் நேரத்தில் செண்பகா அருவிக்கு போவதற்கு தடை விதித்துள்ளனர்.இயற்கை, நமக்கு தந்துள்ள இனிய விஷயங்களை, ஒரு சிலர் தவறாக அணுகுவதால், ஒட்டுமொத்தமாக பலரும் பாதிக்கப்படுகின்றனர். அவற்றில் செண்பகா அருவியும் ஒன்று.-- அருவி கொட்டும்.