பசுமை நிறைந்த நினைவுகளே ..... (22)
வெள்ளி விழா டூரில் கலந்து கொள்ள விரும்பும் பழைய வாசகர்கள், தாங்கள் கலந்து கொண்டதற்கு சான்றாக, பழைய படம் ஒன்றை இணைத்து அனுப்பச் சொல்லியிருந்தோம். ஆனால், திண்டிவனம் வாசகி தேன்மொழியோ, தன், 97ம் வருட டூர் அனுபவத்தை மட்டும் எழுதி விட்டு, சான்று புகைப்படத்தை அனுப்பவில்லை. போன் செய்து, 'ஏன் படம் அனுப்பவில்லை...' என்று கேட்டதும், நீண்ட நேரம் அழுதவர், அதன் பின் பேசத் துவங்கினார்...'மன்னிச்சுக்குங்க சார்... படம் அனுப்பாததற்கு ஒரு காரணம் உண்டு...' என்றவர் தொடர்ந்து, 'கடந்த 97ம் வருடம் நானும், என் கணவர் சுப்பராயனும் கலந்து கொண்டது பல வகையிலும் மறக்க முடியாதது. எங்களுக்கு திருமணமாகி 25 வருடமான நிலையில் அந்த டூரில் கலந்து கொண்டோம். 25 வருட திருமண வாழ்க்கையில், கணவன், மனைவியுமா சேர்ந்து, நாங்க டூர்ன்னு வெளியே போனது அன்று தான். இதெல்லாவற்றையும் விட, டூர் நினைவாக எங்களை ஒண்ணா வச்சு ஒரு படம் எடுத்து கொடுத்தீங்க பாருங்க... அதுதான் பெரும் சிறப்பு. காரணம், அதற்கு முன்பும், அதற்கு பிறகும் நாங்க போட்டோவே எடுத்துக்கல.'டூர் முடிஞ்சு ஊர் திரும்பிய பிறகு, ரொம்ப நாளா டூரை பத்தியே பேசிக்கிட்டு இருந்தார் என் கணவர். 'காசு,பணம், பதவி,அந்தஸ்து எல்லாம் இருந்தும் என்ன பிரயோசனம்! வாரமலர் குற்றால டூருக்கு ஈடாகுமா...' என்று நண்பர்கள், உறவினர்கள் என எல்லாரிடமும் சொல்லிக்கிட்டே இருப்பாரு. 'உங்களுக்கு வாய் வலிக்காம இருக்கலாம்; ஆனா, கேட்கிறவங்களுக்கு காது வலிக்குமுங்க'ன்னு சொன்னாலும் விடமாட்டாரு.'இந்த வாய்ப்பு என்னால அமைஞ்சுதுனால, டூருக்கு பின், அவரு மனசுலயும், வீட்லேயும் என் மதிப்பு ரொம்ப உயர்ந்துருச்சு.'பிள்ளைங்கள்லாம், 'அப்பா... நீங்க எங்களை குற்றாலத்திற்கு கூட்டிட்டு போகாட்டாலும் பராவாயில்லை; அந்துமணியிடம் கூட்டிட்டு போங்க'ன்னு சொல்வாங்க. 'அதனால என்ன... ஒரு நாள் குடும்பத்தோட சென்னைக்கு போய், அவரை பார்த்துருவோம்'ன்னு சொல்வார்.'இந்த வாரம் போயிருவோம், அடுத்த வாரம் போயிருவோம்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தவர், கடைசியில யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில, திடீர்ன்னு மாரடைப்புல எங்களைவிட்டு போயிட்டாரு.'எங்களுக்கு எதுவுமே ஓடலை; அப்புறம் குடும்பம் நிமிர்ந்து வர ரொம்ப நாளாயிடுச்சு. நிறைய இழப்புகள், கவலைகள், பிரச்னைகள்; அப்ப எல்லாம் எனக்கு ஆறுதலா இருந்தது இரண்டே விஷயம்தான்.'ஒன்று, குற்றாலத்துல வாரமலர் சார்பாக எடுத்துக் கொடுத்த போட்டோ; இரண்டாவது, வெள்ளி குங்கும சிமிழ்.'