உள்ளூர் செய்திகள்

கலைவாணர் என்.எஸ்.கே (2)

நாகர்கோவிலிலிருந்து நான்கு சிறுவர்களை அழைத்து வந்தார், டி.கே.எஸ்., சகோதரர்களின் மாமாவான செல்லப்பிள்ளை. அவர்களில் ஒருவன், சுறுசுறுப்பாக இருந்தான். பேச்சில் வெடிப்பும், துடிப்பும் இருந்தது. கனமான, கம்பீரமான சாரீரமும், வாலிப வயதில் வருகிற மகரக்கட்டு என்கிற தொண்டைக்கட்டு நீங்கி, சாரீரம், 'கிண்'ணென்று ஒலித்தது.'உன் பெயரென்ன?' என்று அந்தப் பையனைக் கேட்டனர்.'என்.எஸ்.கிருஷ்ணன்...' கணீரென்று பதில் வந்தது.மற்ற பையன்களோடு கிருஷ்ணனை உட்கார வைத்தார், டி.கே.சண்முகம். நாடகக் கம்பெனியின் கணபதி தோத்திரப் பாடலான, 'மூலமந்திர மோன நற்பொருளே...' எனும் சங்கரதாஸ் சுவாமிகளின் பாடலை, ஆறு முறை சொல்லிக் கொடுத்தவர், தண்ணீர் பருக எழுந்து சென்றார். திரும்பி வந்த போது, அப்பாடலை, மற்ற பையன்களுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்த கிருஷ்ணனை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.வியப்போடு, 'இந்தப் பாட்டு உனக்கு ஏற்கனவே தெரியுமா...' என்று கேட்டார், சண்முகம்.'உங்க நாடகக் கம்பெனி நாகர்கோவிலில் இருந்த போது, நான் அடிக்கடி அங்கு வந்திருக்கேன்; அப்போதெல்லாம், இந்தப் பாட்டை, பால நடிகர்கள் பாடுவதை கேட்டிருக்கேன். அது என் மனசில பதிஞ்சுடுச்சு...' என்று, பணிவோடு கூறினார் என்.எஸ்.கிருஷ்ணன்.நாடக வாத்தியார் சண்முகத்துக்கு, பெருமகிழ்ச்சி. உடனே, 'இனி நீயே அந்த பாட்டை, மற்ற பையன்களுக்கும் சொல்லிக் கொடு...' என்று தம் பொறுப்பை, விரும்பி ஒப்படைத்தார்.நாடகத்தில் நடிக்க வந்த கிருஷ்ணனுக்கு, எடுத்த எடுப்பில் வாத்தியார் வேலை கிடைத்தது மட்டுமல்ல, டி.கே.சண்முகத்தின் இதயத்திலும் இடம் கிடைத்தது.அத்துடன், கம்பெனியில் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே, ரசிகர்களின் அன்பை, அமோகமாக பெற்றார் கிருஷ்ணன். மனோகரா நாடகத்தில், அப்போது, வசந்தன் என்ற அசட்டுக் கோமாளி வேடம் போட்டு வந்தவர், எம்.ஆர்.சாமிநாதன். அவர் தான், அக்கம்பெனியின் முக்கிய நகைச்சுவை நடிகர். கதை அமைப்பின்படி, வசந்தன் வேடதாரியான சாமிநாதன், ஒரு காட்சியில், பெட்டிக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும்.அந்நாடகத்தில், கிருஷ்ணனுக்கு, அமிர்தகேசரி எனும் வைத்தியர் வேடம் அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட காட்சியில், வைத்திய வேடதாரி கிருஷ்ணன், வசந்தனுக்கு பயந்து, அதே பெட்டிக்குள் புகுந்து விடுவார். தம் பெட்டியிலேயே வலிய வந்து அகப்பட்டுக் கொண்ட அமிர்தகேசரியான கிருஷ்ணனை அடிப்பார், சாமிநாதன். இதைக் கண்ட ரசிகர்கள், அது நாடகம் என எண்ணாமல் உண்மையாகவே அடிப்பதாக நினைத்து, 'நகைச்சுவை காட்சிகளில், அருமையாக நடிக்கும் புதிய பையனை, எப்படி சாமிநாதன் அடிக்கலாம்...' என, ஆத்திரப்பட்டு, எழுந்து நின்று கத்தினர். தொடர்ந்து நாடகம் நடத்த முடியாத அளவுக்கு, அவர்களுடைய கூக்குரல்கள் கேட்க, அடிபட்ட கிருஷ்ணன், மேடையில் தோன்றி, 'எனக்கும், சாமிநாதனுக்கும் எவ்விதமான விரோதமும் இல்லை; அவர், என் நெருங்கிய நண்பர். காட்சி அமைப்பின்படி, அவரிடம், நான் அடிபட வேண்டும்; அவர் அடித்தது, உண்மையான அடியல்ல...' என, விளக்கம் சொன்ன பிறகே, தொடர்ந்து, மனோகரா நாடகம் நடந்து முடிந்தது.மக்களின் கோபத்திலிருந்து, அன்று கிருஷ்ணனின் சமாதானத்தால் தான் காப்பாற்றப்பட்டார் சாமிநாதன். அந்த நாளிலேயே, சக நடிகர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நல்லிதயம், கிருஷ்ணனுக்கு இருந்ததை, இச்சம்பவம் எடுத்துக் காட்டியது.நாகர்கோவிலில் நடந்த மற்றுமொரு சம்பவம்... டி.கே.எஸ்., சகோதரர்களின், கோவலன் நாடகம், அங்கு நடந்தது. தங்கள் ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன், நாடக நடிகராகி, புகழ் பெற்று வருவதில், ஒழுகினசேரி மக்களுக்கு பெருமிதம். அதனால், தங்கள் அன்புப் பரிசாக, கிருஷ்ணனுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க முன் வந்தனர்.பரிசளிப்பு விழாவுக்கு தலைமை வகிக்க, சதாவதானம் ஷேக்கு தம்பி பாவலர் என்பவரை, ஏற்பாடு செய்திருந்தனர். அவர், தமிழில் பெரும் புலமை பெற்றவர்; ஆழ்ந்த ஆராய்ச்சியாளர். அன்று, கோவலன் நாடகத்தில், பாண்டியன் வேடத்தில் நடித்தார், கிருஷ்ணன். இடைவேளையின்போது, மேடை ஏறிய பாவலர், நாடக கதை அமைப்பை, கடுமையாக தாக்கி பேசினார். கோவலன் கதை, சிலப்பதிகார வரலாற்றை ஒட்டி அமைக்கப்படவில்லை என்று கர்ஜித்தார்.அவரது கண்டன பேச்சைக் கேட்டு, பரிசளிப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் கதி கலங்கினர். 'பதக்கத்தை கிருஷ்ணனுக்கு பரிசளிப்பாரோ அல்லது பரிசளிக்காமலேயே சென்று விடுவாரோ...' என்று கவலைப்பட்டனர்.கோவலன் நாடக கதையை பற்றி பேசிய பாவலர், சிறிது நேரம் அமைதி கொண்டார். பின், 'ஆனால், இதில், பாண்டியனாக நடித்த சிறுவன் கிருஷ்ணன், பாத்திரம் உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்தான்; அது தான் எனக்கு ஆறுதலளிக்கிறது. அவனுக்கு, இப்பதக்கத்தை, ஒழுகினசேரி மக்களின் சார்பில், மகிழ்ச்சியோடு பரிசளிக்கிறேன்; அவன் எதிர்காலத்தில், கலைவாணர் ஆவான்...' என்று பேசி முடித்து, கிருஷ்ணனுக்கு பதக்கத்தை வழங்கினார் பாவலர்.'அப்பாடா... நானாவது தப்பி பிழைத்தேனே...' என்று சொல்லி, பாவலர் தந்த பரிசை பெற்று, திரைக்கு பின்னால், 'ஜம்'மென்று நடந்து சென்றார் கிருஷ்ணன்.பாவலர் அன்று சொன்ன வாக்கு பலித்தது; கிருஷ்ணன், கலைவாணர் ஆனார்!டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடக கம்பெனியில் சேர்ந்த போது, கலைவாணருக்கு வயது, 16; சங்கீதத்தில் போதிய ஞானமும், எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும், அபாரமான ஞாபகசக்தியும் அவரிடம் இருந்தன.தாளம் தவறாமல், நாடக பாடல்களை பாடுவார்; சில நிரடலான பல்லவிகளை கூட, பிழை இல்லாமல் கற்று, நற்பெயர் எடுப்பார்; வாய்ப்பாட்டைத் தவிர, தாள வாத்தியங்களையும் வாசிக்க, அந்த வயதிலேயே கற்றுக் கொண்டார். மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியங்களையும் வாசிப்பார்.எனவே, அதுவரை, நாடக கம்பெனி வாத்தியாராகவும், சிறு வேடங்கள் போடுகிறவராகவும் இருந்து வந்த கலைவாணரிடம், அன்பும், தனி ஈடுபாடும் கொண்டார் டி.கே.சண்முகம். அதன் காரணமாக, நாடகங்களில் இடம் பெறும் அத்தனை பாடல்களயும், கலைவாணருக்கு கற்று கொடுத்து, நகைச்சுவை நடிப்பு குறித்தும் பயிற்சியளித்தார்.கலைவாணர் எல்லாத் துறைகளிலும் சகலகலா வல்லவராக விளங்கி வந்த போதும், நாடகங்களில் சீனியர் நடிகரான எம்.ஆர்.சாமிநாதனுக்கே, முக்கிய நகைச்சுவை வேடங்கள் அளிக்கப்பட்டன. ஒரு சமயம், டி.கே.எஸ்., நாடக கம்பெனி காரைக்குடியில் முகாமிட்டிருந்த போது, நாள்தோறும், மனோகரா நாடகம், நடந்து வந்தது. ஒரு நாள், திடீரென காணாமல் போய்விட்டார், சாமிநாதன். இதுபோல், அவர் அடிக்கடி சென்று விடுவதும், இரண்டு நாட்கள் எங்காவது சுற்றி விட்டு, மீண்டும் நாடகக் கம்பெனிக்கு திரும்புவதும் வழக்கம். அன்று, சாமிநாதன் காணாமல் போக, டி.கே.எஸ்., சகோதரர்களில் மூத்தவரான டி.கே.சங்கரனுக்கு, இச்செய்தி எட்டியது. அவர் ஆச்சரியப்படவில்லை; அதற்கு பதிலாக வருத்தமும், சினமும் அடைந்து, 'இன்று இரவு, மனோகரா நாடகத்தில், யார் வசந்தன் வேடம் போடுவது...' என்று, கவலையடைந்தார்.அருகில் இருந்த டி.கே.சண்முகம், 'கவலைப்படாதீர்கள் அண்ணா... அதற்கேற்ற ஒரு நடிகன், நம்மிடம் இருக்கிறான்; தயார் செய்து வைத்திருக்கிறேன்...' என்றார்.'யார்...' என்று ஆவலோடு கேட்டார், டி.கே.சங்கரன். 'நம்ப கிருஷ்ணன் தான்!' என்றார், சண்முகம்.முதன் முறையாக, மனோகரா நாடகத்தில், முக்கிய நகைச்சுவை நடிகராக நடித்தார் கலைவாணர். அவர் வேடமேற்று நடித்த வசந்தன் கதாபாத்திரம், குறையின்றி இருந்தது.அன்று முதல், டி.கே.எஸ்., சகோதரர்களின் மற்ற நாடகங்களிலும் முக்கிய நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார், கலைவாணர்.சில வாரங்கள் கழித்து, திரும்பி வந்த சாமிநாதனுக்கு, தம்முடைய நகைச்சுவை இடம் பறி போனது தெரிந்தது; அதற்காக, அவர் பதறவில்லை. மாறாக, 'நம் கிருஷ்ணன் தானே, பதவியேற்றம் பெற்றுள்ளார்...' என்று, தம்மைத் தாமே தேற்றிக் கொண்டார்.அதனால், ஏற்கனவே, கிருஷ்ணன் போட்ட வைத்தியர் வேடத்தை, சாமிநாதன் ஏற்று நடிக்கும்படி ஆயிற்று. அத்துடன், மற்றொரு ஆறுதலும் அவருக்கு ஏற்பட்டது. இனிமேல், நாம் திடீரென காணாமல் போனாலும், தம்மை பற்றி கம்பெனியில் யாரும் அவ்வளவாக கவலைப்பட மாட்டார்கள் என்பது தான் அது!— தொடரும்.நன்றி: வ.உ.சி., நூலகம்பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.மா. பாலசுப்ரமணியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !