எட்டு மாதத்தில் இது தேவையா?
இப்போதெல்லாம், பெண்கள், கர்ப்பமடைந்த முதல் மாதத்திலேயே, 'கடினமான வேலைகளை செய்யக் கூடாது. தண்ணீர் குடம் தூக்க கூடாது. முழு ஓய்வு எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் ஆலோசனை கூறுவது, வழக்கமாகி விட்டது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த, 35 வயதான லீ ஆன் எலிசன், என்ற பெண், 'இது போன்ற அறிவுரைகளை எல்லாம், தூக்கி குப்பையில் போடுங்கள்...' என்கிறார். இவர் தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனால், பளு தூக்கும் போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு சமமாக, எடை தூக்கி பயிற்சி செய்வதுடன், கடினமான உடற்பயிற்சிகளையும் செய்கிறார்.' இப்படி செய்வதால், வயிற்றில் இருக்கும் பாப்பாவுக்கு, ஏதாவது ஆகி விடாதா?' என, கவலையுடன் கேட்பவர்களை, முறைத்துப் பார்க்கிறார். 'அதெல்லாம், ஒன்றும் ஆகாது. இரண்டு ஆண்டுகளாக, இந்த பயிற்சிகளை செய்து வருகிறேன்...' என்று கூறி, தான், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை, இணையதளங்களிலும் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில், இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.- ஜோல்னா பையன்.