மூன்றடுக்கு கோவிலில் மூலிகை லிங்கம்!
பல வகை லிங்கங்களைப் பார்த்திருப்பீர்கள். மூலிகையால் ஆன லிங்கத்தைப் பார்க்க, மூன்றடுக்குள்ள, பிரான்மலை மங்கைபாகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இந்தக் கோவில், மதுரை - பொன்னமராவதி சாலையில், 65 கி.மீ., துாரத்தில் உள்ளது.இமயமலையில், சிவன் - பார்வதி திருமணம் நடந்த போது, அகத்தியர், அந்த திருமணக்கோலத்தை தரிசித்த தலங்களில், இதுவும் ஒன்று. இம்மலையின் கீழ் அடுக்கில், அம்பிகை, குயிலமுத நாயகியுடன், கொடுங்குன்றநாதராகவும், மத்தியில், விசாலாட்சியுடன், விஸ்வநாதராகவும், மேல் பகுதியில், தேனாம்பிகையுடன், மங்கைபாகராகவும் காட்சி தருகிறார், சிவன்.வேடர் பெண்ணான, வள்ளியை மணந்ததால், திருத்தணி, வள்ளிமலை ஆகிய தலங்களில், முருகனுக்கு, தேன், தினை மாவு நைவேத்யம் செய்கின்றனர். சிவன் கோவிலான இதுவும், குறிஞ்சி நிலமான மலையில் அமைந்துள்ளதால், இந்த நிலத்திற்குரிய, இவ்வகை உணவே படைக்கப்படுகிறது.மேலடுக்கு கோவில், குடவறையாக அமைந்துள்ளது. இங்கு, மங்கைபாகர், தேனாம்பிகையுடன் இணைந்து, காட்சி தருகிறார். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தால், அவர்கள் ஒன்று சேர, இவர்களை வணங்குகின்றனர்.மங்கைபாகர் சிலை, ஒன்பது வகை மூலிகைகளின் சாறு எடுத்து செய்யப்பட்டது. எனவே, இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. பவுர்ணமியன்று புனுகு மற்றும் சாம்பிராணி தைலம் சாத்துகின்றனர். இதே சன்னிதியில் உள்ள உடையவர் லிங்கத்திற்கு, அபிஷேகம் உண்டு.கும்பாபிஷேகத்தின் போது, சுவாமி சிலைகளுக்கு அடியில், அஷ்டபந்தன மருந்து வைப்பது வழக்கம். ஆனால், இங்குள்ள சிவலிங்கத்துக்கு இதை வைப்பதில்லை.அசுரர்களை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க, முருகப்பெருமான், இங்கு இரண்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து, வழிபட்டார். இவை கொடுங்குன்றநாதர் சன்னிதி பிரகாரத்தில், சொக்கலிங்கம், ராமலிங்கம் என்ற பெயர்களில் உள்ளன. இவ்விரு லிங்கங்களுக்கும் மத்தியில் முருகன், பால ரூபத்தில் காட்சி தருகிறார்.மங்கைபாகருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை, மறுபடியும் அணிவிப்பதில்லை. ஒரேநாளில் பலமுறை வஸ்திரம் மாற்ற வேண்டி வந்தாலும், புது வஸ்திரமே அணிவிக்கப்படும்.வள்ளியை ஆட்கொள்ள, முதியவர் வேடத்தில் வந்தார், முருகன். அந்த முருகனை, சிலை வடிவில் இங்கு காணலாம்.இத்தலத்தின் விருட்சம், உறங்காப்புளி. பல நுாற்றாண்டுகள் பழமையான இம்மரம் பூக்கும், காய்க்கும்; ஆனால், பழுக்காது. காய்த்த நிலையிலேயே, புளி உதிர்ந்து விடும். இதன் இலைகள், இரவிலும் விரிந்தே இருக்கும். மங்கைபாகர் சன்னிதிக்கு மேலே ஒரு பாறையில், 'பெயரில்லா விருட்சம்' என்ற பெயரில், ஒரு செடி உள்ளது.வள்ளல் பாரி ஆண்ட இப்பகுதியில், சித்திரை மாதம், 'பாரி உற்சவம்' நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது, முல்லைக் கொடிக்கு, பாரி, தேர் கொடுத்த காட்சி அரங்கேற்றப்படும்.தி.செல்லப்பா