உள்ளூர் செய்திகள்

வீழ்த்தியவன் வீழ்ந்தான்!

காலம் மலையை மடுவாக்கும்; குளத்தைக் குன்றாக்கும். கீழே இருப்பவன் மேலே போவான்; மேலே இருப்பவன் கீழே வருவான். ஒருவனின் வெற்றி, தோல்வி, உயர்வு, தாழ்வு கால தேவனின் கரங்களில் உள்ளது. நாம் செய்யும் நற்செயல் - பாவக் கணக்கை வைத்து, கால தேவன் போடும் கணக்கை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு ராவணனே மிகப் பெரிய உதாரணம்.உடல் பலத்திலும், இசைப் பயிற்சியிலும் சிறந்து விளங்கியவன் ராவணன். இவன், சிவனிடம் பெற்ற வரத்தால், மூவுலகிலும் தன்னை வெல்வதற்கு யாரும் இல்லை என்ற ஆணவத்தில், தேவர்களை வலிய போருக்கு அழைத்து தோற்கடித்து, தனக்கு அடிமையாக்கினான். அத்துடன், போர் வெறி அடங்காமல், பூவுலகில் இருந்த அரசர்களை நோக்கி, 'அரசர்களே... என்னுடன் போருக்கு வாருங்கள் அல்லது தோற்றுப் போனோம் என்று சொல்லுங்கள்; உங்களுக்கு உயிர் பிச்சை தருகிறேன்...' என்றான் ஆணவத்துடன்!ராவணன் பெற்ற வரத்தின் பலத்தை அறிந்த அரசர்கள், தோல்வியை ஒப்புக் கெண்டனர்.இந்நிலையில், அயோத்தி அரசன் அனரண்யனை போருக்கு அழைத்தான் ராவணன். அவனுடைய அவமதிப்பை தாங்காத அனரண்யனும் போருக்குத் தயாரானார்.கடும் போர் மூண்டது. அயோத்தி மன்னரின் சேனைகள் எல்லாம் கடலில் புகுந்த நதிகளைப் போல காணாமல் போயின. நூற்றுக்கணக்கான அம்புகளை ராவணன் மீது ஏவினார் அனரண்யன்; அனைத்தும் வீணாயின.ஆனால், ராவணன் தன் கையால், அனரண்யன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிக்க, அயோத்தி மன்னர் அங்கம் தளர்ந்து, தரையில் விழுந்தார். உடனே, ராவணன், 'அயோத்தி மன்னா... என்னே உன் அறிவின்மை... என் பலம் தெரியாமல் என்னுடன் மோதத் துணிந்தாயே...' என்று ஏளனமாக பேசினான்.கோபம் கொண்ட அனரண்யன், 'அரக்கனே... காலம் யாருக்கும் எப்போதும் சாதகமாக இருந்து விடாது. இப்போது உன் மூலம், நான் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், காலம், உன்னையும் ஒரு நாள் சாய்க்கும். என் பரம்பரையில் தசரதனுக்கு மகனாக ராமன் என்பவன் வருவான்; அவன் உன்னை அழிப்பான்...' என்று கூறி, சொர்க்கத்தை அடைந்தார். அவர் வாக்குப்படியே, ராவணன், ராமரால் அழிக்கப்பட்டான். பணம், பதவி, புகழ், திறமையை நல்வழியில் பயன்படுத்தினால், வாழ்வில் நிலைத்த அமைதி கிடைக்கும்; அதை வைத்து அடுத்தவர்களை வீழ்த்த நினைத்தால், காலம் நம்மை வீழ்த்தி விடும் என்பது, ராவணன் வாழ்க்கை உணர்த்தும் பாடம்! பி.என்.பரசுராமன்விதுர நீதி!: ஆத்மா ஒரு நதிக்கு சமம்; புண்ணியச் செயல்களே அந்நதியில் குளிப்பதற்குரிய இடமாகும். சத்தியமே அந்நதியின் நீர்ப்பெருக்கு. ஐம்புலன் கட்டுப்பாடே அந்நதியின் கரைப்பகுதி. கருணை உணர்வே, அதன் அலைகள். அதில் குளிப்பவன், தூய்மை பெற்று புண்ணியசாலியாகிறான்; ஏனெனில், ஆத்மா புனிதமானது. ஆசைகளை துறத்தலே தலை சிறந்த புண்ணியமாகும்.— என்.ஸ்ரீதரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !