உள்ளூர் செய்திகள்

வெவசாயம் பண்ண போறேன்!

நான் பொறந்து, வளர்ந்த கிராமத்துக்கு, 25 வருஷத்துக்கு பின் வந்திருக்கேன். ஊரு நெருங்க நெருங்க என் நெஞ்சு குழி வறண்டு, 'பொசுபொசு'வென்று வயித்தெரிச்சல் தாங்க முடியல. தாயை தேடி, மகன் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கியதும், 'ஒங்கம்ம செத்துப் போயி, ஒரு மாசம் ஆகுது'ன்னு சொன்னா, எப்படி கொல நடுங்குமோ, அப்படி எங்கொல நடுங்கிப் போச்சு.நான் இந்த ஊரவுட்டு போறப்ப, ஊர சுத்தி, பச்சப் பசேல்ன்னு மரகத கம்பளம் விரிச்சாப்ல தோட்டம், தொறவு, குளம், ஏரின்னு செழிச்சு கெடந்துச்சு; அந்த செழிப்பெல்லாம் இப்ப எங்கே போச்சுன்னு தெரியல.மேற்க பாத்தா மாந்தோப்பு; தெக்க பாத்தா தென்னந்தோப்பு, வடக்கே பாத்தா பனமரத் தோப்புன்னு கண்ணுக்கு குளிர்ச்சியா, வெயில் படாம மூடிக் கெடந்த மரம், செடி, கொடியெல்லாம் காணல.ஊரவுட்டு வெளியில கால் வச்சா, வயல் வரப்பும், பம்பு செட்டுமா இருந்த பூமியில, ஆணும், பெண்ணுமா வெவசாயம் பாத்தாங்களே... அவுங்க எல்லாம் எங்கே போனாங்கன்னும் தெரியல.'இது எங்க ஊரு தானா இல்ல வேறெங்காயாவது வழி தவறி வந்துட்டேனா...' என நினைத்து, தலை சுத்திப் போச்சு.சின்ன வயசுலயே அப்பாவ இழந்த நான், எங்கம்மாவும் போய்ச் சேர்ந்த துக்கத்துல, கால் போன போக்குல போயி, கள்ள ரயில் ஏறி படுத்துக்கிட்டேன். விடிஞ்சு பாத்தா, ரயில்ல ஈ, காக்கா கூட இல்ல.பதறி, ரயில விட்டு இறங்கினா, அது தான் மெட்ராஸ்ன்னு தெரிஞ்சுது. அங்கயும் இருக்க பிடிக்காம, மனம் போன போக்குல நடந்தேன்; சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் தெரிஞ்சுது. அங்க தான், பெரிய பெரிய ரயிலெல்லாம் இருந்துச்சு. ஒரு பெட்டியில ஏறி படுத்தேன். அது, பாம்பே தாதர் எக்ஸ்பிரஸ் ரயில்ன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. எத்தன நாளோ, ஒண்ணுமே தெரியல. ரயில் நின்னுருச்சு; இறங்கினேன்.பாம்பே தாரா ஏரியா முழுக்க திருநெல்வேலி, தூத்துக்குடி மனுஷங்க தான் இருந்தாங்க. நம்மூர்ல இருந்த மாதிரியே இருந்துச்சு. பசிக்கு சோறு போட்டு, படுக்க ஒரு, 'சொப்டா'வ்ல இடமும் தந்து, ஆர்பர்ல கூலியா சேர்த்து விட்டார், கள்ளிக் கொளத்து அண்ணாச்சி.'நியாயமா சம்பாதிச்சு, காலத்த கண்ணியமா கடத்தி, கையில கணிசமா பணம் சேர்த்த பின் தான் ஊருக்கு போகணும்'ன்னு வைராக்கியமாக வாழ்ந்து, இப்ப ஊருக்கு வந்தா, இங்க இருக்கிற நிலையை பார்த்து, என் வயிறு கலங்கிப் போச்சு!வெவசாய நெலம், பயிறு பச்சன்னு எதுவுமே இல்லாம, எங்க பாத்தாலும் வீட்டு மனையா, ரியல் எஸ்டேட் காரவுக, ஊர சுடுகாடக்கியிருக்காக!எங்கே போறதுன்னு தெரியல. ஒரு காலத்துல, கால் போன போக்கில் ஊர விட்டு போன நான், இன்னிக்கு, கார் போன போக்குல, உருமாறிப் போன ஊருக்குள் போனேன்.சாலையில கார் போறப்ப, ஒரு மரத்தடியில நாற்பது, ஐம்பது பொம்பள புள்ளைங்களும், கெழவிமாரும் கூடி உக்காந்து பாண்டியாடுறதும், கேலி பேசி, சிரிச்சு விளையாடறதுமா இருந்தாங்க. பக்கத்துல மண்வெட்டிகளும், சட்டியுமா அடுக்கியிருந்துச்சு.காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கிய என்னை பார்த்து, எல்லா பொம்பளைகளும் எழுந்து நின்றாங்க. அவங்க முகங்களில், யாரோ நம்மள, 'செக்' பண்ண வர்றாங்கங்கிற பயம், பளிச்சுன்னு தெரிஞ்சது. என்னை, யாருக்கும் அடையாளம் தெரியல; எனக்கும் யாரையும் தெரியல.''ஏம்மா... எல்லாரும் இந்த மரத்தடியில வந்து உக்காந்திருக்கீங்க...'' என்று கேட்டேன்.''நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்; ஒரு நாளைக்கு, 200 ரூபா சம்பளம். பஞ்சாயத்துல தர்றாங்க,'' என்றாள், கூட்டத்தில் ஒரு பெண்.''ஓகோ... மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டமா...''''அதென்னமோ நமக்கு தெரியாதுய்யா...'' என்றாள், ஒரு கிழவி அலுப்புடன்!''ஆமா... நீங்க எல்லாம் ஏன் வேலை செய்யாம உட்கார்ந்திருக்கீங்க?''''அத ஏன் கேட்குறீங்க... செடிய நட சொன்னாங்க... நட்டோம்; மண்ண வெட்ட சொன்னாங்க; வெட்டினோம். வேலை இருந்தா தானே செய்றதுக்கு... ரோட்டு கரையில கெடக்கற மண்ண, எத்தனை முறை தான் அங்க போட்டு, இங்க போட்டு தாறுமாறாக்குறது... அதான், 'ரெஸ்ட்' எடுக்குறோம். மவராசமாரு சும்மா தரப்புடாதுன்னு வேலைன்னு பேரு வச்சி, ஒவகாரம் செய்றாரு...'' என்று, ஒரு பொட்டப் புள்ள வெள்ளந்தியா சொன்னது.'வயக்காட்லயும், வெளங்காட்லயும் வேல செஞ்சவுங்க, இன்னைக்கு சும்மாயிருந்து சம்பளம் வாங்குறாகங்குறது தெரிஞ்சுது. வேல வெட்டி செய்ற பொம்பளைங்கள வேலை செய்யறத நிறுத்தி, மகாத்மா காந்திங்கிற பேர்ல சம்பளம் தருது அரசாங்கம். வேலை இல்லாதவங்களே இருக்க கூடாதுங்கற நல்ல எண்ணத்துல தான் இது நடக்குது; ஆனா, இனிமே வெவசாய வேல எப்படி நடக்கும்... சேத்துல இறங்கி, கஷ்டப்பட்டு வேலை பாத்த பொம்பளைங்கல்லாம், மரத்தடியில உக்காந்து, சாவகாசமா நேரத்த போக்கி பழகினதுக்கப்புறம், பழையபடி வெயில்லயும், வரப்புலயும் வேலை செய்ய வருவாங்களா... அதான், வெவசாய நிலமெல்லாம் பிளாட்டா மாறுதோ...' என நினைத்தபடி, நாலா பக்கமும் பார்த்தேன்.இனிமே, இனிக்க இனிக்க பயினி கெடைக்காது; பச்சப் பசேல்ன்னு காய்கறியோ, கீரையோ கிடைக்காதோங்கற பயம் வந்து, மனசு வெறுமையா போச்சு.ஊருக்குள்ள வந்ததும் எல்லா தெருவையும் பாத்தேன்; புதுசு புதுசா, பத்து பதினைஞ்சு பெரிய வீடுகள்; மத்தபடி, வேற ஒண்ணும் பெரிசா மாறல. ஓலைக்குடிசையும், கூர வீடும், ஓட்டுக் கூரையுமா தான் இருந்தது.எங்க வீடு இருந்த இடத்துக்குப் போனேன்; நல்ல வேளை... எங்க வீடு அழிஞ்சு போகல. என் மாமா, அம்மாவோட தம்பி பத்திரமா பாத்துகிட்டு, அடுத்த வீட்லயே இருந்தாரு.என்னை பார்த்ததும், மாமாவுக்கும், அவர் மனைவிக்கும் அடையாளம் தெரியல; என் மாமனுக்கு, 55 வயசு இருக்கும்; சின்ன வயசுல பாத்த நெனைவில அடையாளம் தெரிஞ்சுகிட்டு, ''மாமா...'' என்றேன்.''அடேய்... நீ மாசிலாமணி தானே...''''ஆமா மாமா... சுகமாருக்கியளா...''என்னை கட்டி பிடிச்சு, கண்ணீர் விட்டார்.'எங்கக்கா மவன் வந்துட்டான்...' என, வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தார்.வர்றவுங்க, போறவுங்ககிட்டல்லாம் என்னை பத்தியே பேசினார். மாமனை பார்த்ததும், மனசெல்லாம் சந்தோஷம்.''எங்கக்கா சாவும் போது, 'தம்பி... எம்மவனுக்கு இனிமே, நீ தான் தாயி, தகப்பன் எல்லாம்... எங்க வீடு, சொத்து பத்து எல்லாத்தையும் நீ பார்த்துக்க... உனக்கு வேணும்ங்கிறது எடுத்துக்கிட்டு, மீதிய அவனுக்கு மனசாரக் குடு'ன்னு சொல்லிட்டுச் செத்தா. உன்ன தான், நிறுத்தி வெக்க முடியில; உன் வீடு, சொத்து பத்து எல்லாத்தையும் பத்திரமா வச்சிருக்கேன். வாங்கிக்கய்யா... இங்க வெவசாயமும் செத்துப் போச்சு; வெவசாயியும் கெட்டுப் போயிட்டான். நில, புலமெல்லாம் ஏக்கரு, 10 லட்சம், 20 லட்ச ரூபாய்ன்னு நல்ல விலைக்கு போகுது; நிலத்த கையில வச்சுப்பியோ, விப்பியோ உன் விருப்பம்...'' என்றார்.எங்கம்மா எங்கிட்ட எப்படி அன்பா, அக்கறையா பேசுவாளோ அப்படி இருந்தது மாமா பேசியது. ஆனா, அவர் சொன்ன விஷயம் தான் எனக்கு புரியல. அதனால, ''அதென்ன மாமா... 'வெவசயம் செத்துப் போச்சு; வெவசாயி கெட்டுப் போயிட்டான்'னு சொல்றீங்க...'' என்று கேட்டேன்.''மக்கள காப்பாத்த நினைச்ச அரசாங்கம், வெவசாயம் பெருகினா தான் மத்ததெல்லாம் விளங்கும்ன்னு நெனைக்காம போச்சுய்யா...'' என்றார், வேதனையுடன்!''அப்படி என்ன மாமா நடக்குது இங்கே...''''முன்னெல்லாம் நாட்டுல, ஏழை, எளியவுங்க இருந்தாங்க; இப்ப, அவங்களோட பசி போக்க, அரசாங்கமே ஓசியில அரிசி; 25 ரூவாய்க்கு மசாலா சாமான் பொட்டலம், சீனி, மண்ணெண்ண, பருப்பு, மாவுன்னு எல்லாத்தையும் குறைஞ்ச விலைக்கு ரேஷன்ல குடுக்குறாங்க...'' என்றார்.''நல்லது தானே... இதுக்கும், வெவசாயம் செத்து போனதுக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டேன்.''வெளியில, 42 ரூபாய்க்கு விக்குது அரிசி; ஆனா, ரேஷன்ல ஓசியில குடுக்கறாங்க. இப்படி, சாப்பாட்டுக்கு அரிசி; பொங்கல், தீவாளிக்கு வேட்டி, சேலை; குழந்தை பொறந்தா, கல்யாணமானா இலசவ பணம், முதியோர் பென்ஷன், குடிசை வீட்டை, கான்கிரீட் வீடா கட்டி குடுக்குறாங்க...''''அடேயப்பா... இதெல்லாம் நல்லது தானே மாமா,''''நல்லது தான்... கஷ்டப்பட்டவன் கஷ்டம் போனது வாஸ்தவம் தான்; ஆனா, அவன் பிச்சக்காரனா மாறியாச்சுங்கறது அவனுக்கு தான் தெரியல... உனக்குமா புரியல,'' என்றார்.யோசிச்சு பார்த்தப் போது, அவர் சொல்வது வாஸ்தவம் தான்னு தோணிச்சு.'கஷ்டப்பட்டவன் வயித்துக்கு பாடுபட்டான்; உழைச்சு, தன்மானமா வாழ்ந்தான். எல்லாமே ஓசியில கெடைக்குதுன்னதும், பாடுபடாம, படுத்துக்கிட்டே வாழணும்ன்னு நெனச்சு, பிச்சக்காரன் மாதிரி என்ன இலவசமா கிடைக்கும்ன்னு அரசாங்கத்துக்கிட்ட கை ஏந்த ஆரம்பிச்சுட்டான்...' என நினைத்த போது, அவனது நிலையை நினைத்து, மனசு வலிச்சது.''வெவசாயக் கூலியா வேலை பாத்த பொம்பளைங்கள, நூறு நாள் வேலைக்கு கூட்டிட்டி போயி, மறைமுகமா வெவசாயத்துக்கு ஆளில்லாம பாழடிக்கறது அரசாங்கத்துக்கு தெரியல. இலவசங்களால் வயிறு நிறையுறதால சோம்பேறியாகி, வெவசாய வேலைக்கு இவங்க வர்றதில்லை. அப்படியே போனாலும் நானூறு, ஐந்நூறுன்னு தினக்கூலி கேக்குறாங்க. ஏன்னா, கூலிக்கு ஆளில்ல; அவ்ளோ ரூபாய் கூலி குடுத்தா வெவசாயி விளங்குவானா... ஒரு தேங்காய் வித்தா, ஒரு டீ கூட குடிக்க முடியாது; எல்லா விலையும் ஏறிப் போச்சு. விளைய வைக்கற வெவசாயி, தன் பொருளுக்கு, தானே விலை வைக்க முடியல; வியாபாரி தான் விலை வச்சு, லாபம் பாக்குறான். வெவசாயி வெட்டி, கொத்தி, ஒரம் வச்சு, மருந்தடிச்சி, கடைசியில, அவனே மருந்து குடிச்சு, சாக தானே செய்யணும்...'' மாமன் பேசப் பேச, 'நாடு நல்லது செய்ய நினைக்கிறப்பவே, அதுல என்னென்ன கேடுல்லாம் வரும்ன்னு யோசிக்க மறந்து போச்சே...' என்று வேதனையாக இருந்தது.''அரசாங்கம் வெவசாயத்துக்கு அதத் தர்றேன், இதத் தர்றேன்னு சொல்லுது... எல்லாம் சரி... வேலைக்கு யாரு ஆள் குடுப்பா... விளைஞ்ச பயிருக்கு யாரு விலை குடுப்பா... விளைச்சலுக்கு கையில காசுன்னு என்ன நிச்சயம்... கண்ண திறந்துகிட்டே காச கரியாக்கி, கேசடுப்பு, 'டிவி' அது, இதுன்னு குடுக்கறதுக்கு பதிலா, விளைஞ்ச பயிருக்கும், விலையக் கூட்டி வச்சு, அரசாங்கமே வாங்கினா என்ன... சாராயம் விக்க, சம்பளம் குடுத்து ஆள் சேக்கற அரசாங்கம், விளைச்சலை வாங்கி, விக்கறதுக்கு ஆள் போட்டு, கடை வெச்சா ஆவாதா... ஒண்ணு நிச்சயம்...'' என்றார் மாமா.''என்ன மாமா?''''இன்னைக்கு சொந்த நாட்டுக்குள்ள ஏழைகளை பிச்சகாரங்களாக்குற அரசாங்கம், நாளைக்கு, விளைச்சலுக்கு நிலமில்லாம, வெவசாயமில்லாம, தானியத்துக்கு வெளிநாட்டுக்காரங்கிட்ட பிச்ச எடுத்து தான் ஆகணும்...'' என்றார், ஆவேசமாக!மாமாவின் பேச்சைக் கேட்டதிலிருந்து, ஒரு மாதம், அதே யோசனையோடு இருந்தேன்.''என்னய்யா... மும்பைக்கு எப்ப போறே?'' என்று கேட்டார், மாமா.சற்றும் யோசிக்காமல், ''இங்கயே இருக்கப் போறேன் மாமா...'' என்றேன்.''இருந்து...''''வெவசாயம் செய்ய போறேன்...''''ஒரு பய வேலைக்கு வர மாட்டான்... வெவசாயம் செய்தவனெல்லாம் விட்டுட்டான்; நீ கிழிச்சிருவியாக்கும்...'' என்றார் கோபத்துடன்!''நாளைக்கு நம்ம நாடே வெளிநாட்டுகிட்ட அரிசி, பருப்புக்கு கையேந்தி, பிச்சைக்கு நின்னாலும், நான் நிக்கமாட்டேன். என் நிலத்துல, நான் ஒத்தையில உழைச்சு, என் சாப்பாட்டுக்கு, எல்லாத்தையும் நானே விளைய வைப்பேன்,'' என்றேன், உறுதியுடன்!தாமரை செந்தூர் பாண்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !