உள்ளூர் செய்திகள்

கர்லா கட்டை புஜங்கள்!

கடுமையான உடற்பயிற்சிகளை செய்து, உடம்பை இரும்பு போல் உறுதியாக வைத்திருக்கும் பலரை பார்த்திருப்போம். ஆனால், எகிப்து நாட்டை சேர்ந்த, 24 வயதான, முஸ்தபா இஸ்மாயில், உடல் கட்டை பேணுவதில், வித்தியாசமாக எதையாவது செய்து பார்க்க விரும்பினார். கைகளில் உள்ள புஜங்களை பெரியதாக்கி, சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, பிரத்யேகமான உடற்பயிற்சிகளை செய்தார். துவக்கத்தில், சில பிரச்னை ஏற்பட்டாலும், ஆண்டுகள் உருண்டோடியதும், அவரது கனவு, சாத்தியமானது.பத்தாண்டுகள் கடும் முயற்சிக்குப் பின், முஸ்தபாவின் புஜங்கள், கர்லா கட்டையை விட, பெரியதாகி விட்டன. தற்போது, அவரது புஜங்களின் சுற்றளவு என்ன தெரியுமா? 31 அங்குலம். கிட்டத்தட்ட, அவரது இடுப்பு அளவும், புஜங்களின் அளவும் ஒன்றாக உள்ளன. கதாயுதம் போன்ற, அவரது புஜங்களை பார்ப்போர், ஒரு நொடி ஸ்தம்பித்து விடுகின்றனர். 'இது எப்படி சாத்தியமானது. இதற்காக, மருந்துகள் ஏதாவது சாப்பீட்டீர்களா?' என, அவரிடம் கேட்டால், 'அதெல்லாம் ஒன்றும் இல்லை. கடுமையான உடற்பயிற்சியும், உணவு முறையாலும் தான், என் கனவு நிறைவேறியது. தினமும், ஒன்றரை கிலோ சிக்கன், அரை கிலோ மீன், ஏழு லிட்டர் தண்ணீர், இதுதவிர, வழக்கமான உணவுகள் என, சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன்...' என்றார். தற்போது, உலகிலேயே, மிகப் பெரிய புஜங்களை உடையவர் என்ற, சாதனைக்காக கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !