குருகுலவாசம் : தத்துவம் என்ன ? - வைரம் ராஜகோபால்
குருகுலம் என்பது, அந்தக் காலத்தில் பக்தி சிரத்தையுடன் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அஞ்ஞானியாக இருந்த சீடனுக்கு, வேத சாஸ்திரங்களை கற்பித்து, அவனை ஞானியாக மாற்றுவது குருவின் கடமை. பகவான் கிருஷ்ணன் கூட குருகுல வாசம் செய்தார். கிருஷ்ணனுக்கு வேதம் தெரியாதா? அவன் ஏன் குருகுலவாசம் செய்து, வேதங்களை கற்றுக் கொள்ள வேண்டும்? 'கிருஷ்ணனே குருகுலவாசம் செய்துள்ளார். அதனால், நாமும் குருகுலவாசம் செய்து, வேதங்களைக் கற்க வேண்டும்...' என்று, மற்றவர்கள் எண்ண வேண்டும் என்பதற்காகத்தான் அவர் குருகுலவாசம் செய்தார். 'எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. அப்படி இருந்தும் நான் கடமைகளைச் செய்து வருகிறேன். காரணம், பகவானே கடமைகளைச் செய்யும் போது, நாமும் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைப்பர். அவரவர் தங்கள், தங்கள் கடமைகளைச் செய்தால் தான் உலகம் சுபிட்சமாக இருக்கும். இதைப் பின்பற்றினால் மக்கள் நலம் பெறுவர்...' என்கிறார் கிருஷ்ண பகவான். வேதங்களைக் கற்ற பின், குருவுக்கு தட்சணை கொடுத்து, அவர் அனுமதி பெற்று, குருகுலத்திலிருந்து, சீடன் வெளியேற வேண்டும். அப்போது குருவானவர், சீடனைப் பார்த்து, 'எனக்குத் தெரிந்த வேத சாஸ்திரங்களை உனக்கு சொல்லிக் கொடுத்து விட்டேன். இனி, நீ வீட்டுக்குப் போய் விவாகம் செய்து, யாகம், ஹோமம் போன்ற அக்னி காரியங்களை சரி வரச் செய்து, தேவ பித்ருக்களை திருப்தி செய்... நல்ல பிரஜைகளை உண்டு பண்ணி, வம்ச விருத்தி செய்து, சுகமாக இருப்பாயாக...' என்று ஆசீர்வதித்து அனுப்புவார். குரு சொன்னபடி வாழ்க்கை நடத்துவான் சீடன். அவர், 'விவாகம் செய்து...' என்று சொன்னது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். எந்த தேவ பித்ரு அக்னி காரியத்தையும், மனைவியுடன் சேர்ந்து செய்வது முக்கியம். அதனால் தான், 'விவாகம் செய்து...' என்றார். எந்த காரியத்துக்கும் மனைவிதான் தீர்த்தம் போட வேண்டும். வாமனாவதாரத்தின் போது மகாபலி, பகவானுக்கு மூன்றடி மண் தானம் செய்தபோது, மகாபலியின் மனைவி ஓடி வந்து தீர்த்தம் போட்டுத்தான் தானம் நடந்தது என்பது புராணம். ஆகவே, மனைவி என்பவள் சமையல் செய்யவும், குழந்தைகள் பெறவும் மட்டுமல்ல, வாழ்க்கையில் செய்ய வேண்டிய தேவ பித்ரு காரியங்களிலும் அவளுக்கு பங்கும், உரிமையும் உண்டு. சீடனும், வீட்டுக்குப் போய் குரு வாக்கின்படி நடந்து கொள்வான். உலக நன்மைக்காகவே யாக யக்ஞங்கள் நடைபெறுகின்றன. ***ஆன்மிக வினா-விடை! - விருந்து கொடுக்க ஏற்ற நாட்கள் எது?திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் விருந்து கொடுக்கவோ, விருந்து உண்ணவோ நல்ல நாட்கள். மற்ற நாட் களில் விருந்து அளிப்பதும், விருந்து உண்பதும் பகையை வளர்க்கும் என்கிறது நீதி சாஸ்திரம். ***