டூரில் பங்கேற்க, வீடு தேடி வந்து, செலவிற்கு பணம் தந்தது போல, டூர் முடிந்து திரும்பும் போதும், பணம் கொடுத்தீங்க. 'முதல்ல கொடுத்த பணமே செலவாகவில்லை அப்புறம் எதுக்கு இந்த பணம்...' என்று வாங்க மறுத்த போது,'இது அந்துமணி சாரோட அன்பு பரிசு. அதுனால, இதுல எதையாவது வாங்கிக்குங்க...' என்றதும், நீங்க கொடுத்த பணத்தில் ஒரு வெள்ளி குங்கும சிமிழ் வாங்கி கொடுத்தார்.'நாங்க சேர்ந்து இருக்கிற படம், எப்பவும் என் கூடவே இருக்கும். எனக்கு எப்ப மனசஞ்சலம் ஏற்பட்டாலும், இந்த போட்டோவை கொஞ்ச நேரம் பார்த்தேன்னா, அந்த சஞ்சலம் பறந்துடும். அதுனாலதான் அந்த போட்டோவ அனுப்பலை...' என்றார்.வாசகி தேன்மொழி, இரண்டாவது முறையாக தேர்வாகி, வெள்ளி விழா டூருக்கு, மூத்த மகன் முத்துவேலோடு வந்திருந்தார். குற்றாலத்தின் ஒவ்வொரு இடத்தையும் காண்பித்து, 'இங்கேதான் உங்க அப்பா குளிச்சாரு...' என்று மகனிடம் சுட்டிக்காட்டி, பழைய சம்பவங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.தன் தந்தை மகிழ்ந்திருந்த இடங்களை பார்த்து மகிழ்ந்த, முத்துவேல், பின் பேசும்போது, இதற்கு காரணமான வாரமலர் இதழுக்கு நன்றி கூறினார்; அப்போது, அவரது கண்களில் கண்ணீர்.அதே, 97ல், டூருக்கு வந்த மூன்று வயது குழந்தை திவ்யலட்சுமியை பற்றி இங்கே குறிப்பிட வேண்டும்.திவ்யலட்சுமியின் தாயார் விஜயாதான் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவருடன் அவரது கணவர் சுப்பிரமணியனும், மகள் திவ்யலட்சுமியும் வந்திருந்தனர்.குற்றாலத்து சீசன் சூழல், சில குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்பதால், 'வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களிடம் குழந்தைகளை கொடுத்துவிட்டு வாருங்கள்' என்று நேரில் சந்திக்கும் போது சொல்வேன். அதே போல திவ்யலட்சுமி வீட்டில் சொன்னபோது, 'அதெல்லாம் முடியாது; நானும் வருவேன்...' என்று அடம்பிடித்தார் திவ்யலட்சுமி.'நீ நல்ல பொண்ணாம்.சொன்ன பேச்சு கேட்பியாம், தாத்தா, பாட்டிகிட்ட சமர்த்தாயிருப்பியாம். அங்கிள் நிறைய சாக்லெட் வாங்கிக் கொடுப்பேன்...'என்றெல்லாம் நான் சொன்ன போது, 'நான் நல்ல பொண்ணே இல்ல... சொன்ன பேச்சு கேட்க மாட்டேன்; அம்மா,அப்பாகூடத்தான் இருப்பேன்; நீ, ஒண்ணும் சாக்லெட் வாங்கித்தர வேண்டாம்; எங்க அப்பா எனக்கு நிறைய வாங்கித் தருவார்...' என்று, என்னை சமாதானப்படுத்தினாள் அவள்.என்ன சொல்லியும், குழந்தை திவ்யலட்சுமியை சரிகட்ட முடியவில்லை என்ற நிலையில், 'சரி அங்க வந்தா பாட்டுப் பாடணும்...' என்றதும், 'ஓ...நல்லா பாடுவேனே...' என்றாள். 'எங்கே பாடிக்காட்டு' என்றதும், 'குற்றாலத்திற்கு வா... அங்க பாடுறேன்...' என்று ஒரு போடு போட்டாள்.டூர் வாசகர்களை, மதுரையில் தினமலர் வெங்கட்ராமன் சார், ரோஜா மாலை அணிவித்து வழியனுப்பிய போது, தனக்கும் ஒரு ரோஜா மாலை போட்டே ஆக வேண்டும் என்று, அடம்பிடித்து கேட்டு வாங்கிக் கொண்டாள்.அங்கே ஆரம்பித்தது, டூர் மட்டுமல்ல, குழந்தை திவ்யலட்சுமியின் குறும்புகளும்தான்.இப்படி குறும்பும்,குஷியுமாக வந்த குழந்தை திவ்யலட்சுமியிடம், 'பாட்டுப்பாடறேன்னு சொன்னீயே...' என்றதும்,'பாடிட்டா போச்சு...' என்றபடி, 'பாபா பிளாக் ஷீப்' பாடலை பாடிக் காண்பித்தார்.இப்படி, 97ல், மறக்கமுடியாத குறும்புகளைச் செய்த குழந்தை திவ்யலட்சுமி, 16 வருடம் கழித்து, 19 வயது கல்லூரி மாணவியாக, தாயார் விஜயாவுடன் வந்திருந்தார். 'பழைய குறும்புகள் ஏதும் இப்போது உண்டா' என்று கேட்ட போது, கிடைத்த பதில், லேசாய் தலைசுற்றலை ஏற்படுத்தியது. குற்றாலமும், பாணதீர்த்தமும்...குற்றாலத்தில் இரண்டு, மூன்று நாள் தங்குவோருக்கு, அங்குள்ள அருவிகளே போதுமானது. ஆனால், வாரக்கணக்கில் தங்குபவர்களுக்கு அக்கம்,பக்கம் உள்ள அருவிகளின் மீதும் ஒரு கண் விழுவது உண்டு. அதில் அதிகமானோரை இழுத்து, ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருவது பாணதீர்த்த அருவியாகும்.குற்றாலத்திலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாபநாசம் போய், அங்குள்ள வனத்துறையினர் அனுமதியோடு, 12 கி.மீ., தூரம், மலை பாதை வழியாக, 'குளுகுளு' பயணம் மேற்கொண்டால், காரையார் அணை வரும்.அங்கு, 30 ரூபாய்(சீசனைப்பொறுத்து மாறுபடும்) கட்டணம் கொடுத்து, படகில் ஏறி அமர்ந்தால், அணையின் தண்ணீரை கிழித்துக்கொண்டு, ஒரு பரவச அனுபவம் தந்தபடி, படகு, பாணதீர்த்த அருவி நோக்கி பயணிக்கும். இந்த அருவியில்தான், 'சின்ன சின்ன ஆசை' உட்பட, பல சினிமா பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.மூலிகை வாசம் சுமந்துவரும் காற்றை சுவாசித்தபடி, 20 நிமிடம் படகில் பயணம் செய்த பின், ஒரு புறம் அணை, நம் கண்ணைவிட்டு மறையும்; மறுபுறம் பாணதீர்த்தம் அருவி தென்பட ஆரம்பிக்கும்.ஒரு பெரிய மலை உச்சியில் இருந்து, பாலை கொட்டிவிட்டது போல தண்ணீர் பெருகி, பொங்கி விழுவதை பார்ப்பதே பேரானந்தம்.கரையில இறக்கிவிட்ட பிறகு, ஒரு பத்து நிமிடம் படியில ஏறி போனால், சும்மா, 'ஜிலுஜிலு'ன்னு பாணதீர்த்த அருவி கொட்டும். இதை, 'வான தீர்த்தம்'ன்னு சொல்லுவாங்க. நல்லா சொகமா குளிச்சுட்டு வரலாம்.— அருவி கொட்டும்.எல்.முருகராஜ்