உள்ளூர் செய்திகள்

வீடு

''என்ன... கிரஹப்பிர வேச பத்திரிகையை எடுத்துகிட்டு, நீ மட்டும் வந்திருக்க... உன் மனைவி நளினி வரல?'' என்று, தம்பி வரதனை பார்த்து கேட்டார் ரகுபதி.வரதன் கொஞ்சம் தயங்கி, ''அவள் கிரஹப்பிர வேசத்துக்கே வருவாளான்னு சந்தேகமாக இருக்கு அண்ணா,'' என்றார்.''ஏன்... ஏன்?''''அவளுக்கு வீடு பிடிக்கல... நிறைய சொல்றாள்... எனக்கும் கொஞ்சம் அதிருப்திதான்.''''புரியும்படியாதான் சொல்லேன்...''''பில்டர் ஏமாத்திட்டாண்ணே... நம்ம வசதிக்கு கட்டச் சொன்னால், அவன் வசதிக்கு கட்டிக் கொடுத்துட்டான். அதனால, அவனோடு தகராறு வேற!''''ப்ளான் பிரகாரம்தானே கட்ட முடியும்?''''ப்ளானே தப்புண்ணா... கிழக்கு வாசல் காட்டிட்டு, வடக்கு வாசல் வச்சிட்டான். கேட்டால், இந்த மனை அமைஞ்சிருக்கும் விதத்துக்கு, வடக்கு வாசல் போட்டால் தான், சைடுல ரெண்டு ஜன்னல் வச்சு வெளிச்சம் நிறைய கிடைக்கும்ன்னான்.''அட்டாச்சுடு டாய்லெட், பாத்ரூம் போடச் சொன்னால், வீட்டுக்கு வெளியே பின்புறத்துல போட்டான். படியை முன்புறம் போடச் சொன்னால், பின்புறம் போட்டுட்டான். பூஜை அறையை பெருசாக்கி, கிச்சனை சுருக்கிட்டான். இதெல்லாம் நளினிக்கு கொஞ்சமும் பிடிக்கல. கட்டியதை இடிக்கவா முடியும்... வித்துட்டு வேற வீடு கட்டலாமான்னு கூட யோசனை!''''நம்மை போன்ற நடுத்தரவாசிகளுக்கு, வீடும், கல்யாணமும் ஒருதரம் தான். இரண்டுமே திருப்தியா அமைஞ்சால் பாக்கியம்... ஏறக்குறைய அமைஞ்சால், 'அட்ஜஸ்ட்' செய்துகிட்டு போகணும்... ஆரம்பத்திலிருந்தே அதிருப்தியாய் இருந்தால், கடைசிவரை, நிம்மதி இருக்காது. நளினிக்கு எடுத்துச் சொல்,'' என்று பத்திரிகையை வாங்கிக் கொண்டார்.அவன் போன பின், மல்லிகா கேட்டாள்:''என்னங்க... இப்படி சொல்லிட்டு போறாரு?''''மனைவிக்கு பிடிக்கலைன்னா, இவனுக்கும் பிடிக்காது. ஏதாவது சொல்லி, அவளை சமாதானப்படுத்தவே தோணாது. அந்த வீடு, நான் நினைச்ச மாதிரிதான் வந்திருக்கு... பில்டர் ஒண்ணும் ஏமாத்தலை. அந்த இடத்துக்கு எப்படி கட்டினால் சரியாக இருக்கும்ன்னு பார்த்துதான் செஞ்சிருக்கார்.''''எப்படி சொல்றீங்க?''''அந்த வீட்டுமனை அமைஞ்சிருக்கிற விதம் அப்படி. சுற்றிலும் வீடுகள். இடையில் பதுக்கி வச்சது போல, செவ்வக மனை. வாசலை தெருப்பக்கம் வச்சால், ரயில் மாதிரி <உள்ளே போகும். ரூல்ஸ் பிரகாரம், அங்கே ஜன்னல் போட முடியாது. வடக்கு வாசல், வச்சால் தான் வசதி. மாடிப்படியும் அப்படிதான். டாய்லெட், பாத்ரூம் வீட்டுக்கு தள்ளி இருக்கிறது, சவுகரியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆரோக்கியம். வீடு இப்படித்தான் அமையும்; அமைஞ்சால் தான் நல்லதுன்னு நினைச்சேன். அப்படியே அமைஞ்சிருக்கு.''''நீங்க சொல்லிட்டீங்க... ஆனால், அவங்க அதிருப்தியாய் இருக்காங்களே.''''அவங்க சொன்னபடி செய்யலைங்கற கோபம், பில்டர் மேல இருப்பதை, வீட்டின் பேரில் காட்றாங்க... ஆனால், இந்த மனோபாவம் நல்லதில்லை. விடு... பங்ஷனுக்கு என்ன அன்பளிப்பு தரலாம்ன்னு யோசி. நான் போய், யாரெல்லாம் பங்ஷனுக்கு வர்றாங்கன்னு பார்த்துட்டு வர்றேன்.''''மத்தவங்களைப் பத்தி என்ன, அவங்கவங்க வசதி பிரகாரம் வரப்போறாங்க. நாம போறதுக்கும், அவங்க வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?''''தம்பி வீடு கட்டியிருக்கிற இடம், இங்கிருந்து ஆறு கி.மீ., பஸ் வசதி அவ்வளவா கிடையாது. ஒரு வேன் ஏற்பாடு செய்தால், எல்லாரும் சவுகரியமா போய்ட்டு வரலாம்ல,'' என்றபடி எழுந்தார்.முதலில் பக்கத்து தெரு நாராயணன் வீட்டிற்கு போனார்.''வாங்க மாமா... இப்பதான் <உங்க தம்பி வந்து, பத்திரிகை வச்சுட்டு போனார்.''''வேறேதும் சொன்னானா?''''எல்லாரும் வந்திடுங்கன்னு சொல்லிட்டு போனார்.''''வேறேதும் சொன்னானா வீட்டைப் பத்தி?''''ஒண்ணும் சொல்லலையே... ஆனால், முகத்தில் உ<ற்சாகம் இல்லை.''''மனசில் இருந்தால் தானே முகத்தில் வரும்''''என்ன சொல்றீங்க?''''விவரமா பிறகு சொல்றேன்... நீங்க அவசியம் கிரஹப்பிரவேசத்துக்கு வரணும். நான் வேன் ஏற்பாடு செய்யறேன். நீங்க வந்து ஒரு உதவி செய்யணும்.''''எங்களால் என்ன ஆகப் போகுது?''''<உங்களைப் போல நாலு பேராலதான் ஆகும்.''''என்னன்னு சொல்லுங்க.''''பெருசா ஒண்ணுமில்லை... 'வீடு ரொம்ப நல்லா இருக்கு'ன்னு சொல்லணும். 'அம்சமா அமைஞ்சிருக்கு. பில்டர் யாரு... நாங்களும் இது போல கட்டலாம்ன்னு இருக்கோம்...' என்று தம்பி கிட்டயும், முக்கியமா அவன் மனைவி கிட்டயும் சொல்லணும்.''''எதுக்கு?''''என் தம்பி, அந்த வீட்ல நிம்மதியா வாழணும்; அதுக்கு. விவரமா அப்புறம் சொல்றேன்னு சொன்னேனே. நீங்க பாராட்டும் போது, இயல்பாய் இருக்கணும். ஓவர் ஆக்ஷன் இருக்கக் கூடாது. ஞாபகம் வச்சிக்குங்க...'' என்றார்.அடுத்த வீட்டுக்கு போனார். அங்கும் வேன் பிடிக்கும் விவரத்தை சொன்னார். வீடே கிளம்பி வருவதாக ஒப்புக் கொண்டது.''ஆனால், ஒரு நிபந்தனை... தம்பி வடக்கு பக்கம் வாசல் வச்சு வீடு கட்டியிருக்கான். வாஸ்து... அதைப் பற்றி, ரெண்டு வார்த்தை சிலாகிச்சு பேசணும்...''''வடக்கு வாசல் நல்லது தானே... தேக ஆரோக்கியம், புத்தி பலம், கடன் தீரும்.''''இதை மட்டும், அப்படியே அங்க வந்து சொல்லுங்க,'' என்று கேட்டுக் கொண்டார்.இன்னொரு வீட்டில் படியைப் பற்றியும், மற்றொரு வீட்டில், உள் அமைப்பு பற்றியும், வீடு அமைந்திருக்கும் ஏரியா பற்றியும், பாராட்டி சொல்லச் சொல்லி கேட்டுக் கொண்டார்.''மிக முக்கியமான விஷயம்... இதெல்லாம் நீங்களாகவே பேசினது போல இயல்பாக இருக்கணும். சொல்லி வச்ச மாதிரி தெரியக் கூடாது... எல்லாரும் ஒரே பகுதியிலிருந்து போறதால, பேசி வச்சுகிட்டு சொல்றமோன்னு சந்தேகம் வரக் கூடாது,'' என்று கேட்டுக் கொண்டார்.தொலை தூரத்தில் இருந்த உறவுகளுக்கும் வேண்டுகோள் வைத்தார்;வேனுக்கும் ஏற்பாடு செ#தார்.கிரஹகப் பிரவேசம்.சடங்குகள் நடந்தன. நளினி முகத்தில் அதிருப்தி. வரதன் கூட சம்பிரதாயத்துக்கு சிரித்தான். உறவு, நட்புகள் வரத் துவங்கின. வந்தவர்களை, கடனே என்று வீட்டை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றாள் நளினி.''வீடு சின்னதா இருந்தாலும், குங்குமச் சிமிழ் மாதிரி அழகா இருக்கு...''''பூஜை அறை கோவில் மாதிரி இருக்கு. யாரோட ஐடியா?''''வடக்கு வாசல் யோகம் தரும்... வாஸ்து பார்த்தீங்களோ?''''வீடு பினிஷிங் சூப்பரா இருக்கு... யாரு பில்டர்?''''இந்த பகுதியில் மனை கிடைக்கிறது அபூர்வம். நீங்க லக்கி. வாட் எ லவ்லி ப்ளேஸ்... இங்கே, மனை ஏதும் கிடைக்குமா, பார்க்கணும்.''''இதுவும் பிரமாதம்.. படியை ஒட்டி இடம் இருக்கு. தோட்டம் போடலாம்... பூச்செடி வைக்கலாம்...''''வீட்டுக்குள்ள வைக்காம, வெளியில கழிவறை வச்சிருக்கீங்க... நல்ல விஷயம்...'' என்றும், ''சீக்கிரம் மாடியிலும் கட்டிருங்க... வாடகைக்கு விட்டால், உ<திரி வருமானம் கிடைக்கும்...'' என்றெல்லாம் பாசிட்டிவான அபிப்ராயங்கள் காதில் விழ, தம்பதியர் மனதில் ரசாயன மாற்றம் நடந்தது.'அப்படியா சொல்றீங்க?''நல்லதுன்னு சொல்றீங்களா?''நீங்க சொல்லிதான், இது விசேஷம்ன்னு தெரியுது!''இடம் வாங்கிப் போட்டு எட்டு வருஷமாச்சு!'என்றெல்லாம், பதில் சொல்லிக்கொண்டு வந்தவர்கள், ஒரு கட்டத்தில், தங்கள் வீட்டை தாங்களே மெச்சிக் கொள்ளத் துவங்கினர்.நளினி ஒரு படி மேலே போய், ''முதலில் கிழக்கில, தெருவை பார்த்தமாதிரிதான் வாசல் வைக்க இருந்தோம்... கடைசியில, நாந்தான் இப்படி வைக்கச் சொன்னேன்,'' என்று சொல்ல ஆரம்பித்தாள்.நளினியிடம் போய், ''அம்மா... பத்திரிகை கொடுக்க வந்தபோது, வரதன் ஒரு விஷயம் சொன்னான். நானும், என்னாச்சோ ஏதாச்சோன்னு நினைச்சுகிட்டு வந்தேன். என்னை பொறுத்தவரை, இங்கே ஒரு குறையும் தெரியலை...''ஆனாலும், நீ திருப்தி படாதபோது, கட்டாயமா இங்கே வசிக்கணும்ன்னு இல்லை. நான் வேணும்ன்னா வீட்டை வாங்கிக்க ஆள் பார்க்கிறேன். ஆனால் ஒண்ணு, வித்துட்டா மறுபடி இங்கே மனை வாங்க முடியாது. இந்த வீட்டின் மதிப்பு இப்பவே பத்து லட்சம்... என்ன சொல்ற?'' என்றார் ரகுபதி.''யார் சொன்னது விக்கப் போறதாய்... வாழறதுக்குன்னு பார்த்து பார்த்து கட்டின வீடு. ஏதோ ஒரு நேரம், எதனாலயோ ஒரு சலிப்பு ஏற்பட்டால், உடனே வீட்டை வித்துட முடியுமா; வித்தால் மீண்டும் கட்ட முடியுமா? உங்க தம்பி இப்படிதான்... ஒண்ணும் இல்லாததுக்கெல்லாம் அலட்டிக்குவார். எங்கே அவர்?'' என்று தேடிக்கொண்டு போனாள் நளினி.புன்னகைத்தார் ரகுபதி.நிகழ்ச்சி முடிந்து, வேனில் திரும்பும்போது, ரகுபதி எல்லாருக்கும் பொதுவாக ஒரு கும்பிடு போட்டார்.''ரொம்ப சந்தோஷம்... என் வேண்டுகோள்படி, நல்லவிதமாய் பேசினிங்க... ஏன் அப்படி பேசச் சொன்னேன்னா... என் தம்பிக்கும், அவன் மனைவிக்கும் வீட்டின் பேரில் கொஞ்சம் அதிருப்தி... எதிர்பார்த்த மாதிரி அமையலைன்னு. இந்த நேரத்தில், கடுகளவு குறை சொன்னாலும், அவர்கள் மன நிலை மோசமாகும்.''வீட்டை வெறுப்பாங்க... வீடுங்கறது வெறும் கல், மண், சிமென்டால் ஆன ஜடமில்லை. அதற்கு உயிர் இருக்கு, உணர்ச்சி இருக்கு. நாம் எப்படி அதை அணுகறோம் என்பது முக்கியம். எடுத்தவுடனே வெறுப்பாய் பார்த்தால், வீடு அந்நியப்பட்டுப் போகும். அதை நேசிக்கணும்.''நாலு பேர் பாராட்டும் போது தான், ஒரு பொருள் மீது நமக்கு ஆர்வமும், விருப்பமும் உண்டாகும். அந்த பொருளை நேசிக்கத் தோணும். இப்போது நீங்கள் கொடுத்த பாசிட்டிவ் கமென்ட்ஸ், வீட்டின் பேரில் அவர்களுக்கிருந்த கசப்பை போக்கி விட்டது. அவர்கள் உண்மையாகவே வீட்டை நேசிக்கும் வரை, இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்,'' என்றார்.''நல்ல வேலை செய்தே ரகுபதி... ஆனாலும், வீட்டில் குறையொன்றும் தெரியலை... நல்லாவே இருந்தது!'' என்றனர்.''அந்த நம்பிக்கை அவங்களுக்கும் உண்டாகத்தான் இந்த ஏற்பாடு!'' என்றார்.வேன் கூட ஆமோதிப்பது போல் ஹாரன் அடித்தது.***மு. மணி பாரதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !