நான் சுவாசிக்கும் சிவாஜி! (1) - ஒய்.ஜி. மகேந்திரா
'சிவாஜியை பற்றி நான் ஏன் எழுத வேண்டும்? அவருக்கும், எனக்கும் என்ன உறவு? உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், சிவாஜி என்கிட்டே, ஒரு எதிர்மறையான பாதிப்பை தான் ஏற்படுத்தியிருக்கிறார்!'- சிவாஜியோட பெரிய ரசிகன், சிவாஜி வெறியன் என்று, தன்னை சொல்லிக் கொள்ளும், ஒய்.ஜி.மகேந்திராவா இப்படி சொல்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!அவரே காரணத்தையும் சொல்கிறார்:ஒரு நடிகன், நல்ல ரசிகனாக இருக்கும் போது தான், முழுமை பெறுகிறான். எல்லாரையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பை பார்த்த பின், வேறு யாரையும் என்னால் ரசிக்க முடியவில்லை. அப்படியே ரசித்தாலும், அவர்களுக்குள், சிவாஜியின் வடிவத்தையே பார்க்கிறேன். அனுமானுக்கு எதைப் பார்த்தாலும், ராமன் தெரிகிற மாதிரி. பாரதியார், 'எங்கெங்கு காணினும் சக்தியடா...' என்று பாடினார். என்னைப் பொறுத்த வரை, எங்கெங்கு காணினும் சிவாஜியடா!'சிவாஜியை, கடவுளாக நினைக்கிறீர்களா ...' என்று, என்னை கேட்டால், 'ஆமாம்' என்று தான் சொல்வேன். நம்மை கடந்து, நமக்குள் இருப்பவர் தானே கடவுள். சிவாஜி நடிப்பினால், நம் எல்லாரையும் கடந்தும், ஒரு பாதிப்பை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார். எனக்கு இவர், நடிப்பின் கடவுள். ஒரு பக்தன் என்ற முறையில், என்னுடைய காணிக்கையே, இக்கட்டுரைத் தொடர்.ஜூலை, 21, 2001க்கு பின், (சிவாஜி அமரரான நாள்) உயிருடன் வாழ எனக்கு பிராண வாயு எவ்வளவு முக்கியமோ, அதே போல், சிவாஜியின் நினைவுகளும் முக்கியம்.ஆண்டு, மாதம், தேதி வரிசைப்படி, நடந்த நிகழ்வுகளை, இந்த தொடரில் நான் சொல்லப் போவதில்லை. காரணம், மகா விஷ்ணுவின் தசாவதாரம் பற்றி பேசுகிறோம். ராமனைப் பற்றி பேசுகையிலே, கிருஷ்ணனைப் பற்றியும், நரசிம்ம அவதாரம் குறித்தும் பேசுவோம். சிவாஜி நடிப்பினால், கடவுள் விஷ்ணுவை விட, நிறைய அவதாரம் எடுத்திருக்கிறார். எந்த இடத்தில் பொருத்தமாக இருக்கிறதோ, அங்கே, அதை பற்றி சொல்கிறேன்.கடந்த, 2001க்கு பின், நான் மேடை ஏற்றிய, என் எல்லா நாடகங்களிலும், சிவாஜி பற்றிய தகவல் நிச்சயம் இருக்கும். 2012ல் அரங்கேறிய என், 'நாடகம்' என்ற நாடகத்தில், (நாடகத்தின் தலைப்பே 'நாடகம்' தான்) 1975ம் ஆண்டில், நாடகத்தின் கதை, நடப்பதாக, ஒரு காட்சி வரும்.நாடக நடிகரான நான், சிவாஜியோடு, டெலிபோனில் பேசுவதாக, ஒரு காட்சி. அதில்,'நீங்க, நேரிடையாக என் கூட பேசறது, எனக்கு என்னமோ, இமயத்தை தொட்டு வந்த மாதிரி, ஒரு பீலிங் வருகிறது...' என்பேன்.எதிர்முனையில் சிவாஜி குரல் ஒலிக்கும்... 'ரொம்ப ஐஸ் வைக்காதேடா, நீயும் நடிகன், நானும் நடிகன். நமக்கெல்லாம், பீச்சிலே காந்தி மாதிரி, சிலை வைக்கவா போறாங்க?' என்று, கேட்பார்.'ஏன் சார்... யார் கண்டாங்க... எதிர்காலத்திலே, காந்திக்கு, எதிரிலேயே உங்களுக்கு சிலை வைச்சாலும் வைப்பாங்க...' என்று, நான் பதில் சொல்வேன்.இதைச் சொன்னதும், தியேட்டரில் பயங்கர கை தட்டல் மற்றும் ஆரவாரம் எழும்.நாடகத்தை பார்க்க வந்திருந்த, சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், அவரது மனைவி கண்ணம்மா, சிவாஜியின் மகள்கள் தேன்மொழி, சாந்தி போன்றோர், அதை கேட்டு அழுது விட்டனர். நடிகர் சின்னி ஜெயந்த், சிவாஜி மாதிரியே தத்ரூபமாக பேசியிருப்பார்.அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும், அவரது பிறந்த நாளை ஒட்டி, இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். சிவாஜி நடித்த படங்களிலிருந்து, சிவாஜி பாடியிருக்கும் பாடல்களை மட்டும், 'ஒன்லி சிவாஜி சாங்ஸ்' என்று பாடுவோம். சம்பந்தப்பட்ட படங்களின் காட்சிகளை, அப்போது திரையிடுவோம்.ரசிகர்கள், மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போய் விடுவர். 'ஒய்.ஜி.மெலடி மேக்கர்ஸ்' என்ற குழு நடத்தும், இந்நிகழ்ச்சியில், நான் டிரம்ஸ் வாசிப்பேன். அந்த விழா மேடையில், நடிகர் திலகம் சிவாஜியுடன் நடித்த, சமகால கலைஞர்களை அழைத்து, பாராட்டி, கவுரவித்து, 'சிவாஜி அவார்ட் ஆப் எக்சலன்ஸ்' என்ற, விருது வழங்குவதை, வழக்கமாக கொண்டுள்ளோம்.விருது வாங்கியவர்களில், வி.கே.ராமசாமி, நாகேஷ், கே.பாலாஜி, டைரக்டர்கள் ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபு, வைஜெயந்திமாலா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, எஸ்.வரலட்சுமி, எம்.சரோஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.எல்.ராகவன், எம்.என்.ராஜம், ராஜசுலோசனா, சச்சு, மனோரமா, காக்கா ராதாகிருஷ்ணன், ஜேசுதாஸ், சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, லட்சுமி, பத்மினி என, பெரிய பட்டியல் இன்றும் தொடர்கிறது.இந்த விருது பெற்ற அனைத்து கலைஞர்களும், நடிகர் திலகத்தின் நடிப்பை ரசித்து, வியந்தவர்கள். அவரோடு இணைந்து பணியாற்றியதை, வாழ்க்கையில் பெரும் பாக்கியமாக கருதி, பெரிதும் மகிழ்பவர்கள்.இது குறித்து, ஓரிரு மெய் சிலிர்க்கும் அனுபவங்களையும், நான் உங்களோடு, பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.'சிவாஜி அவார்டு ஆப் எக்சலன்ஸ்' விருது வழங்குவது என்று, 2002-ம் ஆண்டு, முடிவு செய்த போது, எனக்கு, முதலில் நினைவுக்கு வந்த பெயர் வி.கே.ராமசாமி தான். காரணம், சிவாஜிக்கும், அவருக்கும் உள்ள நெருக்கத்தை, நேரில், ஷூட்டிங்கில் பல முறை பார்த்திருக்கிறேன். பேச்சுத் துணை தேவைப்படும் போது, 'ராமு இங்கே வா...' என்று, உரிமையோடு அழைத்துப் பேசுவார். வி.கே.ராமசாமிக்கும், சிவாஜி என்றால் உயிர். 'சிவாஜி விருது' பெற்ற ஒரு சில மாதங்களுக்கு பின், டிச.,24, 2002ல் வி.கே.ராமசாமி காலமானார். இறுதி மரியாதை செலுத்த, என் மனைவி சுதாவும், நானும் சென்றிருந்த போது, இந்த சிவாஜி விருதை, அவரது உடலுக்கு அருகே வைத்திருந்தனர். அவரது மனைவி ரமணி அம்மாள் தழுதழுத்த குரலில், 'அவர், கடந்த ஐந்து மாதமாக, தினம் ஒரு முறையாவது, நீங்க கொடுத்த இந்த விருதை பற்றியும், உங்களை பற்றியும், முக்கியமாக, சிவாஜியோட அவரது அனுபவங்களையும் பேசிக் கொண்டே இருப்பார்...' என்று சொன்னார்.*ராம்குமாரின் மகன் துஷ்யந்தின், திருமண நிச்சயதார்த்தத்திற்கு, எப்படியோ எனக்கு அழைப்பிதழ், விட்டுப்போய்விட்டது. நிகழ்ச்சி நடந்த பின், நண்பர் ஒருவர், 'நீங்க ஏன் வரவில்லை' என்று கேட்டதும் தான், எனக்கு விஷயம் தெரிந்தது. உரிமையாக, ராம்குமாருக்கு அலைபேசி மூலம், குறுந்தகவல் அனுப்பினேன். பொதுவாக, ராம்குமார், எதற்கும் உடனே பதில் சொல்லும் பழக்கம் உடையவர். ஆனால், என்னுடைய, எஸ்.எம்.எஸ்.,க்கு பதிலும் வரவில்லை; போன் அழைப்பும் வரவில்லை. எங்களின் பொது நண்பரான, டாக்டர் சுதா, 'நான் ஊரில் இருக்கிறேனா, எங்கே இருப்பேன்' என்று, விவரம் கேட்டார். அவருக்கு பதில் சொன்னேன்.சிறிது நேரத்தில் ராம்குமார், அவரது மனைவி கண்ணம்மா மற்றும் டாக்டர் சுதா மூவரும், என்னுடைய ஆபீசுக்கு வந்துவிட்டனர். எனக்கோ, இன்ப அதிர்ச்சி! 'சாரி மஹி... (அப்படித்தான் ராம்குமார் என்னை அழைப்பார்) எப்படியோ தவறு நடந்து போச்சு. இவ்வளவு நெருக்கமாக இருக்கிற, உன்னை நிகழ்ச்சிக்கு கூப்பிட மறந்தது தப்பு தான். இதை போனிலேயே சொல்லியிருக்கலாம். ஆனாலும், நேரிலே வந்து விளக்குவது தான் சரி என்று நினைத்தேன். அதுதான் வந்து விட்டோம்...' என்றார். பத்திரிகை வராததை குறிப்பிட்டு, அவர்களை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று, எனக்கு வருத்தமாயிற்று. சிவாஜி குடும்பத்தினர் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு, நான் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?***—தொடரும்.- எஸ். ரஜத்