சம்சார பந்தத்தில் இருந்து விடுபட முடியுமா?
மனிதர்கள் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, முக்தி பெற வேண்டும் என்பதுதான் மகான்களின் வாக்கு. இது, எல்லாருக்கும் சாத்தியமா என்பது கேள்வி! ஒரு மரம் இருக்கிறது. அதில், ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது; அந்த மாடு மரத்தைச் சுற்றி, சுற்றி தான் வர முடியும்; அது வேறு எங்கும் இஷ்டம் போல் ஓடியாடி திரிய முடியாது.அதேபோல் மனிதனும், சம்சாரம் என்னும் மரத்தில், பந்த பாசம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறான். மனிதனாகிய பசு, சம்சாரம் என்ற மரத்திலிருந்து விடுபட வேண்டுமானால் பந்தபாசம் என்ற கயிற்றை அறுத்து விட வேண்டும். வைராக்கியம் என்ற கத்தியால் பந்தபாசம் என்ற கயிற்றை அறுத்து விட வேண்டும். அப்படி செய்து விட்டால், சம்சாரம் என்ற மரத்திலிருந்து விடுபட்டு, பக்தி மார்க் கத்தைத் தேடிப் போக முடியும். ஆனால், சம்சாரம் என்பதை சுலபமாக விட்டுவிட முடிவதில்லை. எல்லாருமே சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு விட முடியுமா? முடியாது!அதாவது, இவனை பந்தபாசம் என்ற கயிறு கட்டிப்போட்டுள்ளது. எல்லாருமே சம்சாரத்தை விட்டுவிட்டு சன்னியாசியாகி விட முடியாது. குடும்பத்தையும் விட்டு விட வேண்டியதில்லை. அதில் இருந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக பந்த பாசங்களை குறைத்து, பக்தியில் ஈடுபட்டு, பக்தி மார்க்கத்துக்குப் போகலாம்.இதற்குதான் வைராக்கியம் வேண்டும். வீட்டையும், சம்சாரத்தையும் விட்டு விட்டு சன்னியாசியாகி தேசாந்திரம் போவது ரொம்பவும் சிரமமானது. வீட்டில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு, 'நான் சன்னியாசியாகி, எங்கேயாவது போய் விடுகிறேன்...' என்பான்.ஆனால், போக மாட்டான். தெருக்கோடி வரை போய், திரும்பி விடுவான். காரணம், அவனிடம் வைராக்கியம் இல்லை. வைராக்கியம் என்ற கத்தி இல்லாதபோது, பந்தபாசம் என்ற கயிற்றை வெட்ட முடியாது. பந்தபாசம் உள்ளவரையில் மனிதன் அதற்கு ஆட்பட்டு, சம்சாரத்திலேயே உழன்று கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படியே இருந்தால் முக்தி எப்படி கிடைக்கும்? பந்தபாசங்களிலிருந்து விடுபட வேண்டும்; முடியுமா? ***ஆன்மிக வினா-விடை!வேலைக்கு போகும் பெண்கள், கோவிலுக்கு எந்த நேரம் செல்வது நல்லது?கோவில் வழிபாட்டுக்கு அதிகாலையிலும், மாலை வேளைகளிலும் செல்வதே முறையானது; உகந்தது.***வைரம் ராஜகோபால்