உள்ளூர் செய்திகள்

குரங்கின் கையில்

இனிமையும், கொடுமையும், நல்லவையும், தீயவையும் இரண்டற கலந்த இவ்வுலகில், அறவழியை துறந்து, குறுக்கு வழியில் முன்னேறுபவரைப் பார்த்து, 'நல்லவர்களுக்குத் தான் கடவுள் சோதனை தருவார்...' என்று, நம்மில் அனேகர் புலம்புவர்; ஆனால், உண்மை அதுவல்ல!தீயவழியை தேர்ந்தெடுப் போருக்கு கிடைக்கும் பணம், பதவி, புகழ் மூன்றும் கடிவாளம் இல்லாத குதிரையை போன்றது. அவை எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அத்தனை சீக்கிரத்தில் குப்புற தள்ளி விடும். ஆனால், பிறருக்கு தீங்கிழைக்காத, மென்மையான உள்ளம் கொண்ட அறவழியில் நடப்போருக்கு கிடைக்கும் சிறு உதவி, சின்ன சின்ன இன்பங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவை; அவை என்றும் நிலைத்து நிற்கும் என்பதற்கு உதாரணம் இக்கதை: ஆங்கிலேயரின் ஆதிக்கம் இந்தியாவில் தலை தூக்கி இருந்த சமயம், மேவார் நாட்டில், சியார்வா எனும் கிராமத்தில், அந்தணர்கள் மட்டுமே வசித்து வந்தனர். அவர்கள் வேத விற்பன்னர்களாக இருந்ததோடு மட்டுமன்றி, அன்பு, ஈகை, கருணை போன்ற குணங்களையும் கொண்டிருந்தனர்.அவர்களின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்ட மேவார் மன்னர் மஹா ராணா சஜ்ஜன் சிங், அக்கிராமத்தை அவர்களுக்கே உரிமை ஆக்கியதோடு, அவர்களுக்கு வரி கிடையாது, ஆண்டுதோறும், 1,210 ரூபாய் மானியமாக அரசு தரும் என்றும் கூறினார்.வாக்களித்தபடியே, தன் சந்ததிகளும் நடக்க வேண்டும் என்று நினைத்த மன்னன், அதை, தாமிர பட்டயத்தில் பதிந்து வைத்தார்.அவர் காலத்திற்குப் பின், அந்த தாமிர பட்டயம், எங்கு போயிற்று என்று தெரியவில்லை. அவருக்கு அடுத்து வந்த பதஹ்சிங் என்பவர், அந்தக் கிராமத்திற்குச் செய்து வந்த அரசு உதவியை நிறுத்தியதோடு, வரியும் தொடர்ந்து கட்ட வேண்டும் என, உத்தரவு போட்டு விட்டார்.வரி கட்ட வழி இல்லாமல் தவித்த, அந்த ஏழை அந்தணர்கள், அப்போது அதிகாரியாக இருந்த, கலோன் கிலியட் என்ற ஆங்கிலேயரிடம் முறையிட்டனர்; விசாரணைக்கும் ஏற்பாடானது.உதயப்பூர் ஏரிக்கரையில், ஒரு பெரிய மரத்தடியில் அதிகாரி அமர்ந்திருக்க, ஒரு பக்கம் சியார்வா கிராம அந்தணர்களும், மற்றொரு பக்கம் பதஹ்சிங்கும் அமர்ந்திருந்தார். விசாரணை துவங்கியது.ராணா தாமிரப்பட்டயம் எழுதிக்கொடுத்ததையும், அது காணாமல் போய் விட்ட விவரத்தையும் அந்தணர்கள் கூறினர். 'எந்த ஒரு ஆதாரமும் இன்றி, நீங்கள் உரிமை கொண்டாடுவதை எப்படி ஏற்க முடியும்?' என்று கூறினார் ஆங்கிலேய அதிகாரி.இதனால், மன வேதனைப்பட்ட அந்தணர் ஒருவர், 'தெய்வமே... நாங்கள் சத்தியம் தவறவில்லை என்பது உண்மையானால், அந்தத் தாமிரப் பட்டயம், எங்களுக்குக் கிடைக்க அருள் செய்...' என, வேண்டினார்.ஆங்கிலேய அதிகாரி, தன் தீர்ப்பை வாசிக்கப் போகும் தருணத்தில், மரத்திலிருந்து, ஒரு குரங்கு, 'சர சர'வென, இறங்கி, அவர்கள் முன் குதித்து, வேகமாய் ஓடி ஏரிக்குள் மூழ்கியது. ஒரு சில நிமிடங்களில், அக்குரங்கு வெளிப்பட்ட போது, அதன் கையில் தாமிரப் பத்திரம் இருந்தது.அப்பத்திரத்தை, அதிகாரி முன் வைத்து விட்டு, மரத்தில் ஏறிக் கொண்டது குரங்கு. அதை எடுத்துப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் திகைத்து நின்றனர். அது, ராணா எழுதிக் கொடுத்த தாமிரப் பட்டயம். அந்தணர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு முடிந்தது.இறைவன் நல்லவர்களை ஒரு போதும் கைவிட மாட்டான். இதைத்தான், 'இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது; இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது' என்று கூறினர் நம் முன்னோர். இதை, அனைவரும் உணர்ந்து கொண்டாலே, 'நம்மால் தான் அனைத்தும் நடக்கிறது' என்ற ஆணவம் மறைத்து விடும்.பி.என்.பரசுராமன்விதுர நீதி!: பொறாமை உடையவர், வெறுப்பு நிறைந்தவர், எதிலும் திருப்தியற்றவர், எதற்கும் சிடுசிடுப்பவர், எதையும் சந்தேகப்படுபவர், பிறரைச் சுரண்டி வாழ்பவர், இந்த ஆறு வகையான மனிதர்களும், ஒரு போதும், மனநிம்மதியுடன் வாழ மாட்டார்கள்.— என்.ஸ்ரீதரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !