உள்ளூர் செய்திகள்

பழக்கம் என்பது...

மனிதர்களாக பிறந்தவர்களுக்கு பகவத் பக்தி அவசியம் இருக்க வேண்டும். ஒரு பெண், நிறைய ஆபரணங்கள் அணிந்து கொண்டிருந்தாலும், ஆடை என்பது எவ்வளவு முக்கியமோ, அது போல், எவ்வளவு தான் பணக்காரர்களாக இருந்தாலும், பகவத் பக்தியும் இருக்க வேண்டும். இந்த பகவத் பக்தி, எப்போது ஏற்படும் என்றால், அது சின்ன வயதிலிருந்தே வர வேண்டும். நாளும் ஏதாவது ஒரு தெய்வ வழிபாடோ, ஜெபமோ செய்து வர வேண்டும்.'இப்போது அதுக்கெல்லாம் நேரமில்லை சார்... ஐம்பது வயதுக்குப் பிறகோ அல்லது ரிடையர் ஆன பிறகோ தான் செய்ய முடியும்...' என்பவரும் உண்டு. ஆனால், பகவான் இவரை அது வரையில் விட்டு வைக்க வேண்டுமே! பிரகலாதன் இதைத்தான் சொன்னார்.பகவானை வழிபடுவதற்கு சின்ன வயதிலேயே பழக வேண்டும். அப்போதே ஆரம்பிக்க வேண்டும். வயதாகி விட்டால், கல்யாணம், மனைவி, மக்கள் என்று இவர்களை கவனிக்கவே பொழுது சரியாகி விடும். பிறகு, பகவானை வழிபட தனியாக நேரம் கிடைக்காது. சிறு வயதிலிருந்தே இந்த பழக்கம் வர வேண்டும்.தகப்பனார் அல்லது பாட்டனார் பூஜை செய்வதைப் பார்த்தால், பிள்ளை அல்லது பேரனும் அதே மாதிரி பூஜை செய்ய ஆசைப்படுவான். நாளடைவில் அவனும் பூஜை செய்வதில் ஈடுபடுவான். தகப்பனார் சிகரட்டும், பாட்டனார் மூக்குப் பொடியும் கையுமாக இருந்தால், பிள்ளையும், பேரனும் அதேபோல் இருக்க முயல்வர். பால வயதில் ஏற்படும் கெட்ட பழக்கங்கள், வயதானாலும் போகாது. அதனால், சிறு வயது முதலே பகவானைப் பற்றிய சுலோகங்கள், புராணங்களை படிக்க வேண்டும்.அதனால் தான் வயதானவர்கள் கூட, ஏதாவது புராணங்களைப் படிப்பதும், ஜெபம் செய்வதுமாக இருப்பர். இதைப் பார்க்கும் சிறுவர்களும், இதே போல் செய்வர். அவர்களுக்கு, நல்ல பழக்கங்கள் ஏற்படும். இதில் பெற்றோரும், வயதானவர்களும் வழி காட்ட வேண்டும். பையன் எதிரில் தகப்பனார் சிகரட் பிடித்தால், பையன் ரகசியமாக சிகரட் பிடிக்கிறான். யாரை யார் கட்டுப் படுத்துவது?பெரியோர் என்ன செய்கின்றனரோ, அதைத் தான் சிறுவர்களும் செய்ய முற்படுவர். அதனால், பெரியோர் தான் சிறுவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். நல்ல பழக்கம் சீக்கிரம் வராது; கெட்ட பழக்கம் சீக்கிரம் பிடித்துக் கொள்ளும்; ஜாக்கிரதை! ***

ஆன்மிக வினா-விடை!

மூன்றாம் பிறைக்கு அப்படி என்ன விசேஷம்?மூன்றாம் பிறையை, 'கலைநிலா' என்று குறிப்பிடுவர். 'கலை' என்றால், 'தினமும் வளர்வது' என்று பொருள். இந்த நிலவைக் கண்டால், நம்மிடம் இருக்கும் நல்லவை அனைத்தும் வளரும் என்பது ஐதீகம். செல்வம் வளரும் என்ற நம்பிக்கையுடன், கையில் காசு வைத்தபடி, மூன்றாம் பிறையை பார்க்கும் வழக்கமும் உண்டு.***வைரம் ராஜகோபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !