சந்தோஷம் என்பது...
சாரல் காற்று, 'சிலுசிலு'வென்று வீச, மலையடிவாரத்தில், இயற்கை சூழலில் அமைந்திருந்த அந்த தங்கும் விடுதியின் அறையில், குழந்தைகள் குதூகலத்துடன் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். குளிப்பதற்குத் தேவையான துணிகளை, ஒரு பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் உமா.''உமா, அப்பாவுக்கும் மறந்துடாம மாத்து துணி எடுத்து வைச்சுரு.''''எல்லாருக்கும் எடுத்து வச்சுட்டேன்ங்க; மாமா வெளியே போர்டிகோவில் இருக்காரு... கூப்பிடுங்க போகலாம். ஐந்தருவி போய் குளிச்சுட்டு, அப்புறம் மெயின் பால்ஸ் போவோம்.''வெளியே போர்டிகோவில் அமர்ந்திருந்த அப்பாவிடம் வந்தான் குமார்.''அப்பா, எல்லாரும் அருவிக்கு கிளம்பிட்டாங்க; வாங்க போகலாம்.''''நான் வரல; நீங்க போயிட்டு வாங்க.''''என்னப்பா இது, சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் செய்றீங்க. அருவியில் குளிச்சு, சந்தோஷமா, 'என்ஜாய்' செய்யலாம்ன்னு தானே குற்றாலத்துக்கு வந்தோம். இப்ப வரமாட்டேன்னு சொல்றீங்களே... உங்க வருத்தம் எனக்குப் புரியுதுப்பா. நாலு நாள் லீவு வருது, எல்லாரும் குற்றாலம் போகலாம்ன்னு சொன்னபோது, நீங்க, 'திருச்செந்தூர், கன்னியாகுமரி போய், சுவாமி தரிசனம் செய்திட்டு வருவோம்'ன்னு சொன்னீங்க. ஆனா, பசங்க தான் பிடிவாதமா, 'குற்றாலம்தான் போகணும்'ன்னு சொல்லிட்டாங்க. அடுத்த லீவுக்கு எல்லாரும் திருச்செந்தூர் போகலாம்ப்பா. இப்ப குளிக்க வாங்க,''என்றான் குமார்.''என்னை கட்டாயப்படுத்தாத குமாரு; நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கேன்.''பிடிவாதமாக அவர் மறுக்க, வேறு வழியின்றி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, உமாவும், குமாரும் ஐந்தருவிக்கு குளிக்க கிளம்பினர்.குருமூர்த்திக்கு மனதில் கோபமும், எரிச்சலும் மண்டியிட்டது. 'இந்தக் குடும்பத்திற்காக எவ்வளவு உழைச்சுருக்கேன். இப்ப இவங்க அனுபவிக்கிற ஒவ்வொரு காசும், நான் சம்பாதிச்சது; ராப்பகலாக உழைச்சு, வியர்வை சிந்தி, வியாபாரத்தை பெருக்கி, நல்லமுறையில் நடத்தி, இப்போ இவங்கிட்ட கொடுத்திருக்கேன். 'நமக்காக பாடுபட்டாரே நம்ம அப்பா... அவர இந்த வயசான காலத்தில, சந்தோஷமா வச்சுக்கணும்'ன்னு நினைச்சானா இவன்... என்னை ஒரு பொருட்டாக மதிக்காம, அவன் இஷ்டப்படி நடந்துக்குறான். நான், திருச்செந்தூர் போகலாம்ன்னு எவ்வளவு ஆசைப்பட்டுச் சொன்னேன்... காதுல வாங்குனானா... அவன் குடும்பம், குழந்தைகதான் அவனுக்குப் பெரிசு. என்னோடு வாழ்ந்த மகராசி, இதையெல்லாம் அனுபவிக்காம போய் சேர்ந்துட்டா. நான் தான் உபயோகமில்லாம, இந்த உதாசினத்த எல்லாம் சகிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்...' என்று, மனதுக்குள்ளே புலம்பினார். ''என்ன சார், தனியா உட்காந்திட்டீங்க... உங்க மகன், குடும்பத்தோடு, அருவிக்கு குளிக்க கிளம்பிப் போயிட்டாரு போலிருக்கே! நீங்க ஏன் போகல... உடம்புக்கு ஏதும் முடியலையா?'' என்று கேட்டபடி, அந்த விடுதியின் உரிமையாளர் அங்கு வர, அவரை நிமிர்ந்து பார்த்தார் குருமூர்த்தி. அவருக்கும் ஏறத்தாழ அவர் வயதுதான்.''எனக்கு போக இஷ்டமில்ல சார்; அதான் வரலன்னு சொல்லிட்டேன்,'' என்ற குருமூர்த்தி, ''உட்காருங்க சார்,'' என்று உபசரித்தார்.''சென்னையிலிருந்து தானே வந்திருக்கீங்க,'' என்று, கேட்டுக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில், அமர்ந்தார் விடுதி உரிமையாளர்.''ஆமாம் சார். டெக்ஸ்டைல் மில் வச்சு நடத்தினேன். இப்ப என் மகன் தான் வியாபாரத்தைப் பாக்கிறான். இந்த புள்ளைகள உருவாக்க நாம எப்படியெல்லாமோ கஷ்டப்படறோம். ஆனா, வயசான காலத்தில நம்மள, இவங்க, ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்ல. இதுதான் உலக நடைமுறையா இருக்கு. நம்ம காலம் மாதிரி இல்ல சார். இப்ப இருக்கிற புள்ளைங்ககிட்ட குடும்ப பாசம், பற்று கொஞ்சம் கூட இல்ல. எங்க வீட்டையே எடுத்துக்கங்க... வீட்டுக்கு பெரியவங்கிற முறையில, என் பேச்சுக்கு ஒரு மரியாத இல்ல; எல்லாம் அவங்க இஷ்டத்துக்குத் தான் நடந்துக்கிறாங்க.''மனதில் இருப்பதை, விடுதி உரிமையாளரிடம் கொட்டினார் குருமூர்த்தி.''என்ன சார் ரொம்ப விரக்தியா பேசுறீங்க. மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்; அதான் இப்படி பேசுறீங்க. உங்களுக்கு தெரியாததா, கிடைத்ததை வைத்து திருப்திப்படறதுதானே வாழ்க்கை. இதுல குறை சொல்லி என்ன ஆகப் போறது? அவ்வளவு தூரத்துல இருந்து, பேரன், பேத்தின்னு குடும்பத்தோடு குற்றாலம் வந்திருக்கீங்க. சந்தோஷமாக இருக்கிறத விட்டுட்டு, இப்படி தனிமையில உட்கார்ந்து இருக்கீங்களே... குற்றாலம் வரைக்கும் வந்துட்டு அருவியில குளிக்காம இருக்கலாமா? அவங்களோடயே போய் குளிச்சுட்டு வரலாம் இல்லையா?''''அப்படி இல்ல சார். என்னை தனியா விட்டுட்டு வர்றது பாதுகாப்பில்லைன்னு தான், குற்றாலத்துக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க. நான் திருச்செந்தூர் போகலாம்ன்னு சொன்னேன் யாரும் கேட்கல; வயசான பெரிய மனுஷன் சொல்றானே... அவன் பேச்சுக்கு மதிப்பு கொடுப்போம்ன்னு தோணியிருக்கா... எல்லாம் என் தலை விதி; என்னை விடுங்க சார். உங்களுக்கு இதுதான் சொந்ந ஊரா... நல்ல இயற்கை சூழல்ல, மலையடிவாரத்தில, அமைதியான சூழல்ல இருக்கிற உங்க விடுதிய பாக்கறதுக்கே ரொம்ப அழகா இருக்கு.''''அந்தக்காலத்தில வாங்கிப் போட்ட இடம் சார். என் மகன் தான் கட்டினான்.''''அப்படியா... உங்களுக்கு எத்தனை புள்ளைங்க?''''ரெண்டு பேர்.''''உங்க குடும்பமெல்லாம் எங்கே இருக்கு, குற்றாலத்தில தானா?''சிறிது நேரம் மவுனமாக இருந்தவர், ''என் பேத்தியையும், என்னையும் தவிர்த்து, இப்ப என் குடும்பத்துல யாருமே உயிரோடு இல்ல,'' என்று, குரல் உடைய அவர் பேச, ''அடடா... என்ன ஆச்சு சார்?'' என்று ஒரு திடுக்கிடலோடு கேட்டார் குருமூர்த்தி.''குடும்பத்தோடு, என் ரெண்டு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளோடு எல்லாரும் ஒரு வேன்ல சந்தோஷமாக மைசூருக்கு சுற்றுலா போனோம். திரும்பும் போது, வேன் ஆக்ஸிடென்ட் ஆகி, எல்லாருமே இறந்துட்டாங்க. என் மூணு வயது பேத்தியும், நானும் மட்டும் தான் உயிர் பிழைச்சோம். என் உறவுகளையெல்லாம் இழந்துட்டு, என் பேத்திக்காக நான் வாழ்ந்துட்டு இருக்கேன். பதினைந்து வருஷம் முடிஞ்சு போச்சு. பேத்தி இப்ப சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படிச்சிட்டிருக்கா. அவ படிச்சு முடிச்சதும், நல்ல பையனாகப் பார்த்து, அவளுக்கு கல்யாணம் செய்து, இந்த சொத்துகளை அவக்கிட்ட ஒப்படைக்கணும்ன்னுதான் நடைபிணமாக வாழ்ந்துட்டு இருக்கேன். சொந்தங்களோடு வாழற கொடுப்பினையை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்காரு. அதைப் புரிஞ்சுக்காம, மனகசப்பை உருவாக்கிட்டு, நீங்களே உங்கள தனிமைப்படுத்தி வாழ்ந்துட்டிருக்கீங்க. இல்லாதவங்களுக்கு தான் சார் உறவுகளோட அருமை தெரியும்.''வாழ்க்கையில மகிழ்ச்சிங்கிறது, நாம் சந்தோஷப்படுவதில் இல்ல சார். மத்தவங்கள சந்தோஷப்படுத்துறதுலதான் இருக்கு. இதை நீங்க புரிஞ்சுக்கிட்டா, உங்க வாழ்க்கை நல்லபடியா இருக்கும்,'' என்று விடுதி உரிமையாளார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,''சார், சென்னையிலிருந்து போன் வந்திருக்கு; உங்க பேத்தி பேசறாங்க,'' என்று, வேலையாள் வந்து சொல்ல, அவர் எழுந்து சென்றார்.''தாத்தா... தாத்தா... ப்ளீஸ் வாங்க தாத்தா, அருவியல குளிக்கலாம். ஐந்தருவியில சூப்பரா குளிச்சோம். அப்பா தான், தாத்தா வையும் கூட்டிக்கிட்டு மெயின் பால்சில் குளிக்கப் போகலாம்ன்னு கூட்டிட்டு வந்திட்டாரு. வாங்க தாத்தா...ஜாலியாக இருக்கும்...''பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தவர், பேரனும், பேத்தியும் தன்னை உலுக்கு வதைப் பார்த்தார்.''அப்பா கிளம்புங்கப்பா. அருவியில் தண்ணி நல்லா விழுது. குளிக்க சந்தோஷமாக இருந்துச்சு. இருந்தாலும் உங்களை விட்டுட்டு போனது மனசு கேட்கல. அதான் தாத்தாவையும் அழைச்சுக்கிட்டு மெயினருவி போகலாம்ன்னு எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டேன். ப்ளீஸ்பா... எங்களுக்காக கிளம்புங்கப்பா,'' குமார் சொல்ல, ''அம்மா உமா... என்னோட துணிமணிகளையும் எடுத்துட்டு வாம்மா. உங்களோடு சேர்ந்து, நானும் குளிச்சு சந்தோஷப்படப் போறேன்,''என்றார் குருமூர்த்தி.கோபத்தில் இருந்த அப்பா, இவ்வளவு சீக்கிரம் சம்மதம் சொல்வார் என்று எதிர்பார்க்காத குமார், மனம் மகிழ, குழந்தைகள் கைதட்டி குதூகலிக்க, உமா புன்சிரிப்புடன் உள்ளே செல்ல, அவர்கள் முகங்களில் தெரிந்த பரவசத்தைப் பார்த்து, வாழ்க்கையை புரிந்து கொண்டவராக நெகிழ்ந்து நின்றார் குருமூர்த்தி.பரிமளா ராஜேந்திரன்