காசை கரியாக்கிடுவீர் - எல். முருகராஜ்
காசை கரியாக்காதீங்கன்னு சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம்... இது என்ன புதுசா... காசை கரியாக்குங்கன்னு சொல்றீங்களேன்னு பார்க்கிறீங்களா...வாங்க சொல்றோம்.எப்போதும் வெயில் அடிக்கும்...எப்போதாவது மழை பெய்யும்...அப்படி ஒரு காய்ந்த பூமி —இதுதான் சிவகாசி.இங்கே அடிக்கும் வெயிலுக்கு எதையும் விளைவிக்க முடியாது என்ற சூழ்நிலையில், இந்த வெயிலை பயன்படுத்தி, பட்டாசை விளை விப்போம் என்று இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் சிலர் நினைத்ததன் விளைவு, இன்று சிவகாசியை குட்டி ஜப்பான் என்று சொல்லுமளவிற்கு உயர்த்தியுள்ளது.இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில், 90 சதவீதம் சிவகாசியில்தான் தயாராகிறது. எவ்வளவு நாகரிகம் வந்தாலும், வளர்ந்தாலும் பெரியவர்களின் சந்தோஷம் என்பது குழந்தைகளை சார்ந்தே இருக்கிறது. குழந்தைகளின் சந்தோஷம் என்பது, பட்டாசை சார்ந்தே இருக்கிறது. தீபாவளிக்கு அவர்களின் முதல் தேவை பட்டாசுதான்; மற்றவை எல்லாம் பிறகுதான். தீபாவளி அன்று, மக்கள் வெடிக்கும் பட்டாசுகளை தயாரிக்க, சிவகாசியில் ஆண்டு முழுவதும் உழைக்கின்றனர். இரண்டு லட்சம் குடும்பங்கள் இந்த வறண்ட பூமியில் கவுரவமாக பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்படி ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்தாலும், பட்டாசு தேவையை சமாளிக்க முடியாமல்தான் திணறுகிறது சிவகாசி. காரணம், வடமாநிலங்களில் பட்டாசு மீது கொண்டுள்ள காதல்தான். ஒவ்வொருவரும் வீட்டிற்கு வாங்கும் பட்டாசை இங்கே நாம் ஒரு சிறிய கிராமத்திற்கே கொடுத்து விடலாம். அந்த அளவிற்கு போட்டி போட்டு வாங்குவர். சரி... நம் மார்கெட்தான் கெட்டியாக இருக்கிறதே... அப்புறம் ஏன் மெனக்கெடணும் என்று நினைக்காமல், இந்த வருடம் புதிதாக ஏதாவது அறிமுகம் செய்வோம் என்று ஆராய்ந்து, புதுப்புது ரகங்களை தயாரித்து மக்களின் மனம் கவர்கின்றனர். காசு கொடுத்து வாங்கும் பட்டாசு வெடித்த பிறகு கரியாகத்தான் போகிறது என்றாலும், அந்த கரிக்கு பின்னால் இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த தீபாவளிக்கு நீங்கள், உங்களது காசை கரியாக்கலாம்தானே! ***