உள்ளூர் செய்திகள்

வாங்கிய கடனை திருப்பி கொடுக்கா விட்டால் ... வைரம் ராஜகோபால்

கதாகாலட்சேபம், பூஜை, ஜபம் இவைகள் நடக்குமிடங்களுக்கு நீங்கள் போவதுண்டா? இந்த இடங்களுக்கு போனால், பாதியில் எழுந்து வரக் கூடாது; அப்படி வருவது பாவம். தயிருக்காக பாலைத் தோய்க்கிறோம்; அதாவது, உரை குத்துகிறோம். தயிர் தோய்வதற்குள் அதை கலைப்பதும் பாவம். கர்ப்பத்தை கலைப்பதும், சிசுஹத்தி செய்த பாவம் என்றுள்ளது.  இதற்கு என்ன பரிகாரம்? ராமாயணக் கதையை பிரதி தினம் தொடர்ந்து கேட்க வேண்டும். தெய்வ பூஜை நடக்குமிடத்தில் அது முடியும் வரை பொறுமையாக உட்கார்ந்திருக்க வேண்டும். தலையால் சுமக்க முடிந்த அளவு தானியத்தை சுமந்து போய், நாற்சந்தியில் வைத்து விட்டு, திரும்பி பாராமல் வந்து விட வேண்டும். இது தான் பரிகாரம். சிலருக்கு குழந்தை பிறந்து, பிறந்து இறந்து போகிறதே... இது என்ன பாவம்? பூர்வ ஜென்மங்களில் நாம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமலே ஏமாற்றி விட்டு ஓடி வந்திருந்தால், குழந்தையாக பிறந்து, எண்ணை, பால், தயிர், மருந்து போன்றவைகளால் கடனை வசூல் செய்து கொண்டு இறந்து விடுகின்றனர். இப்படி எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறானோ, அத்தனை பேரும் தொடர்ந்து ஒவ்வொருவராக வந்து போய்க் கொண்டேயிருப்பர். 'இது ஏதோ ஜென்மாந்திர கடன் வந்து சேர்ந்திருக்கு!' என்று சொல்வதில்லையா... அது தான் இது! இந்த பாவம் தொலைய என்ன செய்ய வேண்டும்? தங்கத்தாலோ, வெள்ளியாலோ பூணூல் செய்து, பிரதி பவுர்ணமியில் தானம் செய்தால், இந்த பாவம் தொலையும். பிறந்த குழந்தையும் தீர்க்காயுசு உள்ளதாக இருக்கும். சரி, எத்தனை பவுர்ணமிக்கு இப்படி தானம் செய்வது என்று கேள்வி எழலாம். எந்த விரதமும் ஒரு வருட காலம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படி செய்தால் பாவம் அகலுமாம். பாவத்தை செய்வானேன்... பரிகாரத்தை தேடுவானேன். ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. வாழ்க்கை என்பது அப்படிப்பட்டது. ஏனோ, தானோ என்றிருக்கக் கூடாது. நம் நன்மைக்காகத் தான் பல தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டாமா? நல்லவர்களை நாடுங்கள்... நல்லவைகளை தெரிந்து கொள்ளுங்கள்.***ஆன்மிக வினா-விடை!இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய வஸ்திரங்கள் எவை?சிவன், திருமாலுக்கு தூய வெண்மை நிறமுடைய பட்டாடை. அம்பாளுக்கு சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிற புடவைகளைச் சூட்டி வழிபட வேண்டும். நாட்டில் தவறாமல் மழை பெய்து, செழிப்பு வளர,  இறைவனுக்கு ஆடை அணிவிப்பது அவசியம்.  ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !